Published : 02 Nov 2023 04:10 PM
Last Updated : 02 Nov 2023 04:10 PM
சென்னை: "தமிழக அரசு மேற்கொண்ட பல்வேறு வெள்ளத் தணிப்பு பணிகளின் காரணமாக 4,399 ஆக இருந்த பாதிப்புக்கு உள்ளாகும் பகுதிகள், தற்போது 3770 ஆக குறைந்துள்ளது" என்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமசந்திரன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் இன்று (நவ.2) மாவட்ட அவசரகால செயல்பாட்டு மையத்தில் ஆய்வு மேற்கொண்டார். பேரிடர் காலங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அலுவலர்களுக்கு அமைச்சர் அறிவுரை வழங்கினார்.
தமிழக அரசு மேற்கொண்ட பல்வேறு வெள்ளத்தணிப்பு பணிகளின் காரணமாக 4399 ஆக இருந்த பாதிப்புக்கு உள்ளாகும் பகுதிகள், தற்போது 3770 ஆக குறைந்துள்ளது. வெள்ளத்தணிப்பு பணிகளுக்காக 2022-23 மற்றும் 2023-24 ஆண்டுகளில் சென்னை மாநகராட்சி, நகராட்சி நிருவாகம் மற்றும் நீர்வள ஆதாரத் துறை ஆகிய துறைகளுக்கு 819.50 கோடி நிதிஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முதல்வரின் அறிவுரையின் பேரில் வடகிழக்கு பருவமழையை திறம்பட எதிர்கொள்ள பின்வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மாவட்ட ஆட்சியர்களுக்கான அறிவுரை: பாதிப்புக்குள்ளாகக் கூடிய பகுதிகளுக்கென பல்துறை மண்டலக் குழுக்கள் அமைத்து கண்காணிக்கவும்; பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளில் உள்ள பொதுமக்களை வெளியேற்றும் போது மாற்றுதிறனாளிகள், கர்ப்பிணி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு முன்னுரிமை அளிக்கவும்; நிவாரண முகாம்களில் பாதுகாக்கப்பட்ட குடிநீர், மருத்துவ வசதி, மின்சாரம் மற்றும் இதர அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கவும்;பேரிடர் காலங்களில் பொதுமக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் கிடைக்கவும்; மின்கசிவினால் ஏற்படும் விபத்துகளை தவிர்க்கவும்;பள்ளி மாணவர்களின் பாதுகாப்பினை உறுதி செய்திடவும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
நோய்த்தொற்று ஏற்படாமல் இருக்கவும்; நோய்த்தொற்று பரவலைத் தடுக்கவும்; மருத்துவமனைகளில் போதுமான மருந்து இருப்பு வைக்கவும்; பலவீனமான மற்றும் சேதமடைந்த கட்டடங்களை பொதுமக்கள் பயன்படுத்தாத வகையில் தடுப்பு ஏற்படுத்தி, பாதுகாப்பாக இடித்து அப்புறப்படுத்தவும்; பலவீனமான மரக்கிளைகள், விழும் நிலையில் உள்ள மரங்களை அப்புறப்படுத்தவும் மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. மனித உயிரிழப்பு, கால்நடை இறப்பு மற்றும் சேதமடைந்த குடிசை, வீடுகளுக்கு உடனடியாக நிவாரணம் வழங்கவும் மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
மேலும், பேரிடர் காலங்களில் தேவையான அலுவலர்களை தொடர்பு கொள்ளும் வகையில் தமிழ்நாடு பேரிடர் அபாயக் குறைப்பு முகமையால் தயாரிக்கப்பட்ட தொலைபேசி கையேட்டை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் வெளியிட்டார்.இந்த ஆய்வின் போது கூடுதல் தலைமைச் செயலாளர், வருவாய் நிருவாக ஆணையர் எஸ்.கே. பிரபாகர், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை செயலாளர் வே. ராஜாராமன், பேரிடர் மேலாண்மை இயக்குநர், சி. அ. ராமன், ஆகிய அலுவலர்கள் உடன் இருந்தனர் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT