Published : 02 Nov 2023 05:22 PM
Last Updated : 02 Nov 2023 05:22 PM
மதுரை: பெண்கள் உயர் கல்விக்கு உதவும் வகையில் தமிழக அரசு ரூ.1000 வழங்குவது பாராட்டுக்குரிய திட்டம் என காமராசர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற மும்பை நிகர் நிலை பல்கலைக்கழக துணை வேந்தர் காமாட்சி முதலி பாராட்டு தெரிவித்தார்.
மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் 55-வது பட்டமளிப்பு விழா மு.வ.அரங்கில் இன்று நடந்தது. இவ்விழாவை தமிழ்நாடு உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி புறக்கணித்தார். இவ்விழா காலை 10.40 மணிக்கு தொடங்கியது. தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, மும்பை நிகர் நிலை பல்கலைக்கழக துணை வேந்தர் காமாட்சி முதலி, பதிவாளர் ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர். பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெ.குமார் வரவேற்று பேசினார்.
இதைத் தொடர்ந்து விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற மும்பை எச்பிஎன்ஐ மற்றும் நிகர்நிலை பல்கலைக்கழக துணைவேந்தர் யூ.காமாட்சி முதலி பேசியது: ''இந்தியா கடந்த 10 ஆண்டுகளில் தொழில், கல்வி, பொருளாதாரம், மின்சாரம், பாதுகாப்பு போன்ற நிலையில் வளர்ச்சி பெற்றுள்ளது. பெண்கள் இன்றி நாடு வளர்ச்சி பெறாது என சுவாமி விவேகானந்தர் கூறியபடி, பெண்கள் நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியம். அவர்களுக்கான முன்னேற்றத்துக்கு கல்வி ஒன்றே ஒரே வழி. பெண்கள் உயர் கல்வியை அதிகம் படிக்கின்றனர்.
கிராமங்களில் பெண்கள் உயர் படிப்பில் சேருவதற்கு போதிய பொருளாதாரமின்றி, அரசு பள்ளிகளில் படித்த மாணவிகள் உயர் கல்வியில் சேருவதற்கு உதவும் வகையில் தமிழக அரசு மாதந்தோறும் ரூ.1000 வழங்குவது பாராட்டுக்குரிய திட்டம். ஆனாலும், வரலாற்று ரீதியில் பெண்களுக்கு எதிரான தாக்குதல், முன்னேற்றத்தில் தடை உள்ளது. இந்நிலை மாற வேண்டும்.
மின்சார உற்பத்தியில் நாடு தன்னிறைவு பெற வேண்டும். மொத்த மின் உற்பத்தியில் 2 அல்லது 3 சதவீதமே அணு உலை மூலம் மின்சாரம் கிடைக்கிறது. உலக மக்கள் தொகையில் 66 சதவீதம் பேர் 35 வயதுக்குள் இருக்கும் இளைஞர்கள். இவர்களை முறையாக வழி நடத்தினால் நாட்டின் வளர்ச்சிக்கு உதவச் செய்யலாம். உத்தரவாதம் என்பது வாழ்க்கைக்கு உதவாது. கிடைக்கும் வாய்ப்புக்களை பயன்படுத்திக் கொள்ளவேண்டும். இதன்மூலம் இந்தியாவை வளர்ச்சி பாதைக்கு மாற்றலாம்.
இந்தியாவின் வளர்ச்சிக்கு புதிய கண்டுபிடிப்புகள், படைப்பாற்றல் திறன் தேவை. எப்போதும், கல்வி, தொழில் நுட்பம், சிந்தனைகள் சாதாரண மக்களின் முன்னேற்றத்துக்கு உதவ வேண்டும். இது கிராமப்புற மக்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தும். எந்தத் தொழில், பணியாக இருந்தாலும், மனிதநேயமும் இருக்கவேண்டும்'' என்று அவர் பேசினார்.
இதைத் தொடர்ந்து ஆளுநர் முதுநிலை, பிஎச்டி மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். நிகழ்ச்சியின் இறுதியில் ஆளுநர் தலைமையில் உறுதிமொழி ஏற்கப்பட்டது. காலை 10.40-க்கு தொடங்கிய விழா மதியம் 1 மணிக்கு முடிந்தது. இதன்பின், பல்கலை வளாகத்தில் சிறந்த, பதக்கம் பெற்ற மாணவ, மாணவிகளுடன் ஆளுநர் 30 நிமிடம் கலந்துரையாடல் செய்தார். பட்டமளிப்பு விழாவில் பல்கலைக்கழக பதிவாளர் ராமகிருஷ்ணன், தேர்வாணையர் தர்மராஜ், சிண்டிகேட் உறுப்பினர்கள் தவமணி கிறிஸ்டோபர், நாகரத்தினம், தங்கராஜ் மற்றும் மதுரை ஆட்சியர் சங்கீதா உள்ளிட்ட பேராசிரியர்கள், அலுவலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பாதுகாப்பு அதிகரிப்பு: சுதந்திர போராட்ட தியாக சங்கரய்யாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்க பல்கலைக்கழக சிண்டிக்கேட், சென்ட் 2 முறை பரிந்துரை செய்தும், இதற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அனுமதி அளிக்காததால் தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி இவ்விழாவை புறக்கணித்தார். மேலும், ஆளுநரின் வருகைக்கு எதிர்ப்பு அதிகரித்தால் பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டு இருந்தது. விழா நடக்குமிடம், நுழைவு வாயில் பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. சுமார் 200 மீட்டருக்கு முன்பே வாகனங்கள் அனைத்து நிறுத்தப்பட்டு, விழாவுக்கு செல்வோர், பட்டம் பெறும் மாணவர்கள், பெற்றோர் அனுமதிக்கப்பட்டனர்.
காலி இருக்கைகள்: விழாவில் பங்கேற்க மாணவர் ஒருவரின் குடும்பத்தினர் திமுக கொடி கட்டிய காரில் வந்தனர். அவர்களுக்கு காவல் துறையினர் அனுமதி மறுத்தனர். கொடியை காருக்குள் கழற்றி வைக்க அறிவுறுத்தினர். விழாவுக்கு செல்வோர் அனைவரும் வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீஸார் சோதனை செய்தல் போன்ற கெடுபிடிகளும் அதிகமாகவே இருந்தது. சிண்டிகேட் உறுப்பினர்கள் 6 பேரில் 3 பேர் பங்கேற்றனர். செனட் உறுப்பினர்கள் சிலர் பங்கேற்கவில்லை. இவர்களுக்கென ஒதுக்கிய இருக்கைகள் காலியாக இருந்தன. உதவி பேராசிரியர்கள் சுரேஷ், ரமேஷ்ராஜ் ஆகியோர் ஆளுநர் கையில் இருந்து முனைவர் பட்டம் பெற மறுத்து, பங்கேற்வில்லை என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
பட்டம் பெற்றவர்கள் விவரம்: இந்த பட்டமளிப்பு விழா மூலம் 1,34,570 பேருக்கும் பட்டம் வழங்கப்பட்டுள்ளது. இவற்றில் 1,11,144 மாணவ, மாணவிகள் செமஸ்டர் தேர்வு எழுதியவர்கள். 22,782 பேர் அஞ்சல் வழியில் பயின்று தேர்ச்சி பெற்றவர்கள். 640 பேர் பிஎச்டி பட்டமும், 2 டிஎஸ்சி பட்டமும், ஒருவர் டிலிட் பட்டமும் பெற்றுள்ளனர். மொத்ததில் 62,598 மாணவர்களும், 71,328 பேர் மாணவிகளும் அடங்குவர். 142 பேர் மெடல் பட்டியல் இடம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அனுமதி மறுப்பும் அதிருப்தியும்: பட்டமளிப்பு விழாவைத் தொடர்ந்து பதக்கம் வென்ற மாணவ, மாணவிகளுடன் ஆளுநர் ஆர்.என்.ரவி கலைந்துரையாடல் நடத்தினார். இந்நிகழ்வில் பேராசிரியர்கள், பத்திரிகையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் அதிருப்தி எழுந்தது. இவ்விழாவில் பங்கேற்ற தமிழ்நாடு ஆளுநரும், பல்கலைக்கழக வேந்தருமான ஆர்.என்.ரவி, மாணவ - மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். இதன்பின், விழாவில் ஆளுநர் பேசுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் பேசவில்லை. இருப்பினும், பட்டமளிப்பு விழாவில் பட்டத்துடன் பதக்கம் வென்ற மாணவ, மாணவிகள் 140-க்கும் மேற்பட்டோருடன் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துரையாடல் நடத்தும் நிகழ்வுக்கு திடீரென ஏற்பாடு செய்யப்பட்டது.
பல்கலைக்கழக வளாகத்திலுள்ள அப்துல் கலாம் அரங்கில் இக்கலந்துரையாடல் நடந்தது. இதில் பங்கேற்ற மாணவ, மாணவிகள் தீவிர பரிசோதனைக்கு பிறகே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். சுமார் 30 நிமிடம் வரை நடந்த இந்நிகழ்வில் பல்கலை பேராசிரியர்கள், அலுவலர்கள் யாரும் பங்கேற்க அனுமதிக்கவில்லை. பத்திரிகையாளர்கள், புகைப்படக்காரர்களும் கலந்துரையாடல் நிகழ்வின்போது, பங்கேற்க முயன்றும் அனுமதி மறுக்கப்பட்டது. இது பத்திரிகையாளர்கள், பேராசிரியர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. இருப்பினும், கலந்துரையாடலில் பங்கேற்ற மாணவ, மாணவிகளிடம் அவர்களின் எதிர்கால படிப்பு, வேலை வாய்ப்பு போன்ற அறிவுரைகளை ஆளுநர் தெரிவித்திருக்கலாம் என கூறுப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT