Published : 03 Nov 2023 08:40 PM
Last Updated : 03 Nov 2023 08:40 PM
திருவண்ணாமலை: பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலுக்கு சொந்தமான கல்வி நிறுவனங்களில் இரண்டரை ஆண்டுகளில் 2-வது முறையாக வருமான வரித் துறை சோதனை நடைபெறுகிறது. இதன் பின்னணி குறித்து சற்றே விரிவாகப் பார்ப்போம்.
திருவண்ணாமலை மாவட்ட (தெற்கு) திமுக செயலாளர் மற்றும் தமிழக பொதுப்பணித் துறை அமைச்சராக இருப்பவர் எ.வ.வேலு. இவருக்கு மிக நெருக்கமாக இருந்தவர் மாவட்டத் துணை செயலாளராக பதவி வகித்த சாவல்பூண்டி சுந்தரேசன். இவர், தனது கட்சியினருடன் பேசிய ஆடியோ கடந்த 2021-ம் ஆண்டு ஜனவரி மாதம் வெளியாகி வைரலானது. வாரிசு அரசியலுக்கு எதிராக தனது கருத்தைப் பதிவு செய்திருந்த சாவல்பூண்டி சுந்தரேசன், அமைச்சர் எ.வ.வேலு மகன் கம்பனுக்கு முக்கியத்துவம் கொடுப்பதை கடுமையாக விமர்சித்திருந்தார். மேலும் அவர், ''கரூரில் ரூ.500 கோடியில் பைனான்ஸ், ஸ்பின்னிங் மில், 8 கல்வி நிறுவனங்கள், தமிழகம் முழுவதும் 6 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலம், கிரானைட் நிறுவனம், திரைப்பட பைனான்ஸ் மற்றும் விநியோகிஸ்தர் தொழிலை அமைச்சர் எ.வ.வேலு செய்து வருகிறார்'' என்று குறிப்பிட்டிருந்தார்.
இதனால் அதிர்ச்சியடைந்த எ.வ.வேலு, செய்தியாளர்களிடம் கடந்த 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தன்னிலை விளக்கம் அளித்தார். அப்போது அவர், பொது வாழ்வில் அப்பழுக்கற்றவன் எனத் தெரிவித்தார். மேலும், தனக்கு ரூ.500 கோடியில் பைனான்ஸ், ஸ்பின்னிங் மில், 6 ஆயிரம் ஏக்கர் நிலம் என எதுவும் இல்லை என மறுப்பு தெரிவித்திருந்தார். அப்போது, வருமான வரித் துறை சோதனை விரைவில் நடைபெற கூடும் என திமுகவினர் கூறி வந்தனர்.
இதற்கிடையில், 2021-ல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் திருவண்ணாமலை மாவட்டத்தில் திமுக சார்பில் போட்டியிட்ட 8 தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து, திருவண்ணாமலை தேரடி வீதியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடந்த 25-03-2021-ம் தேதி பிரச்சாரம் செய்தார். அதே நேரத்தில், திருவண்ணாமலை அடுத்த தென்மாத்தூரில் உள்ள எ.வ.வேலுக்கு சொந்தமான கல்வி நிறுவனங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். 2 நாட்கள் நடைபெற்ற சோதனையில் முக்கிய ஆவணங்கள், பணம் ஆகியவை கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், இரண்டரை ஆண்டுகளில் மீண்டும் வருமான வரித் துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை சோதனையை தொடங்கி உள்ளனர். முந்தைய சோதனைக்கும், தற்போதைய சோதனைக்கு பெரியளவில் வேறுபாடு உள்ளன. தமிழக அரசு மூலமாக நிதி ஒதுக்கீடு அதிகம் இருக்கும் பொதுப் பணித் துறை, நெடுஞ்சாலைத் துறை, சிறு துறைமுகங்கள் துறை என 3 முக்கிய துறைகள், அமைச்சர் எ.வ.வேலு வசம் உள்ளன. மேலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு மிக நெருக்கமாக உள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலினின் அசைவுகளுக்கு தோள் கொடுத்து வருகிறார்.
திருவண்ணாமலை அடுத்த மலப்பாம்பாடியில் கடந்த அக்டோபர் 22-ம் தேதி நடைபெற்ற திமுக வாக்குச்சாவடி முகவர்களுக்கான பயிற்சி பட்டறையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். இதற்காக அவர், அமைச்சர் எ.வ.வேலுவின் விருந்தினர் மாளிகையில் 2 நாட்கள் முகாமிட்டிருந்தார். அப்போது, முக்கிய ஆலோசனை நடைபெற்றதாக கூறப்படுகிறது. இதன் எதிரொலியாக, வருமான வரித் துறை சோதனை நடைபெறுவதாகவும் கூறப்படுகிறது. அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, பொன்முடி, நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன் ஆகியோரது வரிசையில் அமைச்சர் எ.வ.வேலு மீதும் வருமான வரித் துறை மற்றும் அமலாக்கத் துறையின் பார்வை விழுந்துள்ளதால் திமுகவில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
25 வாகனங்கள், 75+ அதிகாரிகள்... - திருவண்ணாமலையை அடுத்த தென்மாத்தூரில் உள்ள பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு வீடு மற்றும் அவருக்கு சொந்த கல்வி நிறுவனங்களில் வருமான வரித் துறையினர் வெள்ளிக்கிழமை அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். 25 கார் மற்றும் வேன்களில், மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பாதுகாப்புடன், 75-க்கும் மேற்பட்ட வருமான வரித் துறை அதிகாரிகள், கல்வி நிறுவன வளாகத்தில் காலை சுமார் 6 மணியளவில் நுழைந்தனர். பின்னர் அறக்கட்டளை அலுவலகம், பன்னாட்டு பள்ளி, பொறியியல் கல்லூரி, மருத்துவக் கல்லூரி, வீடு மற்றும் விருந்தினர் மாளிகை என 6 இடங்களில் சோதனையை தொடங்கினர்.
வரி ஏய்ப்பு மற்றும் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக எழுந்த புகாரின் பேரில் சோதனை நடைபெற்றதாக கூறப்படுகிறது. கணினிகளில் செய்யப்பட்டிருந்த பதிவேற்றம் மற்றும் ஆவணங்களை ஆய்வுக்கு உட்படுத்தி வருகின்றனர். அமைச்சர் எ.வ.வேலு, அவரது மனைவி ஜீவா வேலு, மகன் குமரன் மற்றும் இவர்களுக்கு நெருக்கமானவர்களிடம் விசாரணை நடத்தப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளன. இதில், சில முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. வருமான வரித் துறை அதிகாரிகளின் சோதனை தொடர்கிறது. வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவிப்பா அல்லது வரி ஏய்ப்பா என்பது சோதனையின் முடிவில் தெரியவரும். அதன் முழு விவரம் > 25 வாகனங்கள், 75+ அதிகாரிகள்... - தி.மலையில் அமைச்சர் எ.வ.வேலு வீடு, நிறுவனங்களில் தொடரும் வருமான வரி சோதனை
தொண்டர்களுக்கு திமுக அறிவுரை: வருமான வரித் துறை சோதனை நடைபெற்று வரும் அமைச்சர் எ.வ.வேலுவின் வீடு மற்றும் கல்வி நிறுவனங்களில் முன்பு கட்சித் தொண்டர்கள் திரள வேண்டாம் என திமுக தலைமை அறிவுரை வழங்கியுள்ளது. தலைமையின் அறிவுரையை ஏற்று சோதனை நடைபெற்ற இடங்களில் திமுகவினர் திரளவில்லை. அதேநேரம், திருவண்ணாமலை திமுக மாவட்ட செயலாளர் (வடக்கு) தரணிவேந்தன், கலசப்பாக்கம் சட்டப்பேரவை உறுப்பினர் பெ.சு.தி.சரவணன், தலைமை செயற்குழு உறுப்பினர் ஸ்ரீதரன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள், சாரோனில் உள்ள மாவட்ட திமுக அலுவலகத்தில் கூடியிருந்தனர்.
முன்னதாக, அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டுக்கு சோதனையிட வந்த அமலாக்கத் துறையினரை அவரின் ஆதரவாளர்கள் தாக்கினர். இதையடுத்து, துப்பாக்கி ஏந்திய மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பாதுகாப்புடன் இரண்டு துறை அதிகாரிகளும் சோதனை களத்துக்கு செல்ல வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டனர். இதன்பின் தாக்குதல் நடத்திய திமுகவினர் பலர் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது. அப்போது, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு குறித்து அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்தது. இதனால், அமைச்சர்கள் வீட்டில் சோதனை நடக்கும்போது தொண்டர்களை அமைதி காக்க வேண்டும் என தலைமை அறிவுறுத்தியது. அதன்படி அமைச்சர் பொன்முடி மற்றும் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன் ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடைபெற்றபோது திமுகவினர் அமைதி காத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT