Published : 04 Nov 2023 04:48 PM
Last Updated : 04 Nov 2023 04:48 PM

தமிழக கனமழை: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பட்டியலிட்டு மின் துறைக்கு அமைச்சர் அறிவுரை

சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள மின்சாரத் துறை சார்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அனைத்து மண்டல தலைமை பொறியாளர்கள் மற்றும் மேற்பார்வை பொறியாளர்களுடன் காணொலி காட்சி வாயிலாக அமைச்சர் தங்கம் தென்னரசு ஆய்வு மேற்கொண்டார்.

இது தொடர்பான தமிழக அரசின் செய்திக் குறிப்பு: வடகிழக்கு பருவமழை 21.10.2023 அன்று தொடங்கியதிலிருந்து, தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. தமிழ்நாட்டில் சில மாவட்டங்களில் வருகின்ற 06.11.2023 வரை கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில், இன்று (04.11.2023) சென்னை, தமிழ்நாடு மின்வாரியத் தலைமை அலுவலகத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழையினை எதிர்கொள்ள மின்சாரத்துறை சார்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அனைத்து மண்டல தலைமை பொறியாளர்கள் மற்றும் மேற்பார்வை பொறியாளர்களுடன் காணொலி காட்சி வாயிலாக ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வுக் கூட்டத்தில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் ராஜேஷ் லக்கானி உள்ளிட்ட அனைத்து இயக்குநர்கள் மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

குறிப்பாக, இந்த ஆய்வுக் கூட்டத்தில் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்த மாவட்டங்களான கோயம்புத்தூர், நீலகிரி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, இராமநாதபுரம் மற்றும் மஞ்சள் எச்சரிக்கை விடுத்த மாவட்டங்களான மதுரை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, சிவகங்கை, விருதுநகர், திருப்பூர், ஈரோடு, தேனி மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களின் தலைமைப் பொறியாளர்கள் மற்றும் மேற்பார்வை பொறியாளர்களுடனும் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விரிவான ஆய்வினை அமைச்சர் மேற்கொண்டார்.

சிறப்பு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள 19.07.2023 அன்று பணிகள் தொடங்கப்பட்டு 31.10.2023 வரை 9,95,945 பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக 1,348 துணைமின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் முடிக்கப்பட்டு சீரான மின் விநியோகத்திற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. மேலும், 5,39,780 மரக் கிளைகள் மின் வழித்தடங்களில் இருந்து தமிழகம் முழுவதும் அகற்றப்பட்டு மின் விநியோகத்திற்கான ஏற்பாடுகள் சீர் செய்யப்பட்டிருக்கின்றன.

53,852 பழுதடைந்த மின் கம்பங்கள் புதிதாக மாற்றப்பட்டு இப்பொழுது பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளன. 21 வகையான பராமரிப்பு பணிகள் எடுத்துக்கொள்ளப்பட்டு 9,95,945 பணிகள் நிறைவு செய்யப்பட்டிருக்கின்றன. மேலும், சென்னையில் ஏற்கனவே தரைமட்டத்தில் இருந்த 4,638 பில்லர் பாக்ஸ்களின் உயரம் ஒரு மீட்டர் அளவிற்கு உயர்த்தப்பட்டு, பொருத்தப்பட்டுள்ளது. சென்னை மாநகரம் முழுவதும் 4,746 இடங்களில் RMU-க்கள் பொருத்தப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

தேவைப்படும் நிவாரண பணிகளை உடனடியாக மேற்கொள்ள 3,01,817 மின்கம்பங்கள், 12,600 கி.மீ. மின்கம்பிகள் மற்றும் 18,008 மின்மாற்றிகள் உட்பட அனைத்து தளவாட பொருட்களின் கையிருப்பு நிலை குறித்து அமைச்சர் கேட்டறிந்தார். மின் கட்டமைப்பில் ஏற்படும் சேதாரங்களை பொறுத்து சம்பந்தப்பட்ட மேற்பார்வை பொறியாளர்கள் தேவைப்படும் பணியாளர்கள் மற்றும் தளவாடப் பொருட்களுடன் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள தயார் நிலையில் இருக்குமாறு சம்பந்தப்பட்ட அனைத்து அலுவலர்களுக்கும் மின்துறை அமைச்சர் அறிவுரை வழங்கினார். இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து மண்டல தலைமைப் பொறியாளர்கள் மற்றும் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர்கள் அனைவருக்கும் கீழ்கண்ட அறிவுறுத்தல்களை அமைச்சர் வழங்கினார்.

  • மாநில பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு மையத்துடன் ஒருங்கிணைந்து 24X7 மணி நேரமும் முறைப்பணி முறையில் உதவி செயற்பொறியாளர்கள் நியமிக்கப்பட்டு பணியாற்றிட வேண்டும்.
  • இதே போன்று, ஒவ்வொரு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பேரிடர் மேலாண்மை குழுவுடன் இணைந்து 24X7 மணி நேரமும் முறைப்பணி முறையில் உதவி பொறியாளர்கள் நியமிக்கப்பட்டு பணியாற்றிட வேண்டும்.
  • மேலும், தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 44 மின் பகிர்மான வட்டங்களில் உள்ள மேற்பார்வைப் பொறியாளர் அலுவலகங்களிலும் 24X7 மணி நேரமும் முறைப்பணி முறையில் பொறியாளர்கள் நியமிக்கப்பட்டு பணியாற்றிட வேண்டும்.
  • தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 176 கோட்டங்களின் செயற்பொறியாளர்களின் கீழ் மின் சீரமைப்பு பணிகளை மேற்கொள்வதற்கென பிரத்யேகமாக இரண்டு குழுக்கள் அமைக்கப்பட்டு, ஒரு குழுவிற்கு 15 பணியாளார்கள் வீதம், மொத்தம் 5,000 பேர் 24x7 மணி நேரமும் மின் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள தயார் நிலையில் இருக்க வேண்டும்.
  • சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டு மையத்துடன் ஒருங்கிணைந்து 24X7 மணி நேரமும் பணியாற்றிட முறைப்பணி முறையில் பொறியாளர்கள் மற்றும் களப்பணியாளர்கள் நியமிக்கப்பட்டு பணியாற்றிட வேண்டும்.
  • மரம் வெட்டும் உபகரணங்கள், பாதுகாப்பு உபகரணங்கள் அனைத்தும் இயங்கும் நிலையில் இருப்பதையும் மற்றும் தேவைப்படும் அனைத்து தளவாடப் பொருட்களையும் இருப்பில் வைத்துக் கொள்வதற்கும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
  • ஜே.சி.பி., கிரேன்கள் உள்ளிட்ட வாகன உரிமையாளர்களின் தொலைபேசி எண்களை முன்னமே கேட்டறிந்து அவைகளின் தயார்நிலையை உறுதி செய்யப்பட வேண்டும்.
  • வாரிய வாகனங்கள் அனைத்தும் செப்பனிடப்பட்டு எரிபொருள் நிரப்பப்பட்டு தயார் நிலையில் இருக்க வேண்டும்.
  • மின் தடங்கல் ஏற்படின் முதற்கட்டமாக மருத்துவமனைகள், குடிநீர் இணைப்புகள், அரசாங்க அலுவலகங்கள், வங்கிகள் மற்றும் செல்போன் டவர்கள் அனைத்திற்கும் முன்னுரிமை அடிப்படையில் மின்சாரம் வழங்கப்பட வேண்டும்.
  • இது போன்ற மழைக் காலங்களில் உயர் அலுவலர்கள் அனைவரும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தினருடனும், தீயணைப்பு துறையினருடனும் எப்பொழுதும் தொடர்பில் இருக்க வேண்டும்.
  • அனைத்து அலுவலர்களும் தமது அலைபேசிகளை எந்நேரத்திலும் தொடர்புக்கொள்ளும் நிலையில் வைத்துக் கொள்ளவேண்டும் எனவும், இதனை மீறுபவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் உத்தரவிட்டார்.
  • சீரமைப்பு பணிகளில் ஈடுபடும் அனைத்து அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் மிகுந்த கவனத்துடனும், உரிய பாதுகாப்புடனும் செயல்பட வேண்டும்.
  • பேரிடர் காலங்களில் பணியில் ஈடுபடும் பணியாளர்கள் தங்குவதற்கு உரிய பள்ளிகள், திருமண மண்டபங்கள், சமுதாயக் கூடங்கள் அடையாளம் காணப்பட்டு தயார் நிலையில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

பொதுமக்கள் மின்தடை சம்பந்தமான புகார்களை 24 மணி நேர மின் நுகர்வோர் சேவை மையமான மின்னகத்தின் தொடர்பு எண்ணான 94987 94987 வாயிலாகவும் மற்றும் அனைத்து மின்பகிர்மான வட்ட மின்தடை நீக்கம் மையம் வாயிலாகவும் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும், மழைக்காலங்களில் பொதுமக்கள் மின்சாதனங்களை எச்சரிக்கையுடன் கையாளுமாறும், அறுந்து கிடக்கும் மின் கம்பிகளின் அருகில் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்படுகிறது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x