Published : 16 Jan 2018 10:11 PM
Last Updated : 16 Jan 2018 10:11 PM
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியை பாதுகாப்பாக நடத்த இங்கு நிரந்தர ஜல்லிக்கட்டு மைதானம் அமைக்க முதல்வரிடம் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார்.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியை இன்று முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
அப்போது துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பேசுகையில், ''ஜல்லிக்கட்டு காளைகளை வளர்ப்பது ஒரு பொழுதுபோக்கு மட்டுமில்லை அது நம்முடைய கலாச்சாரம். ஜல்லிக்கட்டு நடக்க பல்வேறு தடைகள் இருந்தன. மறைந்த முதல்வர் ஜெயலலிதா சட்டப் போராட்டம் நடத்தி உச்ச நீதிமன்றம் தடை நீக்குவதற்கு உறுதுணையாக இருந்தார். ஜல்லிக்கட்டு இருக்கும் வரை இந்த சாதனை நிலைத்து நிற்கும். அதனாலே தற்போது உலகமே வியக்கும் வண்ணம் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நடக்கிறது. ஒராண்டு இரண்டு ஆண்டுகள் மட்டுமில்லை, ஆயிரம் ஆண்டிற்கு மேலாக இந்த ஜல்லிக்கட்டுப்போட்டிகள் தொடர்ந்து நடக்கும். ஜல்லிக்கட்டு விளையாட்டை மாடுபிடி வீரர்கள் கவனமாகவும், பொறுப்பாகவும் விளையாட வேண்டும்'' என்றார்.
அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசுகையில், ''ஒரு முதல்வர் , துணை முதல்வர் ஆகியோர் நேரடியாக ஒரு கிராமத்திற்கு வந்து ஒரு விளையாட்டை தொடங்கி வைத்த வரலாறு உண்டு என்றால் அது அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டாகதான் இருக்கும்'' என்றார்.
முதல்வர் பழனிசாமி பேசுகையில், ''தமிழக அரசின் நடவடிக்கையால் ஜல்லிக்கட்டு விளையாட்டை இன்று இந்தியா மட்டுமில்லை, உலகம் முழுவதும் மக்கள் ரசித்துப் பார்க்கிறார்கள். ஜல்லிக்கட்டில் ஒரு காளைக்கு கூட ஒரு சிறு தீங்கு வராது. ஒரு குழந்தையைப்போல் காளைகளை அதன் உரிமையாளர்கள் வளர்க்கிறார்கள். இந்த ஜல்லிக்கட்டுப்போட்டியை பாதுகாப்பது நமது வீரத்தையும், பாரம்பரியத்தையும் பாதுகாப்பதற்கு சமம்'' என்றார்.
ஜல்லிக்கட்டுப் போட்டியை பார்த்துவிட்டு புறப்படும்போது செய்தியாளர்களிடம் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறுகையில், ''ஜல்லிக்கட்டுப் போட்டி தமிழகத்திற்கு பெருமை சேர்க்கும் விளையாட்டு. இந்த விளையாட்டை பாதுகாப்பாக நடத்த இங்கு நிரந்தர ஜல்லிக்கட்டு மைதானம் அமைக்க முதல்வரிடம் ஆலோசித்து முடிவெடுப்போம்'' என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT