Published : 02 Nov 2023 01:52 PM
Last Updated : 02 Nov 2023 01:52 PM

புதியவர்கள் வந்தால்தான் சிஸ்டம் மாறும் - விஜய் அரசியலுக்கு வருவது குறித்து அண்ணாமலை கருத்து

அண்ணாமலை | கோப்புப்படம்

சென்னை: "புதியவர்கள் அரசியலுக்கு வரும்போதுதான், இங்கிருக்கக்கூடிய அரசியல் நடைமுறைகள் அதிர்வுறும். புதியவர்கள் வரும்போதுதான் சிஸ்டம் மாறும். நடிகர் விஜய் உட்பட நிறைய புதியவர்கள் அரசியலுக்கு வரட்டும். யார் அரசியலுக்கு வருவதற்கும் யாரும் தடையாக இருக்கக்கூடாது" என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது தொடர்பாக கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர்,"நான் யார் அரசியலுக்கு வந்தாலும் வரவேற்பேன் என்று முதலில் சொல்லிவிட்டேன். காரணம் மக்களை மேம்படுத்துவதற்காக யார் வேண்டும் என்றாலும் வரலாம். மக்களிடம் அவர்களின் கருத்துகளைக் கூறட்டும், மக்கள் தேர்ந்தெடுக்கட்டும்.

எனவே, யார் அரசியலுக்கு வருவதற்கும் யாரும் தடையாக இருக்கக்கூடாது. மக்களுக்கு சாய்ஸ் இருக்க வேண்டும். ஜனநாயகம் என்பது சாய்ஸ்தான். 3 கட்சிகள் இருக்கும் இடத்தில் 6 கட்சிகள் இருப்பது நல்லதுதான். அதிலிருந்து தங்களுக்குப் பிடித்தவர்களை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்.

அதுவும் புதியவர்கள் அரசியலுக்கு வரும்போதுதான், இங்கிருக்கக்கூடிய அரசியல் நடைமுறைகள் அதிர்வுறும். புதியவர்கள் வரும்போதுதான் சிஸ்டம் மாறும். பழைய கட்சிகளே 30 ஆண்டுகள், 40 ஆண்டுகள் திரும்பத்திரும்ப ஆட்சிக்கு வந்தால், அது தேங்கிய நிலையாகிவிடும். அதனால்தான் நீரோடைப் போல ஓடிக்கொண்டே இருக்க வேண்டும் என்று கூறுவார்கள்.

நடிகர் விஜய் உட்பட நிறைய புதியவர்கள் அரசியலுக்கு வரட்டும். அவர்கள் தங்களது மாற்று அரசியல் கருத்துகளை மக்களிடம் தெரிவிக்கட்டும். இறுதியில் தமிழக மக்கள் முடிவு என்ன எடுக்கிறார்களோ, அதை ஏற்றுக்கொள்ளலாம்" என்று அவர் கூறினார்.

முன்னதாக, விஜய் நடித்துள்ள லியோ படத்தின் வெற்றி விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று (நவ.1) நடைபெற்றது. இதில் விஜய், புரட்சி தலைவர்னா ஒருத்தர் தான். நடிகர் திலகம்னா ஒருத்தர் தான். அதே மாதிரி உலக நாயகன் ஒருத்தர் தான். சூப்பர்ஸ்டார்னா ஒருத்தர் தான். தல-ன்னா அது ஒருத்தர் தான். அதே போல ‘தளபதி’க்கு உங்களுக்கு அர்த்தம் தெரியும். நீங்கள் மன்னர்கள். நான் உங்களுக்கு கீழ் இருக்கும் தளபதி. நீங்க ஆணையிடுங்கள். நான் செய்கிறேன், என்றும், ‘2026’ என்று விழாவில் கேட்கப்பட்ட கேள்விக்கு ‘கப்பு முக்கியம் பிகிலு’ என்று விஜய் பதிலளித்திருப்பதும் நினைவுகூரத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x