Published : 05 Nov 2023 04:15 PM
Last Updated : 05 Nov 2023 04:15 PM
சென்னை: சென்னையில் ஒரு காலத்தில், 800 தண்ணீர் தேங்கும் தாழ்வான பகுதிகள் இருந்தன. தற்போது அவை படிப்படியாகக் குறைந்து 37 இடங்களில் மட்டுமே தண்ணீர் தேங்குகிறது என்று சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ், பெருநகர சென்னை மாநகராட்சி, ராயபுரம் மண்டலத்துக்குட்பட்ட பிரகாசம் சாலையில் ரூ.5.55 கோடி மதிப்பீட்டில் 1.11 கி.மீ. நீளத்தில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள மழைநீர் வடிகால்வாயினை சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன், இன்று (நவ.5) ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "தமிழக முதல்வர், சென்னையின் மழை நிலவரம் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைப் பணிகள் குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார். அதிகாரிகள் தரப்பில் இருந்து கொடுக்கப்படும் தகவல்கள் மட்டுமின்றி, பத்திரிகை மற்றும் ஊடகங்களில் சுட்டிக்காட்டப்படும் செய்திகள் குறித்தும் விசாரித்து வருகிறார்.
தற்போது வரை தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இனி நாம் எதிர்பாராத அளவு மழையும் வரலாம். அதுபோன்ற சூழலை சமாளிக்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அந்த நேரத்தில் தேவைப்படும் பம்புசெட் உள்ளிட்ட உபகரணங்கள் தயார் நிலையில் உள்ளன.
சென்னையில் ஒரு காலத்தில், 800 தண்ணீர் தேங்கும் தாழ்வான பகுதிகள் இருந்தன. தற்போது அது படிப்படியாக குறைந்து 37 இடங்கள் மட்டுமே உள்ளன. மழை வெள்ள பாதிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் தொழில்நுட்ப ரீதியாகவும் தயார் நிலையில் உள்ளோம். பொது சுகாதாரத்துறை சார்ந்த அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.
டெங்கு காய்ச்சல் மட்டுமின்றி, ப்ஃளு காய்ச்சல், சுவாசப் பிரச்சினைகள், வயிற்றுப்போக்கு மற்றும் தோல் சம்பந்தமான நோய்கள் பரவாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எங்காவது நோய்ப் பரவல் அதிகமாக இருந்தால், சிறப்பு முகாம்கள் சென்னை மாநகராட்சி சார்பில் நடத்த ஏற்பாடு செய்யப்படும். தேவையான மருந்துகள் உள்ளிட்டவை போதுமான அளவு கையிருப்பில் உள்ளன" என்று அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT