Published : 05 Nov 2023 07:57 AM
Last Updated : 05 Nov 2023 07:57 AM

அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் 2-வது நாளாக வருமான வரி சோதனை

சென்னை/திருவண்ணாமலை/கரூர்/கோவை: அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் 2-வது நாளாக நேற்றும் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு, கல்வி, தொழில் நிறுவனங்கள் மூலம் ஈட்டும் வருவாய்க்கு முறையான கணக்கு காட்டாமல் வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாகப் புகார்கள் எழுந்தன. அதனடிப்படையில், சென்னை, திருவண்ணாமலை, கோவை, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில், அவருக்குச் சொந்தமான இடங்கள், நெருக்கமானவர்கள், ஒப்பந்ததாரர்களின் வீடுகளில் வருமான வரி அதிகாரிகள் நேற்று முன்தினம் சோதனை மேற்கொண்டனர்.

இந்நிலையில், திருவண்ணாமலையில் அமைச்சரின் வீடு, கல்வி நிறுவனங்கள், அறக்கட்டளை அலுவலகம், கிரானைட் குவாரி, நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்ததாரரான அருணை கன்ஸ்ட்ரக்சன் உரிமையாளர் வெங்கட் என்பவரது வீடு மற்றும் அலுவலகம், அமைச்சரின் மகன் கம்பன் வீடு உள்ளிட்ட 6-க்கும் மேற்பட்ட இடங்களில் 2-வது நாளாக நேற்று சோதனை நடைபெற்றது.

சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள நெடுஞ்சாலைத் துறை இல்லம், ஒப்பந்ததாரர்கள் வீடு, காசா கிராண்ட், அப்பாசாமி ரியல் எஸ்டேட் நிறுவனம் தொடர்புடைய இடங்கள், ஒப்பந்ததாரர்களின் வீடுகள் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்டஇடங்களில் சோதனை நடைபெற்றது.

கரூர் செங்குந்தபுரத்தில் உள்ள எ.வ.வேலுவின் உதவியாளர் சுரேஷ் வீடு, காந்திபுரத்தில் உள்ள நிதி நிறுவனம், திமுக முன்னாள் எம்எல்ஏ வாசுகியின் சகோதரி பத்மா வீடு, தோட்டக்குறிச்சி முன்னாள்பேரூராட்சித் தலைவர் சக்திவேல் வீடு ஆகியவற்றிலும் சோதனை நடத்தப்பட்டது.

இதில், பல்வேறு டிஜிட்டல் தரவுகள், வங்கிப் பணப் பரிமாற்றம், கோப்புகள் ஆகியவற்றைக் கைப்பற்றிய அதிகாரிகள், அமைச்சர் எ.வ.வேலு, அவரது மகன் கம்பன் மற்றும் நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்ததாரர் வெங்கட் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை நஞ்சுண்டாபுரத்தில் உள்ள பார்சன் குடியிருப்பு வளாகத்தைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் ஜெயக்குமாரின் வீடு, அவர்களது மகன் ராமுக்குச் சொந்தமான உணவு மற்றும் கட்டுமான நிறுவனம், சவுரிபாளையத்தில் உள்ளகட்டுமான அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடைபெற்றது.

அப்பாசாமி ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் கிடைத்த ஆவணங்களின் அடிப்படையில், திரைப்படத் தயாரிப்பாளர் அபிராமி ராமநாதனின் வீடு மற்றும் அவரது அலுவலகத்தில் 2-வது நாளாக சோதனை நடந்தது.

அபிராமி ராமநாதன் மற்றும் அப்பாசாமி ரியல் எஸ்டேட் நிறுவனத்துக்கு தொடர்பு உள்ளதாகக் கூறப்படும் தகவலின் அடிப்படையில் சோதனை நடத்தப்பட்டதாகவும், இதில் கணக்கில் வராதநகை, பணம் மற்றும் ஆவணங்கள் சிக்கியுள்ளதாகவும் வருமான வரித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய 40-க்கும் மேற்பட்ட இடங்களில் 2-வது நாளாக நேற்று சோதனை நடைபெற்றது. இன்னும் ஓரிரு நாட்களில் சோதனை முடிவடையும் என்றும், அதற்குப் பிறகே முழு விவரங்கள் தெரிவிக்கப்படும் என்றும் வருமான வரித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x