Published : 03 Nov 2023 04:00 AM
Last Updated : 03 Nov 2023 04:00 AM
தருமபுரி: தருமபுரி அருகே பெருங்கற்கால ஈமச் சின்னங்கள் அடங்கியுள்ள பகுதியைச் சுற்றி தொல்லியல் துறை சார்பில் பாதுகாப்பு வேலி அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டம் பங்குநத்தம் கிராமத்தின் அருகே 2 சிறு கரடுகள் உள்ளன. இந்த கரடுகளை உள்ளடக்கிய 24.85 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட சுற்று வட்டாரப் பகுதிகளில் பெருங்கற்கால ஈமச் சின்னங்களான கல்வட்டங்கள் அமைந்துள்ளன. 10 முதல் 20 அடி வரையிலான விட்டங்கள் கொண்டவையாக இங்கு 100-க்கும் மேற்பட்ட கல்வட்டங்கள் இருந்துள்ளன.
பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு, இறந்தவர்களை அடக்கம் செய்து அப்பகுதியைச் சுற்றி பெரிய கற்களைக் கொண்டு இந்த கல்வட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. புதையல் தேடுபவர்கள், சமூக விரோத நபர்கள் போன்ற சிலரால் இந்த கல்வட்டங்கள் அவ்வப்போது சிதைக்கப்பட்டு வந்துள்ளன.
மேலும், வேளாண் தேவைகளுக்காகவும் இப்பகுதி நிலம் ஆங்காங்கே உள்ளூர் மக்களின் பயன்பாட்டில் இருந்து வந்தது. இதற்கிடையில், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கல்வட்டங்கள் அமைந்துள்ள இப்பகுதியை, புராதன சின்னங்கள் மற்றும் தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் மற்றும் எச்சங்கள் என்ற சட்டத்தின் கீழ் தமிழக தொல்லியல் துறை பாதுகாக்கப்பட்ட இடமாக அறிவித்தது.
அதைத் தொடர்ந்து, 24.85 ஹெக்டெர் நிலப்பரப்பு அளவீடு செய்யப்பட்டு உள்ளூர் மக்களின் பயன்பாட்டில் இருந்து மீட்கப்பட்டது. மேலும், இப்பகுதியைச் சுற்றி பல இடங்களில் தமிழக தொல்லியல் துறை சார்பில் பாதுகாக்கப்பட்ட பகுதி என்பதை வலியுறுத்தும் அறிவிப்பு பலகைகளும் நிறுவப்பட்டன.
இருப்பினும், இப்பகுதியில் மது அருந்துவோர் போன்ற வெளி நபர்களின் நடமாட்டத்தை முழுமையாக தடுக்கும் நோக்கத்தில் தற்போது இப்பகுதியைச் சுற்றி அடிமட்ட சுற்றுச் சுவர் அமைத்து அதன் மீது இரும்பினாலான 5 அடி உயரம் கொண்ட வேலி அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
தொல்லியல் துறையின் சென்னை அலுவலக உதவி பொறியாளர் ராஜேஷ் என்பவர் மேற்பார்வையில் இப்பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது குறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘தற்போது ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிதிக்கு ஏற்ப சுற்றுச் சுவர் மற்றும் கிரில் வேலி அமைக்கும் பணி அண்மையில் தொடங்கி நடந்து வருகிறது. அடுத்தடுத்த நிதி ஒதுக்கீடுகளில் மொத்த பரப்பைச் சுற்றிலும் சுற்றுச் சுவருடன் கூடிய கிரில் வேலி அமைத்துவிட முடியும்’ என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT