Published : 04 Nov 2023 05:29 AM
Last Updated : 04 Nov 2023 05:29 AM
புதுடெல்லி: தமிழகத்தில் கடந்த அக்.22 மற்றும் அக்.29 ஆகிய தேதிகளில் ஆர்எஸ்எஸ் சார்பில் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த அனுமதி கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், தமிழகத்தின் வட மாவட்டங்களில் 33 இடங்களி்ல் நிபந்தனைகளுடன் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலத்துக்கு அனுமதி வழங்க போலீஸாருக்கு கடந்த அக்.16 அன்று உத்தரவிட்டிருந்தார்.
ஆனால் உயர் நீதிமன்ற உத்தரவுப்படி போலீஸார் அனுமதியளிக்கவில்லை என்பதால் ஆர்எஸ்எஸ் சார்பில் உயர் நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், தமிழக உள்துறைச் செயலர், டிஜிபி, சம்பந்தப்பட்ட எஸ்பி-க்கள் ஆஜராக உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலத்துக்கு அனுமதியளிக்க தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு தடை கோரி, தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது.
அதில், “சட்டம் - ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காகவே இந்த அணிவகுப்பு பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டது. மேலும் ஆர்எஸ்எஸ் சார்பில் அணிவகுப்பு ஊர்வலம் செல்ல அனுமதி கோரும் இடங்கள் மசூதிகள், தேவாலயங்கள் உள்ளிட்ட மக்கள் நடமாட்டம் மிகுந்த இடங்களாக உள்ளன.
இதனால் சட்டம் - ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் வாய்ப்பு இருப்பதாக உளவுத் துறை தெரிவித்த தகவல் அடிப்படையிலும், பண்டிகை நாட்கள் மற்றும் தேவர் ஜெயந்தி உள்ளிட்ட நிகழ்வுகளின் காரணமாகவும், பாதுகாப்பு காரணங்களுக்காகவும் இந்த அணிவகுப்பு ஊர்வலத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டது. ஆனால் இவற்றை உயர் நீதிமன்றம் கருத்தில் கொள்ளவில்லை. எனவே தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலத்துக்கு அனுமதி வழங்க தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும்” என கோரப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் சூர்யகாந்த், திபான்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், “இந்த விவகாரத்தில் தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்திலேயே மேல்முறையீடு செய்திருக்கலாமே, உச்ச நீதிமன்றத்தை நாடியது ஏன்?” என கேள்வி எழுப்பினர்.
அதற்கு தமிழக அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில்சிபல் மற்றும் மாநில அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா ஆகியோர் விளக்கம் அளித்தனர்.
அதையடுத்து நீதிபதிகள், சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதியின் வழக்கு விசாரணை பணி விவரம் குறித்த ரோஸ்டரை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை 6-ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளனர். மேலும் அன்றைய தினம், இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததுதானா என்பது குறித்து முடிவு செய்யப்படும் என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT