Published : 02 Nov 2023 05:37 AM
Last Updated : 02 Nov 2023 05:37 AM
சென்னை: தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: மார்க்சிஸ்ட் கம்யூ. மூத்த தலைவர் சங்கரய்யாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் தரக் கோரி பல்கலை. ஆட்சிப்பேரவை, ஆட்சிமன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநர் ரவிக்கு அனுப்பப்பட்டது. ஆனால், அதை அவர் நிராகரித்து விட்டார். பல்கலை.யின் இணைவேந்தர் என்ற முறையில் விழாவைப் புறக்கணிக்க முடிவு செய்துள்ளேன்.
சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்று 5 ஆண்டுகளும், சமூகநீதி, பொருளாதார சமத்துவத்துக்கான போராட்டங்களுக்காக 4 ஆண்டுகளும் சிறையில் இருந்தவர் சங்கரய்யா. தற்போது 102 வயதிலும் மக்களுக்கு குரல் கொடுத்துவரும் அவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்க ஆளுநர் மறுத்துள்ளார்.
ஆளுநர் எந்த சட்டத்தையும் மதிப்பதில்லை. திராவிட மாடல்,பொருளாதார சமத்துவம், சமூகநீதி குறித்து பேசுபவர்களை அவருக்குப் பிடிப்பதில்லை. அதனால்தான், சங்கரய்யாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கக்கூடாது என்ற எண்ணத்தில் இருக்கிறார். அதற்கான காரணத்தை ஆளுநர் விளக்க வேண்டும்.
ஆர்எஸ்எஸ் அமைப்பினருக்கு, சுதந்திரப் போராட்ட வீரர்கள் மீது மதிப்பு கிடையாது. அதிலிருந்து வந்தவர்தான் ஆளுநர்.அதனால்தான் பாஜக, ஆர்எஸ்எஸ்க்கு ஆதரவாக இதை எல்லாம் செய்துகொண்டிருக்கிறார்.
வேந்தர், இணைவேந்தரை விடுத்து, சிறப்பு விருந்தினரை மட்டும் பேசவைக்கும் பட்டமளிப்பு விழாவை இவர் நடத்துகிறார். அதனால், வேந்தருக்கு எதிர்ப்புக் தெரிவிக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. அந்த வகையில்தான் பட்டமளிப்பு விழாவை எதிர்க்கிறோம்.
மேலும், துணைவேந்தர் தேடல் குழுவில் யுஜிசி உறுப்பினரை திணிக்க முயற்சிக்கிறார். அதனால்தான், துணைவேந்தரை நியமிக்கும் அதிகாரத்தை தமிழக அரசுக்கு கொடுக்க வேண்டும் என்று பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.
அமைச்சர் முடிவுக்கு வரவேற்பு: மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் நேற்று வெளியிட்ட அறிக்கையில், "விடுதலைப் போராட்ட வீரர் சங்கரய்யாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம்வழங்கும் கோப்புகளில் கையெழுத்திட மறுக்கும் ஆளுநரைக் கண்டித்து, மதுரை காமராசர் பல்கலை.பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதில்லை என்ற அமைச்சரின் முடிவை வரவேற்கிறோம்.
ஆளுநருக்கு மார்க்சிஸ்ட் கட்சி நிர்வாகிகள் கருப்புக் கொடிஏந்தி கண்டனம் எழுப்புவர்" என்று தெரிவித்துள்ளார்.
அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பதிவில், "சங்கரய்யாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்க ஆளுநர் மறுப்பது, சுதந்திரப் போராட்டத் தியாகிகளை அவமதிக்கும் செயலாகும். எனவே, அவருக்கு கவுரவ பட்டம் வழங்கும் கோப்பில் ஆளுநர் கையெழுத்திட வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
பொதுப் பள்ளிக்கான மாநில மேடை அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், "ஆளுநர் ஆர்.என்.ரவியைக் கண்டிக்கும் வகையில், பட்டமளிப்பு விழாவை மாணவர்கள் புறக்கணிக்க வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT