Published : 04 Nov 2023 10:13 AM
Last Updated : 04 Nov 2023 10:13 AM

தென் மாவட்டங்களில் பலத்த மழை: தாமிரபரணியில் வெள்ள அபாய எச்சரிக்கை

நெல்லை: திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் நேற்று (வெள்ளிக்கிழமை) பலத்த மழை பெய்தது. இதனால், தாமிரபரணியில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் அணைப் பகுதிகளிலும் பிற இடங் களிலும் நேற்று இடியுடன் பலத்த மழை பெய்தது. திருநெல்வேலி மாநகர பகுதி சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்தது. திருநெல்வேலி மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் பெய்த மழையளவு (மி.மீட்டரில்):

அம்பாசமுத்திரம்-18, சேரன்மகாதேவி-14.80, மணி முத்தாறு-20, நாங்குநேரி-12, பாளையங்கோட்டை-4, பாபநாசம்-18, ராதாபுரம்-67, திருநெல்வேலி-8.80, சேர்வலாறு-9, கன்னடியன் அணைக்கட்டு-25.80, களக்காடு-22.40, கொடுமுடியாறு-18, மூலைக்கரைப்பட்டி-10, நம்பியாறு-13, மாஞ்சோலை-74, காக்காச்சி-65, நாலுமுக்கு-56, ஊத்து பகுதியில் 35 மி.மீ மழை பதிவானது.

பலத்த மழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. பாபநாசம் அணைக்கு விநாடிக்கு 1,082 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து 404 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது. மணிமுத்தாறு அணைக்கு விநாடிக்கு 366 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து 10 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது.

52.50 அடி உச்ச நீர்மட்டம் கொண்ட கொடுமுடியாறு அணை நிரம்பும் தருவாயில் உள்ளதை அடுத்து, அணைக்கு வரும் 30 கனஅடி தண்ணீர் அப்படியே திறந்துவிடப்படுகிறது.

இந்நிலையில் மாவட்டத்தில் நேற்று பிற்பகலிலும், மாலையிலும் பல்வேறு இடங்களில் இடியுடன் பலத்த மழை பெய்தது. மாலை 4 மணி நிலவரப்படி அம்பாசமுத்திரத்தில் 20 மி.மீ, சேரன்மகாதேவி-8, மணிமுத்தாறு-15.20, நாங்குநேரி-3, பாளையங்கோட்டை, பாபநாசம்- தலா 15, ராதாபுரம்-8, திருநெல்வேலியில் 30 மீ.மீ. மழை பதிவாகியிருந்தது.

திருநெல்வேலி மற்றும் பாளையங்கோட்டையில் பெய்த பலத்த மழையால் தாழ்வான பகுதிகளிலும், சாலைகளிலும் தண்ணீர் பெருக்கெடுத்தது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

பாளையங்கோட்டை பேருந்து நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளில் வாகனங்கள் ஊர்ந்து சென்றன. போக்குவரத்து சிக்னல் அருகிலும், சரோஜினி பூங்கா எதிரே சாராள் தக்கர் மேல்நிலைப்பள்ளிக்கு செல்லும் பிரதான சாலை சந்திப்பிலும் குளம்போல் தண்ணீர் தேங்கியதால் மக்கள் சிரமப்பட்டனர்.

பாளையங்கோட்டையில் எப்போது மழை பெய்தாலும் இப்பகுதியில் குளம்போல் தண்ணீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. மாணவ, மாணவிகள் அவதியுற்றனர்.

தென்காசி: தென்காசி மாவட்டத்தில் நேற்று காலை வரை 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தென்காசியில் 55 மி.மீ. மழை பதிவானது. சிவகிரி, கருப்பாநதி அணையில் தலா 20 மி.மீ., ஆய்க்குடியில் 12 மி.மீ., சங்கரன்கோவிலில் 10 மி.மீ., கடனாநதி அணையில் 5 மி.மீ., செங்கோட்டையில் 2.10 மி.மீ., குண்டாறு அணையில் 2 மி.மீ., அடவிநயினார் அணையில் 1 மி.மீ. மழை பதிவானது. தொடர் மழையால் அணை களில் நீர்மட்டம் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

கடனாநதி அணை நீர்மட்டம் ஒன்றரை அடியும், ராமநதி அணை நீர்மட்டம் 2 அடியும் உயர்ந்துள்ளது. குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. சுற்றுலாப் பயணிகள் கூட்டம் குறைவாக இருந்தது.

விடுமுறை அறிவிப்பு: திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் கா.ப. கார்த்திகேயன் வெளியிட்ட அறிக்கை: திருநெல்வேலி மாவட்டத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால், பொது மக்கள் யாரும் தாமிரபரணி ஆற்றில் இறங்க வேண்டாம். இந்திய வானிலை ஆராய்ச்சி மைய அறிவிப்பின்படி திருநெல்வேலி மாவட்டத்துக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. எனவே, இன்று அனைத்து பள்ளிகளுக்கும் (சிறப்பு வகுப்புகள் உட்பட) விடுமுறை அறிவிக்கப்படுகிறது. இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தென்காசி மாவட்டத்திலும் இன்று (4-ம் தேதி) அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவித்து ஆட்சியர் துரை.ரவிச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார்.

குமரி மாவட்டத்தில் கனமழை பெய்து வரும் நிலையில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப் பட்டுள்ளது.

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் நேற்றும் பரவலாக மழை பெய்தது. வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (மில்லி மீட்டரில்): ஸ்ரீ வைகுண்டம் 2.1, திருச்செந்தூர் 40, காயல்பட்டினம் 4, குலசேகரன்பட்டினம் 11, சாத்தான்குளம் 1, கோவில்பட்டி 12, கழுகுமலை 5, கயத்தாறு 4, கடம்பூர் 3, எட்டயபுரம் 3.4, விளாத்திகுளம் 14, வைப்பார் 9, சூரன்குடி 12, ஓட்டப்பிடாரம் 2, வேடநத்தம் 20 மி.மீ.

குமரியில் அணைகளுக்கு அதிக நீர்வரத்து: கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. மேலும் இரு நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது. அதிகபட்சமாக களியலில் நேற்று 60 மிமீ மழை பதிவானது. மழையால் ரப்பர் பால்வெட்டும் தொழில், மீன்பிடி தொழில், தென்னை சார்ந்த தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

பேச்சிப் பாறை, பெருஞ்சாணி அணைப் பகுதியில் மழை நீடித்து வருவதால் எந்நேரமும் அணைகளில் இருந்து அதிக தண்ணீர் திறக்க வாய்ப்புள்ளது. திற்பரப்பு அருவியிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டு கிறது. ேச்சிப்பாறை அணை நீர்மட்டம் நேற்று 42.36 அடியாக இருந்தது. அணைக்கு 467 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து 173 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 71.67 அடியாக இருந்தது. அணைக்கு 424 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணை யிலிருந்து 400 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. மழைக்கு நேற்று மேலும் 5 வீடுகள் இடிந்து விழுந்தன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x