Published : 02 Nov 2023 06:36 PM
Last Updated : 02 Nov 2023 06:36 PM
சென்னை: கடலூர் மாவட்டத்தில், சோளம் பயிரிட்டு பாதிப்படைந்த விவசாயிகளுக்கு, ஏக்கர் ஒன்றுக்கு குறைந்தபட்சம் 20,000 ரூபாய் நிவாரணமாக அரசு வழங்க வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்த ஆண்டு பருவ மழை பொய்த்ததால் தமிழகமெங்கும் விவசாயம் பாதிக்கப்பட்டு விவசாயிகள் மிகவும் பாதிப்படைந்துள்ளனர். அதேபோல், விவசாயத் தொழிலாளர்களும் வேலை வாய்ப்பின்றி, போதிய வருமானமின்றி தவித்து வருகின்றனர்.போதிய மழை பெய்யாததால் மானாவாரி பயிரான சோளத்தை விவசாயிகள் கடன் வாங்கி பயிரிட்டிருந்தனர். இவ்வாறு சோளம் பயிரிட்ட பல இடங்களில் மழை பொய்த்ததாலும், கடுமையான வெயிலாலும் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களில் பயிரிடப்பட்ட சோளம் காய்ந்து கருகியுள்ளது.
குறிப்பாக, கடலூர் மாவட்டம், விருத்தாசலம், திட்டக்குடி, வேப்பூர் ஆகிய தாலூகாக்களில் சுமார் 60 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த சோளம் முழுமையாகக் கருகி விவசாயிகள் பெரும் நஷ்டத்துக்குள்ளாகி உள்ளனர். பயிர் காப்பீடு செய்யப்படாத நிலையில், கடன் வாங்கி சோளம் பயிரிட்ட விவசாயிகள், வாங்கிய கடனை திருப்பிக் கட்ட முடியாத நிலையில், தாங்கள் பாடுபட்டு உழைத்த உழைப்பும் வீணாகிவிட்டதே என்ற கவலையில் ஆழ்ந்துள்ளனர். எனவே, பாதிக்கப்பட்ட விவசாயிகள் கடலூர் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து தங்களது சோளப் பயிர் முழுமையாகக் கருகியதை விளக்கி, பாதிக்கப்பட்ட சோளப் பயிருக்கு உரிய நிவாரணம் வழங்க வலியுறுத்தியதாகவும், ஆனால், இதுவரை எந்தவித நடவடிக்கையும் திமுக அரசின் சார்பாக எடுக்கப்படவில்லை
என்று செய்திகள் தெரிய வருகின்றன.
கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த, திமுக அரசின் வேளாண் துறை அமைச்சர் இதுவரை சோளம் பாதிக்கப்பட்ட நிலங்களை நேரில் சென்று பார்வையிடவில்லை.வேளாண் துறை அதிகாரிகளும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க எந்தவிதமான நடவடிக்கைகளிலும் ஈடுபடவில்லை.எனவே, திமுக அரசின் வேளாண் துறை அமைச்சர், உடனடியாக வேளாண்மைத் துறை மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகளை நேரில் அனுப்பி, பாதிக்கப்பட்ட நிலங்களை கணக்கெடுப்பு நடத்தி, சோளம் பயிரிட்டு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வலியுறுத்துகிறேன். சோளம் பயிரிட்டு பாதிப்படைந்த விவசாயிகளுக்கு, ஏக்கர் ஒன்றுக்கு குறைந்தபட்சம் 20,000 நிவாரணமாக வழங்க வேண்டும் என்று திமுக அரசின் முதல்வரை வலியுறுத்துகிறேன்" என்று அவர் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT