Published : 03 Jan 2018 11:48 AM
Last Updated : 03 Jan 2018 11:48 AM
திரைப்பட நடிகர் ரஜினிகாந்த் அரசியல் வருகையை அறிவித்து தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிடப் போவதாக அறிவித்ததையடுத்து தமிழகத்தில் திராவிடக் கட்சிகளை வீழ்த்த முடியுமா? திமுக, அதிமுக ஆகிய திராவிடக் கட்சிகளுக்கு மாற்று இருக்கிறதா போன்ற விவாதங்கள் மீண்டும் தலைதூக்கியுள்ளன.
திமுக, அதிமுக ஆகிய திராவிடக் கட்சிகளுக்கு மாற்று உண்டு என்ற பேச்சு பரவலாகப் பேசப்பட்டு வந்தாலும் மாற்று அரசியல், மாற்றுக் கட்சி முயற்சிகள் 1977-லிருந்தே தமிழகத்தில் எழுச்சி அடைய முடியவில்லை என்பதே யதார்த்தம்.
மூத்த காங்கிரஸ் தலைவர் ஜி.கே.மூப்பனார், 1977 மற்றும் 1989-ல் உறுதியான சில முயற்சிகளை மேற்கொண்டார். சிறிய கட்சிகளுடன் கூட்டணி மேற்கொண்டார். இரு முறையும் அவரது முயற்சி தோல்வியிலேயே முடிந்தது.
மதிமுக-வின் வைகோ தன் சார்பாக 3 முறை மாற்றுக்கு முயற்சித்தார். 1996, 2001, 2016 ஆகிய ஆண்டுகளில் அவர் முயற்சி மேற்கொண்டார். 1996-ல் மதிமுக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ஜனதாதளம் ஆகியவற்றுடனும், 2001-ல் தனித்தும் போட்டியிட்டது.
2016 தமிழக சட்டப்பேரவை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி, பாட்டாளி மக்கள் கட்சி, நாம் தமிழர் கட்சி, ஆகியவை தங்களை தனித்துவமாக, மாற்றுச் சக்திகளாகக் காட்டிக் கொள்ள முயற்சித்தன. ஆனால் மூன்று கட்சிகளும் சேர்ந்து 10% வாக்குப் பங்கீட்டைக் கூட பெறவில்லை.
சூழ்நிலையில் மாற்றம்
இருப்பினும், திமுக தலைவர் மு.கருணாநிதியின் உடல்நலப் பின்னடைவு, முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் மரணம் ஆகியவற்றால் மாற்றுக்கட்சிகளுக்கான, புதிய முயற்சிகளுக்கான ஒரு நம்பிக்கைக் கீற்றை அளித்ததாகத் தெரிந்தது.
எம்.ஜி.ஆர். அமைச்சரவையில் இருந்த பண்ருட்டி ராமச்சந்திரன் 1991-ல் பாட்டாளி மக்கள் கட்சியிலும் 2006-ல் தேமுதிகவிலும் இருந்தார். இந்த இருகட்சிகளும் திமுக, அதிமுக ஆகியவற்றின் ஆதிக்கத்திற்கு சவால் அளிக்க முயற்சி கொண்ட போது, பிறரை ஆட்படுத்தக் கூடிய ஒரு ஆளுமையான தலைமை இல்லை. மாநில மக்களை கவனிக்க வைக்கும் உள்ளடக்கிய ஒரு மாற்றுப்பார்வையின்மை, ஒழுங்குமுறைக்குட்பட்ட ஒரு அமைப்பு அனைத்து மூலை முடுக்குகளிலும் தேவைப்படும் நிலையில் அந்த மாதிரி எதுவும் அமையாமல் போனவை ஆகியவற்றால் இந்த இரு கட்சிகளின் முயற்சிகளும்கூட தோல்வியடைந்தன.
பண்ருட்டி ராமச்சந்திரன் ரஜினி அரசியல் வருகை குறித்துக் கூறும்போது, 15% வாக்குகளைப் பெற்று ஒரு பெரிய சவாலான மாற்றுச் சக்தியாக ரஜினி எழுச்சி பெற்றாலும் அவரால் ஒரு ‘நம்பகமான, வெற்றி பெறும் மாற்றாக’தன்னை வழங்கிக் கொள்ள முடியாது. 1996-ல் ரஜினிகாந்த் அரசியல் நுழைவு பற்றிய மக்களிடம் ஒரு அரசியல் தாகம் இருந்தது. இப்போது அம்மாதிரியான நிலை இல்லை. வயது மற்றும் ஒரு குறிப்பிட்ட மதத்துடனான அடையாளம் ஆகியவையும் அவரை முடக்கும் என்றார்.
தமிழ் மாநில காங்கிரஸின் பி.எஸ்.ஞானதேசிகன் கூறிய போது, இரண்டு திராவிட கட்சிகளை எதிர்கொள்ள யார் முன்வந்தாலும் அவர்களிடமிருக்கும் பணபலத்தை கணக்கில் எடுத்துக் கொள்ளவேண்டும், இது மிகப்பெரியது. ரஜினிகாந்தால் தமிழக அரசியலில் தாக்கம் ஏற்படுத்த முடியும் என்றும் இப்போதே கிராமங்களில் ரஜினியின் இந்த அறிவிப்பு தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது, என்றார்.
அரசியல் நோக்கரான ஞாநி கூறும்போது, ரஜினிகாந்தின் அரசியல் வெற்றி, மக்களுக்கு அவர் என்ன வாக்குறுதிகளை அளிக்கப்போகிறார் என்பதைப் பொறுத்தது, உதாரணத்துக்கு நலத்திட்டங்களை அவர் தொடர்வாரா என்பதை நாம் பார்க்க வேண்டும் என்றார்.
1977 முதல் திராவிடக் கட்சிகள் அல்லாத பிறக் கட்சிகளின் வாக்கு விகிதங்கள்:
காங்கிரஸ் போட்டியிட்ட இடங்கள் 198, வென்றது 27, வாக்குகள் விகிதம் 17
ஜனதா கட்சி போட்டியிட இடங்கள் 233, வென்றது 10, வாக்குகள் விகிதம் 16.67%
1989: காங்கிரஸ் போட்டியிட்ட இடங்கள் 217, வென்றது 26, வாக்குகள் விகிதம் 20.19%
1991: பாட்டாளி மக்கள் கட்சி போட்டியிட்ட இடங்கள் 199, வென்ற இடங்கள் 1, வாக்குகள் விகிதம் 5.91%
1996: மதிமுக போட்டியிட்ட இடங்கள் 178, வென்ற இடங்கள் 0, வாக்குகள் விகிதம் 5.91%
2001: மதிமுக போட்டியிட்ட இடங்கள் 211, வென்ற இடங்கள் 0, வாக்குகள் விகிதம் 4.65%
பாஜக போட்டியிட்ட இடங்கல் 225, வென்ற இடங்கள் 0, வாக்குகள் விகிதம் 2.02%
2006: தேமுதிக போட்டியிட்ட இடங்கள் 232, வென்ற இடங்கள் 1, வாக்குகள் விகிதம் 8.36%
2011: பாஜக போட்டியிட்ட இடங்கள் 204, வென்ற இடங்கள் 0, வாக்குகள் விகிதம் 2.22%
2016: பாஜக போட்டியிட்ட இடங்கள்188, வென்ற இடங்கள் 0, வாக்குகள் விகித 2.84%
பாட்டாளி மக்கள் கட்சி போட்டியிட்ட இடங்கள் 232, வென்ற இடங்கள் 0, வாக்குகள் விகிதம் 5.34%
நாம் தமிழர் கட்சி போட்டியிட்ட இடங்கள் 231, வென்ற இடங்கள் 0, வாக்குகள் விகிதம் 1.06%
2016: மக்கள் நலக்கூட்டணி போட்டியிட்ட இடங்கள் 234, வென்ற இடங்கள் 0, வாக்குகள் விகிதம் 6.06%
தமிழில் : ஆர்.முத்துக்குமார்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT