Published : 03 Nov 2023 05:36 AM
Last Updated : 03 Nov 2023 05:36 AM

பெரம்பலூர் தாக்குதல் சம்பவத்துக்கு அமைச்சர் சிவசங்கரின் தூண்டுதலே காரணம்: பாஜக பட்டியல் அணி மாநில தலைவர் குற்றச்சாட்டு

பெரம்பலூர்: பெரம்பலூர் ஆட்சியர் அலுவலகத்தில் கல் குவாரி ஏலத்துக்கு விண்ணப்பிக்க வந்த பாஜகவினரையும், அரசு அலுவலர்களையும் திமுகவினர் தாக்கினர். இது தொடர்பான புகாரில் திமுகவைச் சேர்ந்த 13 பேரை போலீஸார் நேற்று முன்தினம் கைது செய்தனர். மேலும், அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கரின் உதவியாளர் மகேந்திரன், திமுக எம்எல்ஏ பிரபாகரனின் உதவியாளர் சிவசங்கர் உள்ளிட்டோரைத் தேடிவருகின்றனர்.

இந்நிலையில், தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய வலியுறுத்தி பாஜக தொழில் துறை பிரிவு துணைத் தலைவர் கலைச்செல்வன், பெரம்பலூர் நகர காவல்நிலையத்தில் நேற்று மனு அளித்தார்.

அவருடன் வந்திருந்த பாஜகபட்டியல் அணி மாநிலத் தலைவர்தடா பெரியசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்த தாக்குதல் தொடர்பாக தேசிய பட்டியலினத்தவர், பழங்குடியினர் ஆணையத்தில் புகார் அளிக்க உள்ளோம்.

ஏலத்தில் கலந்து கொள்ள வந்த, பட்டியலினத்தைச் சேர்ந்த பாஜகவினரை திமுகவினர் சரமாரியாகத் தாக்கியுள்ளனர். ஆடையைக் கழற்றி அவமரியாதை செய்துள்ளனர். அமைச்சர் சிவசங்கரின் உதவியாளர் மகேந்திரன், எம்எல்ஏ பிரபாகரனின் உதவியாளர் சிவசங்கர் உள்ளிட்டோர் நேரடியாக ஈடுபட்டுள்ளனர்.

இந்த சம்பவத்துக்கு அமைச்சர் சிவசங்கரின் தூண்டுதல்தான் காரணம். எனவே, அவர்மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்ய வேண்டும். வழக்கில் தொடர்புடைய முக்கியக் குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும். இந்த சம்பவத்துக்கு ஆட்சியர், எஸ்.பி. ஆகியோர் விளக்கம் அளிக்க வேண்டும்.

கண்டன ஆர்ப்பாட்டம்: இதைக் கண்டித்து பாஜக மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் தலைமையில் பெரம்பலூரில் நாளை (இன்று) ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும், பெரம்பலூரில் வரும்8-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தஅனுமதி கோரி, எஸ்.பி. ஷ்யாம்ளா தேவியிடம், மாவட்டச்செயலாளர் தமிழ்ச்செல்வன் தலைமையிலான அதிமுகவினர் நேற்று மனு அளித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x