Published : 05 Nov 2023 07:43 AM
Last Updated : 05 Nov 2023 07:43 AM
ராமநாதபுரம்: ராமேசுவரம் பாம்பனில் ரூ.535 கோடியில் அமைக்கப்பட்டு வரும் புதிய ரயில் பாலத்தின் பணிகள் 92 சதவீதம் நிறைவடைந்துள்ள நிலையில், இந்தப் பாலத்தை வரும் டிசம்பர் மாதம் பிரதமர் மோடி திறந்துவைப்பார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஆன்மிகத் தலமான ராமேசுவரத்துக்கு ஆண்டுதோறும் ஒரு கோடி பேர் வந்து செல்கின்றனர். ராமேசுவரம் தீவை, பிரதான நிலப் பகுதியுடன் இணைக்கும் வகையில் பாம்பன் ரயில் பாலம் அமைந்துள்ளது.
1914-ல் ரயில் போக்குவரத்து தொடங்கப்பட்ட பழைய பாம்பன் ரயில் பாலத்தின் நடுவே கப்பல்கள் செல்லும் வகையில், ஜெர்மன் பொறியாளர் ஷெசர்ஸ் என்பவரால் அமைக்கப்பட்டுள்ள தூக்குப் பாலம், கப்பல்கள் செல்லும்போது 2 பகுதிகளாக மேலே விரிந்து வழிவிடும்.
நூறு ஆண்டுகளைக் கடந்து செயல்பட்ட இந்தப் பாலத்தில் 2022-ல் அடிக்கடி பழுது ஏற்பட்டு, மாதக்கணக்கில் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால் கடந்த ஓராண்டுக்கும் மேலாக ராமேசுவரம் ரயில்கள் அனைத்தும் மண்டபம் வரை மட்டுமே இயக்கப்படுகின்றன.
இந்நிலையில், ரூ.535 கோடியில் பாம்பனில் புதிய ரயில் பாலம் கட்டுவதற்கு பிரதமர் மோடி 2019-ல் அடிக்கல் நாட்டினார். கட்டுமானப் பணிகள் 2020-ல் தொடங்கினாலும், கரோனா ஊரடங்கால் பணிகளில் தாமதம் ஏற்பட்டது. கடந்த 2 மாதங்களாக பணிகள் துரிதப்படுத்தப்பட்டு, தற்போதுநிறைவு பெறும் நிலையில் உள்ளன.
மண்டபத்திலிருந்து பாம்பன் வரை 2.07 கி.மீ. நீளம் கொண்ட இந்தப் பாலத்தின் நடுவே அமையும் செங்குத்து தூக்குப் பாலம், ஆசியாவிலேயே கடல் பகுதியில் அமையும் முதல் பாலமாகும். செங்குத்து தூக்குப் பாலம் 72.1 மீட்டர் நீளம், 3 மீட்டர் உயரத்தில், 500 டன் எடையில் அமைக்கப்படுகிறது. தூக்குப் பாலத்தை தாங்கும் இரும்புத் தூண்கள் 35 மீட்டர் உயரத்தில், 600 டன் எடையில் அமைக்கப்படுகின்றன.
இந்த பாதையில் 50 கி.மீ. வேகத்துக்கு அதிகமாக காற்று வீசினால், ரயில் செல்ல தடை விதிக்கும் தானியங்கி சிக்னல், நவீன உணர் கருவிகள் பொருத்தப்படுகின்றன. தூக்குப் பாலம் 17 மீட்டர் செங்குத்தாக மேலே தூக்கியதும், கப்பல்கள், பெரிய மீன்பிடிப் படகுகள் புதிய ரயில் பாலத்தைக் கடந்து செல்லும்.
காரைக்குடி மத்திய மின் வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் பரிந்துரையில், புதிய தூக்குப் பாலத்தில் 50 ஆண்டுகளானாலும் துருப்பிடிக்காத பெயின்ட் அடிக்கப்பட உள்ளது. பாலத்தில் இரண்டு வழி தண்டவாளங்கள் மற்றும் மின்சார ரயில் இன்ஜின்கள் செல்லும் வசதி ஏற்படுத்தப்படுகிறது. இதற்காக கடலுக்குள் 333 தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதன் மேல் 99 ஸ்டீல் கர்டர்கள் பொருத்தப்பட்டு, அதன் மேல் தண்டவாளங்கள் அமைக்கப்படுகின்றன.
முதல்கட்டமாக தற்போது ஒரு வழித்தட தண்டவாளங்கள் அமைக்கும் பணிநடைபெறுகிறது. எதிர்காலத்தில் இருவழித் தடங்கள் அமைக்கப்படும். தற்போது 1.5 கி.மீ. நீளம் பாலப் பணிகள் முடிவடைந்துவிட்டன. பாம்பன் பகுதியில் மீதமுள்ள 500 மீட்டர் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அதேபோல, செங்குத்து தூக்குப் பாலம் அமைக்கும் பணிகளும் வேகமாக நடைபெற்று வருகின்றன.
மொத்தத்தில் 92 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளன. டிசம்பருக்குள் அனைத்து பணிகளையும் நிறைவு செய்யும் வகையில், பணிகள் வேகமாக நடைபெற்று வருவதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
புதிய ரயில் பாலத்தை திறந்துவைக்க பிரதமர் மோடி வரும் டிசம்பரில் ராமேசுவரம் வர உள்ளதாக பாஜகவினருக்கு கட்சி மேலிடத்திலிருந்து தகவல் வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, திறப்பு விழா முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசித்து வருவதாக கட்சியினர் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT