Published : 03 Nov 2023 03:27 PM
Last Updated : 03 Nov 2023 03:27 PM
கரூர்: கரூர் - தாந்தோணிமலை பகுதியில் அனுமதியின்றி வைக்கப்பட்ட அண்ணாமலையின் ‘என் மண் என் மக்கள்’ யாத்திரை பதாகைகள் அகற்றப்பட்டன.
கரூரில் இன்று (நவ.3) பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பங்கேற்கும் ‘என் மண் என் மக்கள்’ யாத்திரை நடைபெறுகிறது. கரூர் திருமாநிலையூரில் இருந்து தாந்தோணிமலை வெங்கடரமண சுவாமி கோயில் வளைவு வரை கம்பங்கள் நடப்பட்டு கொடிகள், மின் விளக்குகள் கட்டபட்டு, பதாகைகள் வைக்கப்பட்டிருந்தன. திருமாநிலையூரில் இருந்து சுங்கவாயில் வழியாக தாந்தோணிமலை வரை பல இடங்களில் அனுமதியின்றி பதாகைகள் வைக்கப்பட்டுள்ளதாகக் கூறி மாநகராட்சி ஆணையர் சரவண குமார் தலைமையில் மாநகர திட்ட அலுவலர் அன்பு, மாநகர திட்டஆய்வாளர் தங்கமணி ஆகியோர் மேற்பார்வையில் மாநகராட்சி ஊழியர்கள், கரூர் டிஎஸ்பி சரவணன், பசுபதி பாளையம், தாந்தோணிமலை போலீஸார் பாதுகாப்புடன் பாஜக பதாகைகளை அகற்றினர்.
இது குறித்த தகவலறிந்த பாஜகவினர் அப்பகுதியில் திரண்டனர். பொது இடங்களில் பதாகைகள் வைக்கக் கூடாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால், பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள பதாகைள் அகற்றப்படுவதாகவும், தனியார் பட்டா நிலங்களில் உள்ள பதாகைகள் அகற்றப்படாது எனவும் ஆணையர் சரவண குமார் தெரிவித்தார். இதையடுத்து, போலீஸ் பாதுகாப்புடன் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் வைக்கப்பட்டிருந்த பதாகைகள் அகற்றப்பட்டன. மேலும், பாஜகவினரே அவர்கள் வைத்திருந்த பதாகைகளை அகற்றினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT