Published : 01 Nov 2023 05:26 AM
Last Updated : 01 Nov 2023 05:26 AM
சென்னை: எமிஸ் வலைதள பணிகளை இன்று (நவ.1) முதல் மேற்கொள்ள மாட்டோம் என்று டிட்டோ ஜாக் அறிவித்துள்ளது.
எமிஸ் வலைதள பணிகளில் இருந்து விடுவித்தல், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துதல் உள்ளிட்ட 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு (டிட்டோ ஜாக்,) கடந்த அக்.13-ம் தேதி போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்தது.
இதையடுத்து பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் 30-ல் 12 கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக அமைச்சர் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதையேற்று டிட்டோ ஜாக் நிர்வாகிகள் போராட்டத்தை கைவிட்டனர்.
அமைச்சருடன் பேச்சுவார்த்தை: இந்நிலையில், பேச்சுவார்த்தையில் அளித்த வாக்குறுதியின்படி எந்த அறிவிப்பையும் தொடக்கக்கல்வித் துறை வெளியிடவில்லை. இதுகுறித்து டிட்டோ ஜாக் அமைப்பின் மாநில உயர்நிலைக் குழு கூட்டம் காணொலி வாயிலாக சமீபத்தில் நடைபெற்றது. இதில் 2 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அமைச்சருடனான பேச்சுவார்த்தையில் ஏற்கப்பட்ட 12 கோரிக்கைகள் குறித்து தொடக்கக் கல்வித்துறை இதுவரை எந்த அறிவிப்பையும் வெளியிடாதது ஆசிரியர்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, கோரிக்கைகளை கல்வித்துறை விரைந்து நிறைவேற்ற வேண்டும்.
அதேபோல, ஆசிரியர்கள் நவ.1 முதல் (இன்று) எமிஸ் பதிவு பணிகளை மேற்கொள்ள தேவையில்லை என்று பேச்சுவார்த்தையில் அமைச்சர் உறுதி அளித்தார்.அதன்படி, வருகைப்பதிவு தவிர மற்ற எமிஸ் பணிகளில் இருந்து இன்றுமுதல் ஆசிரியர்கள் தங்களை விடுவித்துக் கொள்வது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அரசுப் பள்ளிகளின் முக்கிய செயல்பாடுகள் எமிஸ் தளம் வழியாகவே மேற்கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
அதிகாரிகள் விளக்கம்: இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள்கூறும்போது, “ஆசிரியர்களின் நீண்டகால கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கான மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. எமிஸ் வலைதள பணிகளை மேற்கொள்ள 9 ஆயிரம் பேர் வரை பணியில் அமர்த்தப்பட உள்ளனர். இது செயல்பாட்டுக்கு வந்த பின் வருகைப் பதிவை மட்டும் ஆசிரியர்கள் பதிவேற்றினால்போதும்” என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT