Published : 05 Nov 2023 04:24 AM
Last Updated : 05 Nov 2023 04:24 AM
திருவண்ணாமலை: செய்யாறு அருகே மேல்மா சிப்காட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து 125 நாட்கள் போராட்டத்தில் ஈடுபட்ட போராட்ட குழு ஒருங்கிணைப்பாளர் உட்பட 18 பேரை காவல்துறையினர் நேற்று கைது செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே சிப்காட் தொழிற்பேட்டை 3-வது அலகு விரி வாக்கத்துக்காக, மேல்மா உட்பட 11 கிராமங்களில் 3,174 ஏக்கர் விவசாய நிலங்களை தமிழக அரசு கைப் பற்ற நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மேல்மா சிப்காட் எதிர்ப்பு விவசாயிகள் இயக்கம் சார்பில் மேல்மா கூட்டுச்சாலையில், கடந்த ஜுலை 2-ம் தேதி காத்திருப்பு போராட்டம் தொடங்கப்பட்டது. இதில், விவசாயிகள் திரளாக பங் கேற்றனர்.
இந்நிலையில், 124-வது நாளான கடந்த 2-ம் தேதி, மேல்மா சிப்காட் விரிவாக்க திட்டத்தை கைவிட வேண்டும் என்ற கோரிக்கையை செவி கொடுத்து கேட்காமல் செயல்படும் ஆட்சியர் பா.முருகேஷை கண்டித்து, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை, நியாய விலை கடை அட்டை ஆகியவற்றை செய்யாறு சார் ஆட்சியர் அனாமிகா-விடம் ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்காக, செய்யாறு பேருந்து நிலையத்தில் இருந்து விவசாயிகளின் ஊர்வலம் புறப்பட்டது. அப்போது அவர்களை தடுத்து நிறுத்திய காவல் துறையினர், ஊர்வலம் செல்ல அனுமதி இல்லை என கூறி கைது செய்து, திருமண மண்டபத்தில் அடைத்தனர். பின்னர் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த போராட்டக் குழுவினர், விவ சாயிகள் ஆகியோர் திருமண மண்டபத்தில் இருந்து வெளியேற மறுத்து, உள்ளிருப்பு போராட்டத்தை தொடங்கினர். மின் இணைப்பு துண்டிக்கப்பட்டும், போராட்டம் தொடர்ந்தது. இவர்களிடம் சார் ஆட்சியர் அனாமிகா பேச்சுவார்த்தை நடத்தினார். அவரிடம் கோரிக்கை மனுவை அளித்துவிட்டு, திருமண மண்ட பத்தில் இருந்து வெளியேறினர்.
இந்நிலையில், போராட்டத்தின் போது, காவல்துறையினருடன் ஏற்பட்ட தள்ளுமுள்ளு தொடர்பாக பதிவு செய்யப்பட்டிருந்த வழக்கில், மேல்மா சிப்காட் எதிர்ப்பு விவசாயிகள் இயக்க ஒருங்கிணைப்பாளர் அருள் ஆறுமுகம் (45), தேவன்(46), துரைராஜ் (58), பச்சையப்பன்(40), சதாசிவம் (62), மாசிலாமணி(45) உட்பட 18 பேரை செய்யாறு காவல்துறையினர் நேற்று கைது செய்தனர்.
மேலும் வீடு, வீடாக சென்று போராட்டத்தை முன்னெடுத்து சென்றவர்கள் மற்றும் போராட்டத்தில் பங்கேற்று கருத்து தெரிவித்த விவசாயிகள் பலரை தேடி வருகின்றனர். இதற்கிடையில் 125 நாட்களாக மேல்மா கூட்டுச்சாலையில் அமைக்கப்பட்டிருந்த பந்தலை காவல்துறையினர் அகற்றினர்.
நிலம் கைப்பற்றப்பட உள்ள 11 கிராமங்களில் காவல்துறையினர் குவிக்கப்பட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து வேலூர் சரக டிஐஜி முத்துசாமி நேரில் பார்வையிட்டு, காவல் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT