Published : 04 Nov 2023 04:34 PM
Last Updated : 04 Nov 2023 04:34 PM

முதல்வர் ஸ்டாலினுக்கு வைரல் காய்ச்சல்: சிகிச்சையுடன் ஓய்வெடுக்க அறிவுறுத்தல்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் | கோப்புப் படம்

சென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு வைரல் காய்ச்சல் (viral flu) ஏற்பட்டுள்ளது. காய்ச்சலுக்கான சிகிச்சையோடு, சில நாட்கள் ஓய்வெடுக்கும்படியும் அவருக்கு மருத்துவர் அறிவுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலினின் தனிப்பட்ட மருத்துவரும், மெட்ராஸ் ENT ஆராய்ச்சி மையத்தின் (Madras ENT Research Foundation - MERF) தலைமை மருத்துவருமான மோகன் காமேஸ்வரன் வெளியிட்டுள்ள மருத்துவ அறிக்கையில், "தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நேற்று இருமல், காய்ச்சல் அறிகுறிகள் இருந்தன. அதனையடுத்து அவருக்கு மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்நிலையில், அவருக்கு வைரல் ஃப்ளூ (viral flu) காய்ச்சல் உறுதியாகியுள்ளது. இதனால், முதல்வர் காய்ச்சலுக்கான சிகிச்சைகளை மேற்கொள்ளுமாறும், அடுத்த சில நாட்களுக்கு ஓய்வு எடுக்கும்படியும் அறிவுறுத்தப்படுகிறது" எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (நவ.4) காலையில் சென்னை பெசன்ட் நகரில் 'நடப்போம் நலன் பெறுவோம்' என்ற திட்டத்தை தொடக்கி வைக்க இருந்த நிலையில் அந்த நிகழ்ச்சியில் அவருக்குப் பதிலாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றார். அதேபோல் நேற்றும் தலைமைச் செயலகத்தில் சில நிகழ்ச்சிகளை முதல்வர் ஸ்டாலின் ரத்து செய்ததாகத் தெரிகிறது. இதனால் அவருக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறப்பட்ட நிலையில் முதல்வர் ஸ்டாலினின் உடல்நிலை குறித்து அதிகாரபூர்வ மருத்துவ அறிக்கை வெளியாகியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x