Published : 02 Nov 2023 03:18 PM
Last Updated : 02 Nov 2023 03:18 PM

‘தமிழ்நாடு டிஜிட்டல் மயமாக்கல் வியூகம்’ ஆவணம் - முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்

"தமிழ்நாடு டிஜிட்டல் மயமாக்கல் வியூகம்" ஆவணத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

சென்னை: "தமிழ்நாடு டிஜிட்டல் மயமாக்கல் வியூகம்" ஆவணத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். அரசின் துறைகள் தங்களுக்கான டிஜிட்டல் உருமாற்ற வியூகம் உருவாக்குவதற்கும், அதனை செயல்படுத்துவதற்கும் ஒரு வழிகாட்டியாக இந்த ஆவணம் பயன்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (நவ.2) தலைமைச் செயலகத்தில், தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை சார்பில் தமிழ்நாடு டிஜிட்டல் மயமாக்கல் வியூகம் (Tamil Nadu Digital Transformation Strategy - DiTN) ஆவணத்தை வெளியிட்டார். 2021-22ஆம் ஆண்டுக்கான தகவல் தொழில்நுட்பவியல் துறை மானியக் கோரிக்கையில், விரைவான, கண்காணிக்கக்கூடிய, அணுகக்கூடிய மற்றும் பதிலளிக்கும் வகையிலமைந்த, வெளிப்படையான நிருவாகத்தைக் குடிமக்களுக்கு வழங்குவதை நோக்கமாகக் கொண்டு, மின்னாளுகையைப் படிப்படியாக அரசின் அனைத்து மட்டங்களிலும் புகுத்தி, அதன்மூலம் முழுமையானதொரு அரசாங்கத்தை எய்திடும் வகையில் “டிஜிட்டல் தமிழ்நாடு திட்டம்” செயல்படுத்தப்படும். மக்களுடன் நேரடித் தொடர்பு கொண்ட மற்றும் அவர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தும் அரசுத் துறைகளின் செயல்பாடுகள் படிப்படியாக மின்மயமாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அந்த அறிவிப்புக்கிணங்க, தமிழக அரசின் ஆளுமை மற்றும் நிர்வாகத்தின் செயல்திறனை மேம்படுத்திடவும், டிஜிட்டல் ஆளுமை மற்றும் அரசின் சேவை வழங்கலை மேம்படுத்துவதற்காகவும், தற்போதுள்ள மற்றும் எதிர்கால கொள்கைகள், நடைமுறைகள் மற்றும் அமைப்புகளைக் கருத்தில் கொண்டும் தமிழகத்தில் முதல்முறையாக தமிழ்நாடு டிஜிட்டல் மயமாக்கல் வியூகம் (DiTN) வகுக்கப்பட்டுள்ளது. அரசின் துறைகள் தங்களுக்கான டிஜிட்டல் உருமாற்ற வியூகம் உருவாக்குவதற்கும், அதனை செயல்படுத்துவதற்கும் ஒரு வழிகாட்டியாக தமிழ்நாடு டிஜிட்டல் மயமாக்கல் வியூக ஆவணம் பயன்படும்.

அனைத்துத் துறைகளும் தங்களது முக்கிய செயல்திறன் குறிகாட்டிகள் (Key Performance Indicators) மற்றும் பயன்களை (Outcomes) எய்துவதற்கு தமிழ்நாடு டிஜிட்டல் மயமாக்கல் வியூகம் உதவும். மேலும், தமிழக மக்களுக்கு விரைவான, கண்காணிக்கக்கூடிய, அணுகக்கூடிய, பதிலளிக்கக்கூடிய மற்றும் வெளிப்படையான (SMART Swift Monitorable, Accessible, Responsive and Transparent) நிர்வாகத்தை வழங்கும். தமிழ்நாடு டிஜிட்டல் மயமாக்கல் வியூகம், டிஜிட்டல் முதிர்ச்சியை மதிப்பிடுவது முதல் தகவல்தொழில்நுட்ப வியூகத்தைச் செயல்படுத்துவது வரையிலான அனைத்து வழிகாட்டுதல்களையும் வழங்கும்.

தமிழகத்தில் டிஜிட்டல் மயமாக்கும் செயல்முறையை மேலும் வலுப்படுத்துதல், தொலைதூர இடங்கள் உட்பட மாநிலம் முழுவதும் தேவையான டிஜிட்டல் உள்கட்டமைப்பை பொதுமக்களுக்கு குறிப்பாக கிராமப்புற மக்களுக்கு வழங்குதல்,மாநிலத்தை புத்தாக்கம் மற்றும் தொழில் முனைவுக்கான மையமாக மாற்றுதல், செயலிகள், வலைத்தளங்கள், கியோஸ்க்குகள் (KIOSK) போன்றவற்றின் மூலம் பொதுமக்களுக்கு அரசு சேவைகள் வசதியாக கிடைப்பதை உறுதி செய்வதன் மூலம் முதல் மற்றும் இரண்டாம் நிலை நகரங்களுடன் டிஜிட்டல் இணைப்புகளை மேம்படுத்துதல் போன்றவை தமிழ்நாடு டிஜிட்டல் மயமாக்கல் வியூகத்தின் முக்கிய அம்சங்கள் ஆகும்.

இந்த நிகழ்ச்சியில், தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை முதன்மைச் செயலாளர் தீரஜ்குமார், தமிழ்நாடு மின் ஆளுமை முகமையின் இணை தலைமை நிர்வாக அலுவலர் பெ.ரமண சரஸ்வதி, மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x