Published : 31 Jan 2018 11:34 AM
Last Updated : 31 Jan 2018 11:34 AM

உயிரை கையில் பிடித்துக்கொண்டுஎத்தனை நாள்தான் பயணிப்பது?: மதுரை ‘ரிங்ரோட்டை’ சீரமைக்கும் பணியை விரைவுபடுத்த வலியுறுத்தல்

மதுரை நான்கு வழிச்சாலை ‘ரிங்’ ரோடு பணியை பாதுகாப்பு இல்லாமல் பள்ளங்களை தோண்டி மண்ணும், ஜல்லியும் கொட்டி மேற்கொள்வதால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.

மதுரை மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தில் இருந்து திருமங்கலம் அருகே கப்பலூர் வரையிலான மதுரை ‘ரிங்’ ரோடு 27 கி.மீ. நீளமுள்ளது. கடந்த காலத்தில் இந்த ‘ரிங்’ ரோடு மாநகராட்சியின் பராமரிப்பில் இருந்தது.

அப்போது, அவர்கள் இந்த ரோட்டில் 4 இடங்களில் டோல் கேட் அமைத்து பல கோடி ரூபாய் நுழைவுக் கட்டணம் வசூலித்தனர். ஆனால், சாலையை முறையாக பராமரிக்கவில்லை. மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் இருந்த ரிங் ரோட்டை பராமரிக்க தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைத்துறையும் அக்கறை காட்டவில்லை.அதனால், தமிழகத்திலேயே அதிக விபத்துகள் நடக்கும் சாலையாக மதுரை ‘ரிங்’ ரோடு மாறியது. சாலையின் இருபுறமும் மண் குவியலும், சாலையின் நடுவில் பள்ளங்கள், குறுகலான சாலைகள் என ரிங் ரோட்டில் பயணம் செய்வது வாகன ஓட்டிகளுக்கு மரண பயத்தை ஏற்படுத்துவதாக இருந்தது. அதிக உயிரிழப்புகளும் ஏற்பட்டன.

பிற மாவட்டங்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள், இந்த சாலை வழியாகச் செல்கின்றன. ஆனால், இந்தச் சாலையை அகலப்படுத்த கடந்த 5 ஆண்டுகளாக நடவடிக்கை எடுக்கவில்லை. அதன்பிறகு பொதுமக்கள், எதிர்க்கட்சிகள் நெருக்கடியால் தற்போது ரூ. 213 கோடியில் சென்னை- தமிழ்நாடு சாலை மேம்பாட்டுக் கழகம் சார்பில், இந்த ‘ரிங்’ ரோட்டை நான்கு வழிச்சாலையாக மாற்றும் பணி நடக்கிறது. கடந்த 3 மாதங்களுக்கு முன் இந்தப் பணி தொடங்கியது. 7 மீட்டர் அகலத்துக்கு மட்டுமே இருந்த ‘ரிங்’ ரோடு தற்போது நான்கு வழிச்சாலையாக 15.2 மீட்டருக்கு அகலப்படுத்தப்படுகிறது. ‘ரிங்’ ரோட்டில் விரகனூர் ரிங் ரோடு சந்திப்பு வைகை ஆறு பாலம், கப்பலூர் அருகே, சிந்தாமணி அருகே ஆகிய மூன்று இடங்களில் இரண்டு ரயில்வே உயர்மட்ட மேம்பாலங்கள், ஒரு ஆற்று உயர் மட்ட மேம்பாலம் அமைக்கப்படுகிறது. மேலும் ஓடை, கால்வாய், சிற்றாறுகள் கடக்கும் பகுதிகளில் 19 இடங்களில் தரைப்பாலம் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், பணிகள் தொடங்கி 3 மாதங்களாகியும் ரிங் ரோட்டில் நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி வேகமெடுக்கவில்லை. கப்பலூரில் இருந்து 6 கி.மீ. வரை மட்டுமே நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. மற்ற இடங்களில், ஆங்காங்கே சாலையின் இருபுறமும் 8 அடி முதல் 10 அடி ஆழத்துக்கு குழிகளை தோண்டி அப்படியே விட்டுள்ளனர். பல இடங்களில் சாலையை விரிவுபடுத்த சாலையோரம் 1 அடி முதல் 3 அடி வரை மண்ணை தோண்டி உள்ளனர்.

அந்த பகுதியில் பாதுகாப்பு மணல் மூட்டைகள், எச்சரிக்கை பலகைகள், இரவு நேர பிரதிபலிப்பான்கள் வைக்கவில்லை. பல இடங்களில் மணல், ஜல்லி, சரளைக் கற்கள் கிடக்கின்றன. அதனால், பகலில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு புழுதி பறக்கிறது. வாகன டயர்களில் கற்கள் சிக்கி எதிரே வரும் வாகன ஓட்டிகள் மீது தெறிக்கின்றன. இதனால் இந்த சாலையில் பயணம் செய்வதே ஆபத்தாக உள்ளதாக வாகன ஓட்டுநர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

பொதுவாக நான்கு வழிச்சாலை பணி நடந்தால் வாகனங்களை ஒரு வழியாக திருப்பிவிட்டு, மற்றொரு புறத்தில் பணி மேற்கொள்வர். ஆனால், ‘ரிங்’ ரோடு பணியை மேற்கொள்ளும் தமிழ்நாடு சாலை வசதி மேம்பாட்டுக் கழகத்தினர், மாற்று பாதையை அமைக்காமல் பணியை மேற்கொள்வதால் ரிங் ரோட்டில் நாள் முழுவதும் போக்குவரத்து ஸ்தம்பிக்கிறது. இரவு நேரத்தில் இந்த சாலையில் பயணிப்பது ஆபத்தானதாக உள்ளதோடு, மெதுவான பயணத்தால் கூடுதல் நேரம் ஆவதால் ரிங் ரோட்டை புறக்கணித்து பஸ்கள் மாட்டுத்தாவணி பஸ்நிலையத்திலிருந்து பெரியார் பஸ் நிலையம், பழங்காநத்தம், திருநகர் வழியாக திருமங்கலம் செல்கின்றன. மற்றொரு புறம் சிம்மக்கல், நாகமலைப் புதுக்கோட்டை வழியாக நான்கு வழிச்சாலைக்கு செல்கின்றன.

அதனால், நகர் பகுதியில் இரவு நேரத்தில் வாகன நெரிசல் ஏற்பட்டு நகர் போக்குவரத்து ஒட்டுமொத்தமாக ஸ்தம்பிக்கிறது. ரிங் ரோட்டில் மூன்று உயர்மட்ட மேம்பாலங்கள் அமைக்கும் பணி தொடங்கி முடிவடைய ஒரு ஆண்டுக்கு மேல் ஆகும் எனக் கூறப்படுகிறது. அதுவரை, இரவு நேரத்தில் பஸ்கள் நகர் பகுதியில் செல்ல வேண்டி இருக்கும். அதனால், ‘ரிங்’ ரோடு பணியை விரைவுபடுத்தி உயர்மட்ட, தரைப் பாலங்கள் அமைக்கும் பணியை வேகமாக முடிக்க வேண்டும். மேலும், ‘ரிங்’ ரோட்டில் வாகனங்கள் தடையின்றி ஒருபுறம் சென்றுவர சரளை மண், ஜல்லிகள் இல்லாத பாதுகாப்பான மாற்றுப் பாதை ஏற்படுத்தி தர வேண்டும் என்று வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் எதிர்பார்க்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x