Published : 02 Nov 2023 05:45 AM
Last Updated : 02 Nov 2023 05:45 AM

‘கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் - 2023’: இந்தியன் வங்கி - ‘இந்து தமிழ் திசை’ நடத்திய வெபினார்

விஷேஸ்குமார் ஸ்ரீவத்சவா, சிந்தியா லிங்கசுவாமி, ரவி சங்கர்

சென்னை: ‘கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் - 2023’, அக்.30 முதல் நவ.5 வரை கடைபிடிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு இந்தியன் வங்கி மற்றும் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் இணைந்து, பொதுமக்கள், இந்தியன் வங்கி ஊழியர்களுக்கான நிகழ்ச்சிகளை இணையவழியில் நடத்துகின்றன.

கடந்த செவ்வாய் (அக்.31) மாலை நடைபெற்ற வெபினாரில் ‘ஊழலைப் புறக்கணி; நாட்டிற்கு அர்ப்பணி’ எனும் தலைப்பில் சிறப்பு விருந்தினர்கள் உரையாற்றினர். இதில், சென்னை இந்தியன் வங்கியின் கார்ப்பரேட் அலுவலக தலைமை கண்காணிப்பு அதிகாரி விஷேஸ்குமார் ஸ்ரீவத்சவா பேசியதாவது:

ஊழல் என்பது ஒரு நிலையான மற்றும் பரவலான பிரச்சினையாகும். இது நமது தேசத்தின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்துக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. ஊழல் என்பது சமூகத்துக்கு புற்றுநோய் போன்றது. அது எல்லா இடத்திலும் பரவி இருக்கிறது. ஊழல், லஞ்சம் நடவடிக்கைகளில் ஈடுபடுவதை நாம் மறுக்க வேண்டும். யாரேனும் ஊழல் நடவடிக்கையில் ஈடுபடுவதை பார்த்தால் நிச்சயம் புகார் அளிக்க வேண்டும். ஊழலைத் தடுக்க அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

திருச்சி என்ஐடி கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ் துறை உதவிப் பேராசிரியர் டாக்டர் சிந்தியா லிங்கசுவாமி பேசும்போது, “இணைய குற்றம் என்பது இணைய சாதனங்கள் மற்றும் கணினிகளைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் குற்றச் செயல்களைக் குறிக்கிறது. தரவுகளைத் திருடுதல், ஆன்லைன் மோசடி, ஆன்லைன் பாலியல் துன்புறுத்தல் போன்ற இணைய மோசடிகளில் இருந்து நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ள முதலில் நாம் அதுகுறித்து சம்பந்தப்பட்ட துறையிடம் புகார் அளிக்க வேண்டியது அவசியம்” என்றார்.

கோவை மாவட்ட நீதிபதி (ஓய்வு) எஸ்.ரவி சங்கர் பேசும்போது, “இந்தியாவில் நீண்டகாலமாக ஊழல் உள்ளது. சமூகத்தில் சரியானதைச் செய்வதற்குக்கூட இப்பொழுது லஞ்சம் கொடுக்கிறார்கள். ஒரு சில ஊழல் அதிகாரிகளால் அரசின் மீதுள்ள நம்பிக்கையை மக்கள் இழக்கிறார்கள். ஊழலை ஒழிக்க முதலில் நம் வீட்டில் இருந்து தொடங்க வேண்டும். ஊழல், லஞ்சத்தை கொடுக்கவோ பெறவோ மாட்டோம் என்று உறுதி எடுக்க வேண்டும்” என்று கூறினார்.

இந்த வெபினாரில் பங்கேற்ற அனைவரையும் ‘இந்து தமிழ் திசை’ பொது மேலாளர் டி.ராஜ்குமார் வரவேற்றார். இதில் நிகழ்வை காணதவறியவர்கள் https://www.htamil.org/IBWebinarLive என்ற லிங்க்கின் மூலமாக பார்த்து பயன்பெறலாம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x