Published : 05 Nov 2023 03:44 PM
Last Updated : 05 Nov 2023 03:44 PM
ஆண்டிபட்டி: வைகை அணையின் நீர்மட்டம் 66 அடியாக உயர்ந்ததால் இன்று (ஞாயிறு) அதிகாலை முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. வைகை அணைக்கான நீர்வரத்து 3.5 மடங்காக அதிகரித்துள்ளதால் 24 மணி நேர தீவிர கண்காணிப்பில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். வரும் 10-ம் தேதி பாசனத்துக்காக நீர் திறக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தேனி மாவட்டத்தில் கோடைமழை மற்றும் தென்மேற்கு பருவமழை போதிய அளவு பெய்யவில்லை. இதனால் சில மாதங்களாக வைகை அணைக்கு நீர்வரத்து குறைவாகவே இருந்தது. ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் முதல்போகத்துக்கும், செப்டம்பரில் 2-ம் போக சாகுபடிக்கும் அணையில் இருந்து நீர் திறக்கப்படுவது வழக்கம். ஆனால் நீர்மட்டம் உயராததால் பாசனத்துக்கு நீர் திறக்க முடியாத நிலை ஏற்பட்டது. இருப்பினும் மதுரை, தேனி, சேடபட்டி, ஆண்டிபட்டி குடிநீர் திட்டங்களுக்காக விநாடிக்கு 69 கனஅடிநீர் மட்டும் தொடர்ந்து திறந்து விடப்பட்டது.
இந்நிலையில் கடந்த சில வாரங்களாக நீர்பிடிப்புப் பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இதனால் மூலவைகை, முல்லைப் பெரியாறு உள்ளிட்ட அணையின் பிரதான நீராதாரங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மேலும் மழைக்காலங்களில் மட்டும் நீரோட்டம் இருக்கும் பாம்பாறு, வரட்டாறு, கொட்டக்குடி, சுருளியாறு, வராகநதி உள்ளிட்ட ஆறுகளிலும் நீர்வரத்து தொடங்கியது. இதனால் வைகை அணைக்கு நீர்வரத்து வெகுவாய் அதிகரித்தது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு 49 அடியாக இருந்த நீர்மட்டம் மெல்ல உயரத் தொடங்கியது. இந்நிலையில் இன்று அதிகாலை 3 மணிக்கு நீர்மட்டம் 66.01 அடியை (மொத்த உயரம் 71) எட்டியது.
இதனைத் தொடர்ந்த முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிக்கப்பட்டது. இதன்படி தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களின் கரையோரத்தில் வசிப்பவர்கள் பாதுகாப்பாக இருக்கும்படி நீர்வளத்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர். தேனி மாவட்டத்தைப் பொறுத்தளவில் இன்னும் சில தினங்களுக்கு கனமழை தொடரும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் நேற்று விநாடிக்கு 885 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று 3 ஆயிரத்து 177 கனஅடியாக அதிகரித்தது. குறைவான நீரே வெளியேற்றப்பட்டு வருவதாலும், மழையும், நீர்வரத்தும் அதிகரித்து கொண்டே இருப்பதாலும் விரைவில் நீர்மட்டம் முழுக்கொள்ளவை எட்டும் நிலை உள்ளது.
ஆகவே அதிகாரிகள் 24 மணிநேரமும் நீர்வரத்து அளவீடு குறித்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். நீர்மட்டம் 68.5 அடியை எட்டியதும் இரண்டாம் கட்ட அபாய எச்சரிக்கையும், 69 அடியில் 3-ம் கட்ட எச்சரிக்கையும் அறிவிக்கப்பட உள்ளது.
இந்நிலையில் மதுரை மாவட்டம் மேலூர், பேரணை, கள்ளந்திரி பகுதி பாசனத்துக்காக வரும் 10-ம் தேதி தண்ணீர் திறக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இதன் மூலம் 45ஆயிரத்து 41 ஏக்கர் விளைநிலங்கள் பயன்பெற உள்ளன. ஐந்து மாவட்டங்களின் பாசன மற்றும் குடிநீர் ஆதாரமாக உள்ள வைகை அணையில் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால் அப்பகுதி விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT