Published : 01 Nov 2023 08:55 PM
Last Updated : 01 Nov 2023 08:55 PM
சென்னை: பாதுகாப்புக்காக கண்காணிப்பு கேமராக்களை பொருத்தினால் மட்டும் போதாது, அவை முறையாக செயல்படுகிறதா என அடிக்கடி கண்காணிக்க வேண்டும் என அறிவுறுத்திய சென்னை உயர் நீதிமன்றம், இதுதொடர்பாக தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கை முடித்து வைத்தது.
கடந்த 2016-ம் ஆண்டு ஜூன் மாதம், சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி என்ற மென்பொறியாளர் படுகொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவத்தை அடுத்து, தமிழகம் முழுவதும் பொது இடங்களில் மக்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்வது தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது.
காவல் நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாகவும், மாவட்டங்களில் உள்ள முக்கிய பொது இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த உள்ளதாகவும், அதற்கான நிதி ஒதுக்கீடுகள் குறித்து, தமிழக அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. ஏற்கெனவே 35 ரயில் நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள 407 ரயில் நிலையங்களில் 2024-ம் ஆண்டு ஜூலை மாதத்துக்குள் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும் என ரயில்வே துறை தரப்பிலும் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இந்த அறிக்கைகளை ஏற்றுக் கொண்ட தலைமை நீதிபதி கங்காபூர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வு, "கண்காணிப்பு கேமராக்களை பொருத்தினால் மட்டும் போதாது. அவை முறையாக, திறமையாக செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும். இந்த கண்காணிப்பு கேமராக்களின் செயல்பாட்டை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்" என அறிவுறுத்தி இந்த வழக்கை முடித்து வைத்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT