Published : 03 Nov 2023 04:46 PM
Last Updated : 03 Nov 2023 04:46 PM

கனமழை எச்சரிக்கை: பழநி, மணிமுத்தாறு, கோவை, திருச்சியில் தயார் நிலையில் 12 பேரிடர் மீட்பு குழுக்கள்

மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் தலைமைச் செயலாளர்  சிவதாஸ் மீனா ஆய்வு மேற்கொண்டார்

சென்னை: இந்திய வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையைத் தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பழநி, மணிமுத்தாறு, கோவை மற்றும் திருச்சியில் தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையின் 400 வீரர்களைக் கொண்ட 12 குழுக்கள் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா, மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டார் வடகிழக்கு பருவமழை அக்.21 அன்று தொடங்கியதிலிருந்து, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் சில மாவட்டங்களில் நவ.3 முதல் நவ.6 முடிய கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா, மாநில அவசரகால செயல்பாட்டு மையத்துக்கு வருகை புரிந்து வடகிழக்கு பருவமழை குறித்து எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஆய்வு செய்தார்.

  • தமிழகத்தில், 01.10.2023 முதல் 02.11.2023 வரை 110.8 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. இது இயல்பான மழையளவைக் காட்டிலும் 40 விழுக்காடு குறைவு ஆகும்.
  • வடகிழக்கு பருவமழைக் காலத்தில் 02.11.2023 முடிய, 1 மாவட்டத்தில் அதிகமான மழைப்பொழிவும், 30 மாவட்டங்களில் குறைவான மழைப்பொழிவும், 7 மாவட்டங்களில் இயல்பான மழைப்பொழிவும் ஏற்பட்டுள்ளது.
  • இன்று (நவ.3) காலை 8.30 மணி முடிய 37 மாவட்டங்களில் மழை பெய்துள்ளது.
  • திருநெல்வேலி மாவட்டத்தில் ராதாபுரம், மாஞ்சோலை மற்றும் காக்காச்சி பகுதிகளிலும், கடலூர் மாவட்டத்தில் அண்ணாமலை நகர் பகுதியிலும் கனமழை பதிவாகியுள்ளது.
  • மாநில, மாவட்ட அவசரகால செயல்பாட்டு மையங்கள் 24 மணி நேரமும் முறையே 1070 மற்றும் 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசிகளுடனும், கூடுதலான அலுவலர்களுடனும் இயங்கி வருகின்றன.
  • பொதுமக்கள், Whatsapp எண்.94458 69848 மூலம் புகார்களை பதிவு செய்யலாம்.
  • TNSMART இணைய தளம் மூலமாக சேகரிக்கப்படும் மழை, நீர்த்தேக்கங்களின் நீர் இருப்பு, பேரிடர்களால் ஏற்படும் சேதங்கள் குறித்து விளக்கப்பட்டது.
  • பேரிடர் காலங்களில் பொதுவான எச்சரிக்கை நடைமுறை (Common Alert Protocol) வாயிலாக பொதுமக்களுக்கு கைபேசி மூலம் வழங்கப்படும் எச்சரிக்கை குறித்தும், கடலோரப் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை அமைப்புகள் வாயிலாக எச்சரிக்கை செய்திகள் ஒலிபரப்பப்படுவது குறித்தும் செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.
  • தமிழகத்தில் உள்ள முக்கிய அணைகளான வைகை, பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, கிருஷ்ணகிரி, சாத்தனூர் அணைகளிலும், சென்னைக்கு குடிநீர் வழங்கும் நீர்த்தேக்கங்களான செங்குன்றம், செம்பரம்பாக்கம் மற்றும் தேர்வாய் கண்டிகை நீர்த்தேக்களில் 75 விழுக்காடுக்கு மேல் நீர் இருப்பு உள்ளதும் தெரிவிக்கப்பட்டது.
  • முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள பழநி, திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மணிமுத்தாறு, கோயம்புத்தூர் மற்றும் திருச்சிராப்பள்ளி ஆகிய மாவட்டங்களில் தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையின் 400 வீரர்கள் கொண்ட 12 குழுக்கள் நிலைநிறுத்தப்பட்டுள்ளன.

03.11.2023 முதல் 06.11.2023 முடிய கனமழை எச்சரிக்கை வரப்பெற்றுள்ள நிலையில் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கடலூர் மற்றும் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர்களிடம் மாநில அவசரகால செயல்பாட்டு மையத்திலிருந்து காணொலி மூலமாக தொடர்பு கொண்டு கனமழையினை எதிர்கொள்ள மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கேட்டறிந்து அறிவுரை வழங்கினார். இந்த ஆய்வின் போது. கூடுதல் தலைமைச் செயலாளர், வருவாய் நிருவாக ஆணையர் எஸ்.கே.பிரபாகர், பேரிடர் மேலாண்மை இயக்குநர், சி.அ.ராமன் ஆகியோர் உடன் இருந்தனர் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x