Published : 01 Nov 2023 05:34 PM
Last Updated : 01 Nov 2023 05:34 PM

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு விசாரணை ஆணையம் செலவு ரூ.5.60 கோடி: பரிந்துரைகளை அரசு நிறைவேற்றுமா?

கோப்புப் படங்கள்

மதுரை: தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு விசாரணை ஆணையத்துக்கு ரூ.5.60 கோடி செலவாகியுள்ள நிலையில், அந்த ஆணையம் அளித்த பரிந்துரைகளை தமிழக அரசு நிறைவேற்றுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தை விசாரிக்க அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையத்துக்கு தமிழக அரசால் ரூ.5 கோடியே 60 லட்சம் செலவிடப்பட்ட நிலையில், அந்த ஆணையத்தின் பரிந்துரைகள் நிறைவேற்றப்படாமல் உள்ளன. தேசிய அளவிலோ அல்லது மாநில அளவிலோ பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் சம்பவங்கள் நடந்தால், அதுகுறித்து உண்மையை அறிய விசாரணை ஆணையம் அமைக்கப்படுகிறது. இதற்காக அரசு கோடிக்கணக்கான ரூபாய் செலவிடுகிறது. ஆனால், ஆணையத்தின் பரிந்துரைகளை அரசு முழுமையாக செயல்படுத்துவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்நிலையில், கடந்த 13 ஆண்டுகளில் தமிழகத்தில் ஏற்படுத்தப்பட்ட விசாரணை ஆணையங்களின் செலவு விவரங்களை மதுரை சமூக ஆர்வலர் கார்த்திக் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் பெற்றுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: ''கடந்த 13 ஆண்டுகளில் பல்வேறு விசாரணை ஆணையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தை விசாரிக்க அமைத்த ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஆணையம் முக்கியமானது. இந்த ஆணையம் 2018-ம் ஆண்டு மே 23-ம் தேதி அமைக்கப்பட்டது. அதாவது துப்பாக்கிச்சூடு நடந்த மறுநாளே அமைக்கப்பட்டது.

4 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 2022, மே 18-ம் தேதி முதல்வர் ஸ்டாலினிடம் ஆணையர் அறிக்கையைச் சமர்ப்பித்தார். இதில் கடந்த 4 ஆண்டுகளில் விசாரணை ஆணையத்துக்கு ரூ.5,60,03,700 செலவிடப்பட்டுள்ளது. இதுவரை அமைக்கப்பட்ட விசாரணை ஆணையங்களில் அதிகபட்சம் செலவிடப்பட்டதில் அருணா ஜெகதீசன் ஆணையம் முதலிடத்தில் உள்ளது. 800-க்கும் மேற்பட்ட சாட்சிகள் விசாரிக்கப்பட்டன. 4 ஆண்டுகளுக்கு (1450 நாட்களுக்கு மேல்) மேல் என்று மிக பெரிய அளவில் முன்னெடுக்கப்பட்ட கமிஷன் இதுதான். இந்த கமிஷன் தமிழக அரசுக்கு பல்வேறு பரிந்துரைகளை முன்வைத்தது.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் போராட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபடுவதற்கு வாய்ப்புள்ளதாக முன்கூட்டியே தூத்துக்குடி மாவட்ட காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டும், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எதையும் எடுக்கவில்லை. இந்தச் சம்பவத்துக்கு காவல் துறையினர் 17 பேர் முழு பொறுப்பு என அறிக்கையில் குறிப்பிட்டிருந்தனர். மேலும், அப்போதைய மாவட்ட ஆட்சியர், வருவாய்த் துறை அதிகாரிகள் மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

ஆனால், அவர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்று பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் பொதுமக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு அறிக்கை மக்களிடையே மிகப் பெரிய நம்பிக்கையை ஏற்படுத்தியது. ஆனால், அந்த பரிந்துரைகளை 500 நாட்களைக் கடந்தும், நிறைவேற்றாமல் அரசு கிடப்பில் போட்டிருப்பது மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழக அரசு உடனடியாக அருணா ஜெகதீசன் இறுதி அறிக்கை பரிந்துரைகள்படி பட்டியலிடப்பட்ட காவல் துறை உள்ளிட்ட பிற துறைகளின் உயர் அதிகாரிகள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கவேண்டும். துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த ஒவ்வொருவரின் குடும்பத்துக்கும் , ஆணையத்தின் பரிந்துரை தொகையான ரூ.50 லட்சத்தில் வழங்கப்படாமல் உள்ள மீதமுள்ள தலா ரூ.25 லட்சத்தையும் உடனடியாக வழங்க வேண்டும்'' என்று அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x