Published : 02 Nov 2023 06:02 AM
Last Updated : 02 Nov 2023 06:02 AM

பாஜகவினர், அதிகாரிகளை தாக்கிய வழக்கு: 13 திமுகவினர் கைது

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கல் குவாரிகளுக்கான ஏலத்துக்கு விண்ணப்பிக்க வந்த பாஜக தொழில் துறைபிரிவு மாவட்டத் துணைத் தலைவரும், கவுள்பாளையம் ஊராட்சித்தலைவருமான செ.கலைச்செல்வன்(48), அவரது சகோதரர்செ.முருகேசன்(43), பாஜக தொழில் துறை பிரிவு மாவட்டத்தலைவர் பி.முருகேசன்(48) ஆகியோரை திமுகவினர் தாக்கினர்.

மேலும், இதை தடுத்த டிஎஸ்பி பழனிசாமி உள்ளிட்ட போலீஸார் மற்றும் அலுவலகத்தில் இருந்தஉதவி புவியியலாளர் இளங்கோவன், வருவாய் அலுவலர்குமரிஅனந்தன் உள்ளிட்டோரையும் தாக்கியதுடன், அங்கிருந்தபொருட்களை சேதப்படுத்தினர்.

இதுகுறித்து பெரம்பலூர் மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத் துறை துணை இயக்குநர் ஜெயபால் கொடுத்த புகாரின்பேரில், தாக்குதலில் ஈடுபட்டதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கரின் உதவியாளர் மகேந்திரன், திமுக எம்எல்ஏ பிரபாகரனின் உதவியாளர் சிவசங்கர் உள்ளிட்டோர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.

இந்நிலையில், வழக்கில் தொடர்புடைய பெரம்பலூர் மாவட்டம் ஒகளூர் அன்பழகன்(47), கொடியரசன் (46), திமுக வேப்பூர் வடக்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் அன்புச்செல்வன்(36), அத்தியூர் லெனின் (48), நொச்சிக்குளம் கருணாநிதி (37), இளங்கண்ணன் (33), புதுவேட்டக்குடி சேட்டு என்கிற பெரியசாமி (43), அரியலூர் மாவட்டம் இரும்புலிக்குறிச்சி தர்மராஜ்(30), சேடக்குடிக்காடு செல்லம்(33), செந்துறை மாரிமுத்து (43), செந்துறை பாளையக்குடி பிரபாகரன் (37), திமுக அமைப்புசாரா ஓட்டுநர் சங்க மாவட்டத் தலைவர் வெத்தலை குமார் என்கிற சிவக்குமார்(51), அரியலூர் மாவட்ட திமுக அயலக அணி துணை அமைப்பாளர் மு.க.கருணாநிதி (33) ஆகிய 13 பேரை போலீஸார் நேற்று கைது செய்தனர்.

மேலும், தலைமறைவாக உள்ள அமைச்சர் சிவசங்கரின் உதவியாளர் மகேந்திரன், எம்எல்ஏ பிரபாகரனின் உதவியாளர் சிவசங்கர் உள்ளிட்ட சிலரை போலீஸார் தேடி வருகின்றனர்.

இதற்கிடையே, கல் குவாரி ஏலத்தில் கலந்துகொள்வதற்காக விண்ணப்பிக்கச் சென்ற தங்களை, புவியியல் சுரங்கத் துறை அதிகாரிகளும், பாஜகவினரும் தாக்கியதாக எம்எல்ஏ பிரபாகரனின் உதவியாளர் சிவசங்கர் உள்ளிட்டோர் போலீஸில் புகார் அளித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x