Published : 01 Nov 2023 05:40 AM
Last Updated : 01 Nov 2023 05:40 AM

பாஜகவினர் மீது திமுகவினர் சரமாரி தாக்குதல்: அமைச்சர் சிவசங்கரின் உதவியாளர் உள்ளிட்டோர் மீது வழக்கு

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திமுகவினர் தாக்கியதில் காயமடைந்த பாஜக நிர்வாகிகள் கலைச்செல்வன், செ.முருகேசன் மற்றும் பி.முருகேசன்.

பெரம்பலூர்: பெரம்பலூர் ஆட்சியர் அலுவலகத்தில் கல் குவாரி ஏலத்துக்கு விண்ணப்பிக்க வந்த பாஜகவினரை திமுகவினர் தடுத்து நிறுத்தி தாக்கியதுடன், சுரங்கத் துறை அலுவலகத்தில் பொருட்களையும் அடித்து சேதப்படுத்தினர். தடுக்கவந்த போலீஸார், அரசு அலுவலர்களும் தாக்கப்பட்டனர். இது தொடர்பாக அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கரின் உதவியாளர் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுஉள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தில் கவுள்பாளையம், நாரணமங்கலம், நாட்டார்மங்கலம், கல்பாடி, திருவளக்குறிச்சி, செங்குணம் உள்ளிட்ட பகுதிகளில் அமைந்துள்ள 31 கல் குவாரிகளுக்கான மறைமுக ஏலம் நேற்று (அக்.31) நடைபெறுவதாகவும், இதற்காக விண்ணப்பம் சமர்ப்பிக்க நேற்று முன்தினம் (அக்.30) கடைசி நாளாகவும் பெரம்பலூர் மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத் துறை அலுவலகம் அறிவித்திருந்தது.

இதையடுத்து, பாஜக தொழில் துறைப் பிரிவு மாவட்ட துணைத் தலைவரும், கவுள்பாளையம் ஊராட்சித் தலைவருமான செ.கலைச்செல்வன்(48), தனது சகோதரர் செ.முருகேசன்(43) பெயரில் கல் குவாரி ஏலம் எடுப்பதற்காக விண்ணப்பிக்க, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள புவியியல் மற்றும் சுரங்கத் துறை அலுவலகத்துக்கு நேற்று முன்தினம் வந்தார். அவருடன், பாஜக தொழில் துறை பிரிவு மாவட்டத் தலைவர் பி.முருகேசனும்(48) வந்திருந்தார்.

விண்ணப்பிக்கக் கூடாது...: அப்போது, அங்கிருந்த திமுகவினர், கலைச்செல்வன் தரப்பினரை கல் குவாரி ஏலம் கேட்க விண்ணப்பிக்கக் கூடாது என்று மிரட்டியுள்ளனர். ஆனால், இதையும் மீறி விண்ணப்பத்தை பெட்டியில் போடச்சென்ற கலைச்செல்வன் உள்ளிட்டோரை தடுத்து நிறுத்தி, அவர்களிடமிருந்த விண்ணப்பத்தை கிழித்து வீசியதுடன், அவர்களை சரமாரியாகத் தாக்கினர். மேலும், புவியியல் மற்றும் சுரங்கத் துறை அலுவலகத்தில் உள்ள நாற்காலிகள் உள்ளிட்ட பொருட்களையும் அடித்து சேதப்படுத்தினர்.

மேலும், அவர்களைத் தடுக்க முயன்ற டிஎஸ்பி பழனிசாமி, இன்ஸ்பெக்டர்கள் சுப்பையன், கலா உள்ளிட்ட போலீஸாரையும், புவியியல் சுரங்கத் துறை அலுவலகத்தில் இருந்த உதவி புவியியலாளர் இளங்கோவன், வருவாய் அலுவலர் குமரி அனந்தன் ஆகியோரையும் தாக்கினர். இதில் சிலருக்கு காயம் ஏற்பட்டது.

திமுகவினரால் சூறையாடப்பட்ட பெரம்பலூர் மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத் துறை அலுவலகம்.

இந்தக் காட்சிகளை புகைப்படம், வீடியோ எடுத்த செய்தியாளர்களையும் தகாத வார்த்தைகளால் திட்டி, அவர்களிடமிருந்த 3 செல்போன்களையும் திமுகவினர் பறித்துக்கொண்டனர்.

குவாரி ஏலம் ரத்து: தகவலறிந்த மாவட்ட ஆட்சியர் க.கற்பகம் அங்கு சென்று, அனைவரையும் கலைந்து செல்லுமாறு எச்சரித்தார். தொடர்ந்து, ஆட்சியர் அலுவலகத்தில் மேலும்போலீஸார் குவிக்கப்பட்டு, அங்கிருந்தவர்கள் வெளியேற்றப்பட்டனர். பின்னர், நிர்வாகக் காரணங்களுக்காக கல் குவாரி ஏலத்தை ரத்து செய்வதாக ஆட்சியர் கற்பகம்அறிவித்தார்.

தாக்குதலில் காயமடைந்த டிஎஸ்பி பழனிசாமி, இன்ஸ்பெக்டர்கள் சுப்பையன், கலா, எஸ்.ஐ. சண்முகம், பெண் காவலர் லட்சுமி,உதவி புவியியலாளர் இளங்கோவன், வருவாய் ஆய்வாளர் குமரிஅனந்தன் ஆகியோர் பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.

7 பிரிவுகளில் வழக்கு: பின்னர், இந்த சம்பவம் தொடர்பாக பெரம்பலூர் நகர காவல் நிலையத்தில், புவியியல் மற்றும் சுரங்கத் துறை துணை இயக்குநர் பி.ஜெயபால் புகார் அளித்தார்.

அதன்பேரில், போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கரின் தொகுதி அலுவலகத்தில் உதவியாளராகப் பணிபுரியும் மகேந்திரன், பெரம்பலூர் எம்எல்ஏ பிரபாகரனின் உதவியாளரான சிவசங்கர் மற்றும் ரமேஷ், செல்வம், அன்பழகன், விஜயகாந்த், தர்மா உள்ளிட்டோர் மீது, கலவரம் செய்தல், கொடூர ஆயுதங்களுடன் கலவரத்தை ஏற்படுத்தல், கொலை மிரட்டல்,அரசு ஊழியர்களை பணி செய்யவிடாமல் தடுத்தல், பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவித்தல் உள்ளிட்ட 7 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து, போலீஸார் அவர்களைத் தேடி வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x