Published : 04 Nov 2023 07:32 PM
Last Updated : 04 Nov 2023 07:32 PM
சென்னை: ஜார்க்கண்ட்டில் உயிரிழந்த தமிழக மருத்துவ மாணவர் மதன்குமாரின் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள புத்தூரைச் சேர்ந்த மதியழகன் என்பவரது மகன் ம.மதன்குமார் (வயது 28) ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள ராஜேந்திரா மருத்துவக் கல்லூரியின் (Rajendra Institute of Medical Sciences) விடுதியில் தங்கி இரண்டாம் ஆண்டு தடயவியல் மருத்துவம் படித்து வந்த நிலையில், ம.மதன்குமார் காணாமல் போய் பின்னர் அவரது உடல் எரிந்த நிலையில் சடலமாக அவர் தங்கியிருந்த விடுதியின் பின்புறத்திலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த மனவேதனையடைந்தேன்.
உடனடியாக தமிழ்நாடு அரசின் உயர் அலுவலர்கள் ஜார்க்கண்ட மாநில அரசுடன் தொடர்பு கொண்டு ம.மதன்குமாரின் உடலை அவரது சொந்த ஊருக்கு கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளை விரைந்து மேற்கொண்டதன் அடிப்படையில், அவரது உடல் விமானம் மூலம் கொண்டு வரப்பட்டு, அவரது குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டு, வனத்துறை அமைச்சர் டாக்டர் மா.மதிவேந்தன் மற்றும் நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆகியோரால் அஞ்சலி செலுத்தப்பட்டு இன்று காலையில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. மேலும், ம.மதன்குமார் மர்மான முறையில் இறந்த சம்பவம் குறித்து ஜார்க்கண்ட் மாநில காவல் துறையினரும் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த துயரமான சூழ்நிலையில், ம.மதன்குமாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர் மற்றும் அவரது உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, அவரின் குடும்பத்தாருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து மூன்று லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கிட உத்தரவிட்டுள்ளேன். மேலும், ம.மதன்குமார் அவர்கள் இறந்தது குறித்து உரிய விசாரணையை விரைந்து மேற்கொண்டு, அவரது இறப்புக்கு நீதி கிடைக்கும் வகையில் துரித நடவடிக்கை மேற்கொள்ளவும் நான் கடிதம் மூலம் ஜார்க்கண்ட் மாநில முதல்வர் ஹேமந்த் சோரனை வலியுறுத்தியுள்ளேன்” என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT