Published : 01 Nov 2023 10:58 AM
Last Updated : 01 Nov 2023 10:58 AM

அரசு போக்குவரத்துக் கழக பணிகளை குத்தகைக்கு விடுவதா?- ராமதாஸ் கண்டனம்

சென்னை: மாநகரப் போக்குவரத்துக்கழகம், அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் விழுப்புரம் கோட்டம் உள்ளிட்ட அனைத்து அரசுத் துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களிலும் குத்தகை முறை நியமனங்களை கைவிட்டு, அரசே நேரடியாக பணியாளர்களை நியமிக்க முன்வர வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்துக்கு 234 ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களை குத்தகை முறையில் அமர்த்தும் தமிழக அரசின் முடிவுக்கு எழுந்த எதிர்ப்புகள் அடங்குவதற்குள்ளாக, விழுப்புரம் கோட்ட அரசு போக்குவரத்துக் கழகத்துக்கு 75 ஓட்டுநர்களை தனியார் நிறுவனம் மூலம் குத்தகை முறையில் அமர்த்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. பணியாளர்களை அனைத்து உரிமைகளுடன் பணி அமர்த்துவதற்குப் பதிலாக கொத்தடிமைகளைப் போல அரசு பணியமர்த்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

மாநகரப் போக்குவரத்துக் கழகம், அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் விழுப்புரம் கோட்டம் ஆகியவற்றைத் தொடர்ந்து, அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் பிற கோட்டங்களுக்கும் இதே முறையில் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களை அமர்த்த தமிழக அரசு முடிவு செய்திருக்கிறது. இது மிகவும் ஆபத்தானது.

அரசு அறிமுகப்படுத்தியுள்ள புதிய நடைமுறையின்படி ஏதேனும் ஒரு தனியார் மனிதவள நிறுவனம், அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களை வழங்குவதற்கான ஒப்பந்தத்தைப் பெறும். நிரந்தர ஓட்டுநர்களுக்கு இப்போது எவ்வளவு ஊதியம் வழங்கப்படுகிறதோ, அதைவிட குறைவான ஊதியத்தை ஒவ்வொரு பணியாளருக்கும் கணக்கிட்டு, சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு அரசு போக்குவரத்துக் கழகம் வழங்கும். அந்தத் தொகையை பெற்றுக் கொள்ளும் நிறுவனம், அதில் ஒரு பகுதியை எடுத்துக் கொண்டு மிகக் குறைந்த தொகையை ஒப்பந்த ஓட்டுநர்களுக்கு வழங்கும்.

இது தொடக்க நிலை நிரந்தர ஓட்டுநர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தில் பாதிக்கும் குறைவாகவே இருக்கும். ஊதியம் தவிர, ஓய்வூதியம், பணிக்கொடை உள்ளிட்ட எந்த உரிமையும் வழங்கப்படாது. சுருக்கமாக கூற வேண்டுமானால், இப்போது அமைப்பு சார்ந்த தொழிலாளர்களாக இருக்கும் போக்குவரத்து தொழிலாளர்கள் இனி அமைப்பு சாராத தினக்கூலி தொழிலாளர்களாக மாற்றப் படுவார்கள். இது போராடிப் பெற்ற தொழிலாளர் உரிமைகள் அனைத்தையும் பறிக்கும் செயல் ஆகும்.

அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு குத்தகை முறையில் பணியாளர்களை அமர்த்துவதற்காக அரசுத் தரப்பில் கூறப்படும் காரணத்தை ஏற்க முடியாது. அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு நிரந்தரப் பணியாளர்களை தேர்வு செய்ய அதிக காலம் ஆகும் என்பதால் தான் இந்த புதிய ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக போக்குவரத்துக் கழக நிர்வாகங்கள் கூறுகின்றன. இது வலுவற்ற வாதம். அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் கடந்த இரு ஆண்டுகளாகவே ஓட்டுனர்கள் & நடத்துனர்கள் பற்றாக்குறையால் முடங்கிக் கிடக்கின்றன.

ஓட்டுநர்கள், நடத்துநர்கள் பற்றாக்குறை காரணமாக 2022 - 23ஆம் ஆண்டில் மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் மட்டும் 29.70 லட்சம் நடை பேருந்து சேவை நிறுத்தப்பட்டதாக ஏற்கனவே குற்றஞ்சாட்டியிருக்கிறேன். தமிழக அரசு நினைத்திருந்தால், கடந்த ஆண்டே ஓட்டுனர்கள், நடத்துனர்கள் தேர்வை தொடங்கிருக்கலாம். ஆனால், அப்போது அதை செய்யாமல், போதிய காலக்கெடு இல்லாததால் தான் குத்தகை முறையில் பணியாளர்கள் அமர்த்தப்படுவதாக கூறுவது ஏமாற்று வேலை.

தனியார் நிறுவனங்கள் தான் பணியாளர் நியமனங்களில் புதிய, புதிய விதிகளை புகுத்தி, அவர்களின் உழைப்பு சுரண்டும் என்று குற்றச்சாட்டுகள் உள்ளன. அத்தகைய உழைப்புச் சுரண்டலை ஒழிப்பது தான் அரசின் பணி. ஆனால், அரசே அத்தகைய உழைப்புச் சுரண்டலில் ஈடுபடுவது என்ன நியாயம்?

பணியாளர்களின் உழைப்பைச் சுரண்டும் குத்தகை நியமன முறையை கடந்த காலங்களில் திமுகவே எதிர்த்துள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில், குத்தகை முறையில் பணியாளர்கள் நியமிக்கப்பட்ட போது, ‘‘வெளிப்பணியாளர்கள் நியமன முறையில் மாதம் 25 அல்லது 30 ஆயிரம் சம்பளம் என்று கூறிவிட்டு, அந்த பணியாளர்களை அமர்த்தும் தனியார் நிறுவனங்கள் 7,000 அல்லது 8,000 மட்டுமே சம்பளமாகவோ, கூலியாகவோ கொடுத்துவிட்டு மீதிப்பணத்தை அந்நிறுவனங்களும், இடைத்தரகர்களும் சுரண்டி விழுங்கி விடும் அவலம் இந்த ‘அவுட்சோர்சிங்’முறையில் தாண்டவமாடுகிறது’’ என்று அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின் விமர்சித்திருந்தார். மு.க.ஸ்டாலின் அவர்களால் எதிர்க்கப்பட்ட அதே சுரண்டல் நடைமுறையையே, அவரது ஆட்சியில் திணிக்க முயல்வது எந்த வகையில் நியாயம்?

தமிழ்நாட்டில் அரசு வேலைவாய்ப்புகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவிட்ட நிலையில், உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைப்பதற்காக பொதுத்துறை நிறுவன வேலைவாய்ப்புகளைத் தான் மக்கள் நம்பியிருக்கின்றனர். அந்த வேலைவாய்ப்புகளிலும் உழைப்புச் சுரண்டலை அனுமதிக்கக் கூடாது. எனவே, மாநகரப் போக்குவரத்துக்கழகம், அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் விழுப்புரம் கோட்டம் உள்ளிட்ட அனைத்து அரசுத் துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களிலும் குத்தகை முறை நியமனங்களை கைவிட்டு, அரசே நேரடியாக பணியாளர்களை நியமிக்க முன்வர வேண்டும்" என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x