Published : 02 Nov 2023 12:06 PM
Last Updated : 02 Nov 2023 12:06 PM

'நீட்' தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்க அரசியல் கட்சிக்கு உரிமை உள்ளது: உயர் நீதிமன்றம் கருத்து

சென்னை: 'நீட்' தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்க அரசியல் கட்சிகளுக்கு உரிமை உள்ளது என்று சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. 'நீட்' தேர்வு விஷயத்தில் மத்திய அரசு ஏதேனும் முடிவெடுத்து, அது மாணவர்கள் நலனுக்கு விரோதமாக அமைந்தால் வழக்கு தொடரலாம் என்றும் தெரிவித்துள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில், தேசிய மக்கள் சக்தி கட்சித் தலைவர் வழக்கறிஞர் எம்.எல்.ரவி தாக்கல் செய்த மனுவில், 'நீட்' தேர்வுக்கு எதிராக 50 லட்சம் கையெழுத்துக்களை பெறும் இயக்கத்தை தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துவக்கியுள்ளார். இந்த இயக்கத்தில் இணைந்து கையெழுத்திடும்படி பள்ளி மாணவர்கள் நிர்பந்திக்கப்படுகின்றனர்.

'நீட்' தேர்வு தொடர்பாக மத்திய அரசு இயற்றிய சட்டத்தை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. அந்த சட்டத்துக்கு எதிராக மாநில அமைச்சர், போராட்டம் அறிவிக்க முடியாது. நீட் தேர்வுக்கு எதிராக, கையெழுத்து இயக்கம் தொடர்பாக அரசு எந்த அறிவிப்பும் வெளியிடாத நிலையில், இதை அரசின் கொள்கையாக கருத முடியாது

இந்திய அரசியலமைப்பின் மீது உண்மையும், மாறா பற்றும் கொண்டிருப்பதாக பதவியேற்றுக் கொண்ட அமைச்சர், சட்டத்துக்கு எதிராக போராட்டம் நடத்த முடியாது. பள்ளிகளில் இந்த கையெழுத்து இயக்கம் நடத்தப்படுகிறது. பள்ளி மாணவர்கள் நீட் தேர்வுக்கு எதிராக கையெழுத்திட நிர்பந்தத்துக்கு உள்ளாக்கப்படுகின்றனர். எந்த அனுமதியும் பெறாமல் நடத்தப்படும் இந்த கையெழுத்து இயக்கத்தை அமைச்சரே துவங்கியுள்ளதால், ஆசிரியர்களும், அதிகாரிகளும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

பள்ளி வளாகத்தில் எந்த அரசியல் நடவடிக்கைகளையும் அனுமதிக்க கூடாது. நீட் தேர்வுக்கு தயாராக வேண்டாம் என்ற எண்ணம் மாணவர்கள் மனதில் ஏற்படும். மேலும், படிப்பில் இருந்து மாணவர்களின் கவனம் திசை திரும்பும். எனவே, பள்ளிகளில் கையெழுத்து இயக்கம் நடத்த அனுமதிக்க கூடாது என பள்ளிக்கல்வித் துறைக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரியிருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்காபூர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று (வியாழக்கிழமை) விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், கையெழுத்து இயக்கத்தால் மனுதாரர் எப்படி பாதிக்கப்படுகிறார்? நீட் தேர்வு விஷயத்தில் மத்திய அரசு ஏதேனும் முடிவெடுத்து, அது மாணவர்கள் நலனுக்கு விரோதமாக அமைந்தால் வழக்கு தொடரலாம். அரசியல் கட்சி எதிர்ப்பு தெரிவிக்க உரிமை உள்ளது. மேலும், இதுபோன்ற பொதுநல வழக்குகளை தாக்கல் செய்ய ஒரு வரம்பு உள்ளது.

எனவே, இந்த வழக்கின் உண்மைத்தன்மையை நிரூபிக்க ஒரு லட்சம் ரூபாயை டெபாசிட் செய்தால் வழக்கை விசாரிப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர். அப்போது, வழக்கை வாபஸ் பெறுவதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்றுக் கொண்டு வழக்கை வாபஸ் பெற அனுமதியளித்து, வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர். மேலும், சமுதாயத்துக்கு நலன் தருவதாக இருந்தால் பொது நல வழக்குகளை விசாரணைக்கு ஏற்கலாம் என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x