Published : 03 Nov 2023 06:03 PM
Last Updated : 03 Nov 2023 06:03 PM
காரைக்குடி: “100-வது சுதந்திர தினத்தில் மற்ற நாடுகளை வழிநடத்தும் நாடாக இந்தியா மாறும்” என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பேசினார்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் ஜி20 மாநாடு தலைமை பிரகடனம் மற்றும் அதிநவீன ஆற்றல் தொழில் நுட்பங்கள் குறித்த தேசிய கருத்தரங்கு நடைபெற்றது. நிகழ்ச்சியில் பல்கலைக்கழக துணை வேந்தர் க.ரவி வரவேற்பு வரவேற்புரை நிகழ்த்தினார். இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியது: “பழங்காலத்தில் இந்தியா பொருளாதாரத்தில் மிகவும் முன்னேறிய நாடாக இருந்தது. ஆனால், முகலாயர்கள் ஆட்சிக் காலத்தில் முஸ்லிம் அல்லாதோருக்கு அதிக வரி விதித்தனர். அதைத் தொடர்ந்து வந்த ஆங்கிலேயர்கள் நம் நாட்டின் சொத்துகளை சுரண்டிச் சென்றனர். இதனால் பொருளாதாரம் சரிவடைந்தது. ஆனால், தற்போது உலக அளவில் பொருளாதாரத்தில் வளர்ந்த நாடாக இந்தியா உள்ளது. விரைவில் 100 சதவீதம் மின் இணைப்பை பெற்ற நாடாக மாறும்.
சுதந்திரமடைந்த 70 ஆண்டுகளில் ஏழைகளும், நோய் வாய்ப்பட்டவர்களும் அதிகளவில் இருந்தனர். ஆனால், தற்போது அந்த நிலை மாறி வருகிறது. கடந்த ஆட்சியில் குறிப்பிட்ட சில துறைகளில் மட்டுமே அக்கறை காட்டினர். ஆனால், தற்போது அனைத்து துறைகளையும் இணைத்து மனித இன வளர்ச்சியை மேம்படுத்தி வருகின்றனர். யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பது போல் உலகில் உள்ள அனைத்து மக்களையும் ஒரே மாதிரியாக மத்திய அரசு பார்க்கிறது. 80 சதவீதம் கிராமங்களில் பைபர் கேபிள் மூலம் இணைய வசதி கொடுத்துள்ளோம். தொழில்நுட்ப வசதி பணக்காரர்கள் மட்டுமின்றி அனைத்து மக்களுக்கும் கொண்டு செல்லப்படுகிறது.
50 கோடி மக்களுக்கு மேல் வங்கி கணக்குகள் தொடங்கப்பட்டன. இதன்மூலம் அரசு செயல்படுத்தும் அனைத்து திட்டங்களும் நேரடியாக மக்களுக்கு செல்கின்றன. தேசிய சூரிய சக்தி கூட்டமைப்பு 2016-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. அதில் தற்போது 100-க்கும் மேற்பட்ட நாடுகள் முதலீடு செய்துள்ளன. தற்போது சூரிய சக்தி மூலம் மின்சாரம் உற்பத்தி 25 மடங்கு அதிகரித்துள்ளது.
கடந்த காலங்களில் ஆங்கில மருத்துவத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. ஆயுஷ் திட்டம் நம் நாட்டில் உள்ள இயற்கை மருத்துவத்துக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. ஜிடிபி வளர்ச்சியை விட மனித நலனுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. கடந்த காலங்களில் ஜி20 மாநாட்டில் குறிப்பிட்ட நாடுகள் மட்டுமே பங்கேற்றன. இந்தியா தலைமை ஏற்றதன் மூலம் அனைத்து நாடுகளையும் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. முக்கியமாக, பின்தங்கிய ஆப்பிரிக்கா நாடுகள் இணைக்கப்பட்டுள்ளன.
கரோனா காலக்கட்டத்தில் பல நாடுகள் தடுப்பூசிகளை கண்டறிந்து, அவர்களே பயன்படுத்தி கொண்டனர். ஆனால், இந்தியா 115 நாடுகளுக்கு தடுப்பூசிகளை விநியோகித்து, அனைவருக்கும் கிடைக்கச் செய்தது. நாட்டில் 100 கோடி தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டுள்ளன. நம் நாட்டில் பேரிடர் கட்டமைப்பை வலுப்படுத்தி வருகிறோம். காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள அனைத்து மக்களும் சேர்ந்து பாடுபட வேண்டும். ஹைட்ரஜன் பசுமை எரி சக்தி ஆய்வில் இந்தியா தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதில் அழகப்பா பல்கலை.யும் ஈடுபட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் வரை மாற்று எரிசக்தி மூலம் 131 ஜிகா வாட்ஸ் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது. அது 2030-ம் ஆண்டுக்குள் 500 ஜிகா வாட்ஸாக உயரும்.
மருந்துகள் விலை குறைக்கப்பட்டதால் ஏழைகள் பயன் பெற்று வருகின்றனர். தமிழகம் முன்னேறிய மாநிலமாக உள்ளது. எனினும், பின்தங்கிய பகுதிகளும் உள்ளன. அவற்றை ஒருங்கிணைத்து மத்திய அரசு முன்னேற்றத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
கடந்த காலங்களில் சீனாவுடன் இந்தியா மட்டுமே போட்டியிட்டது. தற்போது அனைத்து நாடுகளுடன் போட்டியிட்டு வருகின்றன. 100-வது சுதந்திர தினத்தில் இந்தியா மற்ற நாடுகளை வழிநடத்தும் நாடாக மாறும். வரும் 2070-க்குள் அணுசக்தி, கார்பன் பூஜ்யமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நாம் இயற்கை வளங்களை அதிகளவில் பயன்படுத்தி வருகிறோம். இனி சூரிய சக்தி போன்ற மாற்று எரி சக்திகளை பயன்படுத்தி இயற்கை வளங்களை பாதுகாக்க வேண்டும்" என்று ஆளுநர் ரவி கூறினார்.
நிகழ்ச்சியின் நிறைவாக பதிவாளர் (பொ) ராஜ்மோகன் நன்றியுரை நிகழ்த்தினார். இந்நிகழ்வில் திருவாரூர் மத்திய பல்கலை, துணை வேந்தர் கிருஷ்ணன், திருச்சி பாரதிதாசன் பல்கலை., செல்வம், கருத்தரங்கு ஒருங்கிணைப்பாளர்கள் ஜெய காந்தன், அருண், அலமேலு உள்ளிடோர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT