Published : 03 Nov 2023 06:05 AM
Last Updated : 03 Nov 2023 06:05 AM

வேலைக்காக வெளிநாட்டுக்கு செல்பவர்கள் முழு விவரங்களை அறிந்து செல்ல வேண்டும்: அமைச்சர் செஞ்சி மஸ்தான் அறிவுறுத்தல்

சென்னை: அயலகத் தமிழர் நலத்துறை மற்றும் புனர்வாழ்வு துறை, தமிழக உள்நாட்டு தொழிலாளர் நல அறக்கட்டளை ஆகியன சார்பில், புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்காக நியாயமான நெறிமுறைப்படி ஆட்கள் தேர்வு மற்றும் சமூக பாதுகாப்பு குறித்த ஆலோசனைக் கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசியதாவது:

தமிழகத்தில் இருந்து வெளிநாட்டுக்கு வேலை தேடி செல்கிறவர்கள், எந்த நாட்டுக்கு, எந்த பணிக்கு, எவ்வளவு ஊதியத்தில் செல்கிறோம் என்பதை அறிந்து செல்ல வேண்டும். இதற்காக, பதிவு செய்து செல்ல வேண்டும். மேலும், திறன் மேம்பாட்டை உருவாக்கி செல்ல வேண்டும். வெளிநாட்டு பணிக்கு செல்பவர்களுக்காக பாதுகாப்பான சட்டத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. அதை தெரிந்து கொள்ளவேண்டும்.

உக்ரைன் போர், இஸ்ரேல் போர் வேளையில் அந்த நாடுகளில் சிக்கிய தமிழர்களை மீட்டு வந்தோம். வேலைக்காக வெளிநாடுகளுக்குச் சென்று ஏமாற்றப்பட்டவர்களும் காப்பாற்றப்பட்டுள்ளனர். யார் மூலமாக ஏமாற்றப்பட்டார்கள் என்பதை புகாராக பெற்று அதன்மீது காவல் துறை நடவடிக்கை எடுக்கப்படுகிறது. சிலருக்கு நஷ்டஈடு பெற்று தரப்பட்டுள்ளது. வெளிநாட்டுக்கு வேலைக்குசெல்பவர்கள் ஏமாறக் கூடாது என்பதற்காக விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

இஸ்ரேல் நாட்டில் இருந்து 163 பேர் வந்துள்ளனர். மேலும் யாராவதுவிருப்பம் தெரிவித்தால், அழைத்து வருவோம் என்று அவர் பேசினார். அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை ஆணையர் ஜெசிந்தா லாசரஸ் பேசும்போது, “வெளிநாட்டு வேலைக்காக படிக்காதவர்கள் மட்டுமின்றி படித்தவர்களும் சென்று ஏமாற்றப்பட்டுள்ளனர்.

துபாயில் வேலை தொடர்பாக முகநூலில் விளம்பரம் பார்த்து, ரூ.2 லட்சம் சம்பளம் என நம்பி சென்று ஏமாற்றப்பட்டுள்ளனர். முதலில் 5 நட்சத்திர விடுதியில் தங்கவைத்து, பிறகு நாடு மாற்றி அங்கு ஆன்லைன் முறைகேடு செய்ய துன்புறுத்தப்பட்டுள்ளனர். இதுபோல துன்பத்தில் சிக்கிய 100-க்கும் மேற்பட்டவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். வெளிநாட்டு வேலைக்கு செல்ல விருப்பப்படுபவர்கள் இந்த வேலை சரியானதா என்பதை முதலில் சோதிக்க வேண்டும்” என்றார்.

நிகழ்ச்சியில், கலாநிதி வீராசாமி எம்பி, அயல்நாட்டு வேலை வாய்ப்புநிறுவன மேலாண்மை இயக்குநர் மகேஸ்வரன், சென்னை வெளி விவகாரத் துறை அமைச்சக கிளை செயலக தலைவர் வெங்கடாச்சலம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x