Published : 03 Nov 2023 09:45 AM
Last Updated : 03 Nov 2023 09:45 AM
கரூர்: கரூரில் மறைந்த முன்னாள் திமுக மாவட்ட செயலாளர் வாசுகி முருகேசனின் சகோதரி வீடு உட்பட அமைச்சர் எ.வ.வேலுவுக்கு தொடர்புடைய நான்கு இடங்களில் வருமான வரித் துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழகம் முழுவதும் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பெரியார் நகர் பகுதியில் அமைந்துள்ள மறைந்த முன்னாள் கரூர் மாவட்ட திமுக செயலாளர் வாசுகி முருகேசனின், சகோதரி பத்மா என்பவரது வீட்டில் வருமான வரி அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
இதே போல் காந்திபுரம் பகுதியில் அமைந்துள்ள அனெக்ஸ் சுரேஷ் என்பவருக்கு சொந்தமான நிதி நிறுவன அலுவலகம் மற்றும் வையாபுரி நகர் பகுதியில் அமைந்துள்ள அவரது வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது.
மேலும் தோட்டக்குறிச்சி பகுதியில் உள்ள திமுக முன்னாள் சேர்மன் இல்லமான சக்திவேல் இல்லத்திலும் தற்போது சோதனை நடைபெற்று வருகிறது.
மூன்று வாகனங்களில் வந்த சுமார் 10 அதிகாரிகள் நான்கு குழுக்களாகப் பிரிந்து துணை ராணுவப் படை வீரர்கள் பாதுகாப்புடன் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
எங்கெங்கு சோதனை? தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான பல்வேறு இடங்களில் வருமான வரித் துறை இன்று அதிகாலை முதல் சோதனை மேற்கொண்டு வருகிறது. சென்னை, திருவண்ணாமலை, கோவை, கரூர் என தமிழகம் முழுவதும் 80-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெற்று வருவதாகத் தெரிகிறது.
சென்னையில் மட்டும் அண்ணாநகர், தி.நகர், திருமங்கலம் என 11 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. கோவையில் ராமநாதபுரம் பகுதியில் உள்ள பார்சன் குடியிருப்பில் திமுக பிரமுகர் மீனா ஜெயக்குமார் என்பவரது இல்லத்தில் சோதனை நடைபெற்று வருகிறது. கோவையில் சிங்காநல்லூர், ராமநாதபுரம் உள்பட 6 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT