Last Updated : 27 Jul, 2014 11:15 AM

 

Published : 27 Jul 2014 11:15 AM
Last Updated : 27 Jul 2014 11:15 AM

67 பட்டாசு ஆலைகள் உரிமங்களுக்கு தற்காலிக தடை

விதிமுறைகளை மீறி செயல்பட்டதாக விருதுநகர் மாவட்டத்தில் இதுவரை 67 பட்டாசு ஆலைகளின் உரிமங்களுக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டு உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் 840 பட்டாசுத் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இவர்களில் 5 அறைகள் மட்டுமே கொண்டு சிறிய அளவில் உற்பத்தி செய்யும் பட்டாசு தொழிற்சாலைகள் மாவட்ட வருவாய் அலுவலரின் உரிமம் பெற்று இயங்கும். விருதுநகர் மாவட்டத்தில் மொத்தம் 167 பட்டாசுத் தொழிற்சாலைகள் மாவட்ட வருவாய் அலுவலரின் உரிமம்பெற்று இயங்கி வருகின்றன. இந்தவகை சிறிய பட்டாசுத் தொழிற்சாலைகளில் ஒரு நாளைக்கு 15 கிலோ எடை வரையிலான வெடி தயாரிக்க பயன்படுத்தும் மூலப்பொருள்களை மட்டுமே பயன்படுத்த முடியும்.

தினமும் 15 கிலோவுக்கு மேல் வெடிபொருள்களை கையாளும் பட்டாசு ஆலைகள் அதன் திறனுக்கேற்ப சென்னையிலுள்ள மத்திய பெட்ரோலியம், வெடிபொருள் கட்டுப்பாட்டுத்துறை அலுவலகத்திலும், நாக்பூரிலுள்ள தலைமை அலுவலகத்திலும் அனுமதிபெற வேண்டும்.

இந்நிலையில், சிவகாசி பகுதியில் சீனப்பட்டாசுகள் விற்கப்படுவதாக புகார் எழுந்தது. சீனாவில் உற்பத்தி செலவு மற்றும் பட்டாசு தயாரிக்கப் பயன்படும் ரசாயன மூலப்பொருள்கள் விலை குறைவு என்பதால் இந்தியாவுக்குள் சீனப்பட்டாசுகள் கள்ளத்தனமாக இறக்குமதி செய்யப்பட்டு குறைந்த விலையில் விற்கப்படுகின்றன. மேலும், சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பட்டாசுகள் சிவகாசி பகுதியில் இயங்கும் சில பட்டாசுத் தொழிற்சாலைகளுக்கு கொண்டுசெல்லப்பட்டு லேபில்கள் ஒட்டப்பட்டு இந்தியப் பட்டாசு வகைகள்போல விற்பனை செய்யப் படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

சீனப்பட்டாசுக்கள் இறக்குமதி செய்யப்படுவதையும் சீனப்பட்டாசுகள் கையாளப்படு வதைத் தடுக்கவும் மட்டுமின்றியும் விதிமுறைகளை மீறிச் செயல்படும் பட்டாசு ஆலைகளைக் கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்கவும் மத்திய பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் கட்டுப்பாட்டுத்துறை திட்டமிட்டுள்ளது. இதற்காக சிறப்பு ஆய்வுக் குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன. இக்குழுவினர், விருதுநகர் மாவட்டத்திலுள்ள அனைத்து பட்டாசுத் தொழிற்சாலைகளிலும் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் உரிமம் பெற்ற பட்டாசுத் தொழிற்சாலைகளில் 50 கிலோ வரையிலான வெடி மருந்துகள் மட்டுமே பயன்படுத்தப்படுகிறதா? சரவெடி, குருவிவெடி, சக்கரம், சாட்டை போன்ற வெடிகளில் ஒரே சமயத்தில் ஏதாவது ஒன்றுமட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறதா அல்லது ஒரே நேரத்தில் இவை அனைத்தும் உற்பத்தி செய்யப்படுகிறதா விதிமுறைகள் அனைத்தும் முறையாக பின்பற்றப்படுகிறதா. சீனப்பட்டாசுகள் ஏதும் உள்ளதா என்பது குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கடந்த மாதம் 16-ம் தேதி ஆய்வை தொடங்கிய இக்குழுவினர் இதுவரை 100-க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகளில் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். விதிமுறைகளை மீறி செயல்படும் பல பட்டாசு ஆலைகளுக்கு எச்சரிக்கை நோட்டீஸ்கள் கொடுக்கப்பட்டுள்ளதோடு 67 பட்டாசுத் தொழிற்சாலைகளின் உரிமங்களை தற்காலிக ரத்து செய்தும் உத்தரவிட்டுள்ளது. இதனால், பட்டாசு உற்பத்தியாளர் கள் கலக்கமடைந் துள்ளனர்.

இதுகுறித்து மாவட்ட வருவாய் அலுவலர் செ.முனுசாமியிடம் கேட்டபோது அவர் கூறியது: விருதுநகர் மாவட்டத்திலுள்ள பட்டாசு ஆலைகளில் மத்திய பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் கட்டுப்பாட்டு துறையினர் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். வெள்ளிக்கிழமை வரை மாவட்ட வருவாய் அலுவலரின் உரிமம் பெற்ற 40 பட்டாசுத் தொழிற்சாலைகளும், சென்னை வெடிபொருள் கட்டுப்பாட் டுறையின்கீழ் உரிமம் பெற்றுள்ள 27 பட்டாசுத் தொழிற் சாலைகளும் என மொத்தம் 67 பட்டாசுத் தொழிற்சாலைகளின் உரிமங்களுக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டு உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என்றார்.

உற்பத்தி பாதிப்பு

இதுகுறித்து விருதுநகர் மாவட்ட வருவாய் அலுவலரின் உரிமம்பெற்ற பட்டாசு உற்பத்தியாளர் சங்கத் தலைவர் ஜி.விநாயகமூர்த்தி கூறியது: பட்டாசு ஆலைகளில் அதிகாரிகள் ஆய்வு நடத்துவதை நாங்கள் வரவேற்கிறோம். அதே நேரத்தில் தொழிற்சாலையில் ஏதேனும் குறைபாடு இருந்தால் அதை சுட்டிக்காட்டி சரி செய்துகொள்ள அதிகாரிகள் கால அவகாசம் கொடுக்க வேண்டும். ஆனால், அதிகாரிகள் அவ்வாறு செய்வதில்லை.

மேலும், ஆய்வு நடத்த வரும் அதிகாரிகள் ஆங்கிலத்திலும், இந்தியிலும் பேசுவதால் அவர்கள் கூறுவதும், தெரிவிக்கும் கருத்தும் எங்களுக்குப் புரிவதில்லை. திடீரென பட்டாசுத் தொழிற்சாலைக்கான உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்வதால் ஆலை மூடப்பட்டு உற்பத்தி பாதிக்கப்படுகிறது. இதனால், உற்பத்தி பாதிக்கப்படுவதோடு பட்டாசுத் தொழிற்சாலை நடத்திவருவோரும், அதில் பணியாற்றிவரும் தொழிலாளர்கள் வேலையிழந்து பாதிக்கப்பட்டும் வருகின்றன என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x