Published : 03 Nov 2023 05:27 AM
Last Updated : 03 Nov 2023 05:27 AM
சென்னை: பருவமழையின்போது, மனித உயிரிழப்பு, கால்நடை இறப்பு மற்றும் சேதமடைந்த குடிசை, வீடுகளுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளதாக வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்தார்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த அக். 21-ம் தேதி தொடங்கியது. அன்றில் இருந்து மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த அக். 1 முதல் நவ. 1-ம் தேதிவரை 101.8 மிமீ மழை பதிவாகியுள்ளது. இது இயல்பைகாட்டிலும் 43 சதவீதம் குறைவாகும். வடகிழக்கு பருவமழை காலத்தில் நவம்பர் 1-ம் தேதி வரை, ஒருமாவட்டத்தில் அதிகம், 32 மாவட்டங்களில் குறைவு மற்றும் 5 மாவட்டங்களில் இயல்பான மழை பெய்துள்ளது. நேற்று காலை 8.30 மணி நிலவரப்படி 33 மாவட்டங்களில் 8.74 மி.மீ. மழை பெய்துள்ளது.
இந்நிலையில், நேற்று பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து நேற்று மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில், அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அவர் கூறியதாவது: வடகிழக்கு பருவமழை காலத்தில் கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக ஏற்படும் பாதிப்புகளை தவிர்த்திட தேவையான அனைத்துமுன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கை: பேரிடர் காலங்களில் தங்குதடையின்றி எரிபொருள் கிடைக்கவும், தொலைத்தொடர்பு சேவைகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அனைத்து மாவட்டங்களுக்கும், சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களுக்கும், கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மாநில, மாவட்ட அவசரகால செயல்பாட்டு மையங்கள் 24 மணிநேரமும் 1070 மற்றும் 1077 என்றகட்டணமில்லா தொலைபேசி எண்கள், கூடுதலான அலுவலர்களுடன் இயங்கி வருகின்றன. பொதுமக்கள் 94458 69848 என்ற வாட்ஸ் அப் எண்ணில் புகார் அளிக்கலாம்.
அனைத்து மாவட்டங்களிலும், தேடல், மீட்பு உபகரணங்கள் மற்றும் நிவாரணப் பொருட்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
பாதுகாப்பு மையங்கள்: கடலோர மாவட்டங்களில் 1.13 லட்சம் பேர் தங்கும் வகையில் 121 பல்நோக்கு பாதுகாப்பு மையங்கள் உள்பட 4967 நிவாரண முகாம்கள் தயாராக வைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையின் 400 வீரர்கள் கொண்ட 12 குழுக்கள் பல்வேறு மாவட்டங்களில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன.
இதுதவிர, மனித உயிரிழப்பு, கால்நடை இறப்பு மற்றும் சேதமடைந்த குடிசை, வீடுகளுக்கு உடனடியாக நிவாரணம் வழங்கவும் மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT