Published : 01 Nov 2023 06:00 AM
Last Updated : 01 Nov 2023 06:00 AM

ஆளுநர் மாளிகையை வைத்து மாநில நிர்வாகத்தை முடக்குகின்றனர்: ஸ்டாலின் குற்றச்சாட்டு

சென்னை: ஆளுநர் மாளிகையை வைத்து மாநில நிர்வாகத்தை முடக்குகின்றனர் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின், தனது ‘இந்தியாவுக்காக பேசுகிறேன்’ குரல் பதிவில் தெரிவித்துள்ளார்.

‘மாநில சுயாட்சி; உண்மையான கூட்டுறவு கூட்டாட்சியியலுக்கான எனது குரல்’ என்ற தலைப்பில், ‘இந்தியாவுக்காக பேசுகிறேன்’ என்ற குரல் பதிவின் 3-ம் பாகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று பேசியதாவது: கடந்த செப்.23-ம் தேதி வெளியான 2-ம் பாகத்தில் சிஏஜி அறிக்கை குறித்து பேசியிருந்தேன்.

அவையெல்லாம் உண்மை என்று மத்திய அரசே ஒப்புக்கொள்வது போல் ஒரு விஷயத்தை செய்துள்ளனர். நாடு முழுவதும், இந்த குரல் பதிவு சென்றடைந்த பின், அக்.2-ம் வாரத்தில், பாஜக அரசின் ஊழல்களை வெளிக்கொண்டுவந்த சிஏஜி அதிகாரிகள் செப்.12-ம் தேதியே கூண்டோடு மாற்றப்பட்டுள்ளனர்.

தற்போது நான் பேசப்போவது மாநில உரிமைகள். திமுக தனக்கென்று தனித்துவமான கொள்கையுடன் 75-வது ஆண்டு விழாவை கொண்டாடும் கட்சி மட்டுமின்றி, நாடாளுமன்றத்தில் 3-வது பெரிய கட்சியுமாகும். அப்படிப்பட்ட திமுகவின் கொள்கைகளில் முக்கியமானது மாநில சுயாட்சி.

பிரதமர் நரேந்திர மோடி, குஜராத் முதல்வராக இருந்தபோது, மாநில உரிமைகளுக்கு ஆதரவாக நிறைய பேசினார். ஆனால், பிரதமரானபின், மாநில உரிமைகளைப் பறிக்கிறார். மாநிலங்களை ஒழிக்க வேண்டும். இல்லாவிட்டால் நகராட்சிகளாக மாற்றிவிட வேண்டும் என்று பாஜக அரசு நினைக்கிறது. டெல்லியை மையப்படுத்தாமல் மாநிலங்களுக்கு ஏற்ற அணுகுமுறையுடன் திட்டங்கள் தீட்டப்படும் என்று கூறிய பிரதமர், திட்டக்குழுவை கலைத்துவிட்டு சத்தே இல்லாத நிதி ஆயோக்கை உருவாக்கினார்.

கூட்டாட்சி கருத்தியலை ஆதரிப்பவன் என்று கூறினார். ஆனால், மாநில அரசின் திட்டங்களை நிறைவேற்ற கூட மத்திய அரசின் வாசலில் காத்திருக்கவேண்டிய நிலையை உருவாக்கியுள்ளனர். மாநில அரசுகளுக்கு அதிக நிதி ஆதாரங்களை வழங்குவோம் என்றார். ஆனால், ஜிஎஸ்டி. இழப்பீடு வழங்கும் காலத்தைக் கூட நீட்டிக்க முடியாது என்று சொல்லிவிட்டார். இதனால் மாநிலங்களின் நிதி நிலைமை அவசர சிகிச்சைப் பிரிவில் உள்ளது.

மேலும், 12-வது நிதி ஆணையத்தில் இருந்து நிதி குறைந்ததால், கடந்த 19 ஆண்டுகளில் தமிழகத்துக்கு ரூ.85 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இனிமேல் ஆண்டுதோறும் ரூ.10 ஆயிரம் கோடிக்கு மேல் இழப்பு ஏற்படப்போகிறது. இந்த நிலை தமிழகத்துக்கு மட்டுமல்ல; எல்லா மாநிலங்களிலும் உள்ளது.

ஆளுநர் மாளிகையை வைத்து மாநில நிர்வாகத்தை முடக்குகின்றனர். அதனால்தான், தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பிய 19 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் இருக்க ஆளுநரை பாஜக பயன்படுத்துகிறது. மொத்தத்தில், பாஜக ஆட்சியில் மாநில உரிமைகள் நசுக்கப்பட்டுள்ளன.

இவர்கள் செய்வதில் மிகவும் மோசமானது மாநிலங்களின் கல்வி உரிமையில் தலையிட்டு, குழந்தைகளின் எதிர்காலத்துடன் விளையாடுவதுதான். இவற்றில் இருந்து நம்மை பாதுகாக்க இருக்கும் ஒரே கவசம் மாநில சுயாட்சிதான்.

அதனால்தான், அண்ணா, கருணாநிதியைத் தொடர்ந்து நானும் வலியுறுத்தி வருகிறேன். கடந்த 1974-ல்கருணாநிதி ஆட்சியின் போது, மாநில சுயாட்சி தீர்மானம் சட்டப்பேரவையின் இரண்டு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. அந்த தீர்மானத்தை அப்போதைய பிரதமர் இந்திராகாந்தி, இந்த முக்கியமான பிரச்சினை குறித்து அனைத்து மாநில முதல்வர்களுடன் ஆலோசிக்க வேண்டும் என்றார். திமுகவின் கொள்கைகளில் கருணாநிதி தெரிவித்த 5-வது முழக்கம், ‘மத்தியில் கூட்டாட்சி! மாநிலத்தில் சுயாட்சி’. இந்த குரலை அனைவரும் எதிரொலித்தனர்.

இன்று மத்தியில் ஆட்சியின் கடைசி கட்டத்தில் உள்ள பாஜக, ஆர்எஸ்எஸ் விரும்பும் சர்வாதிகாரம் கொண்ட ஆட்சியை உருவாக்க நினைக்கிறது. அதனால்தான் அவர்கள் சட்டப்படி ஆட்சியும் நடத்தவில்லை; மாநிலங்களையும் மதிக்கவில்லை.

இப்படி, மாநிலங்களை செயல்பட விடாத மத்திய அரசு, மாநில அரசின் சம்பளத்தைப் பெற்று மாநில நலனுக்கு எதிராக செயல்படும் ஆளுநர்களை வைத்துக் கொண்டே எண்ணற்ற மக்கள் நலத்திட்டங்களை எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களால் செய்ய முடிகிறது என்றால், கூட்டாட்சி நெறிமுறைகளை மதிக்கும் ஒரு ஆட்சி, மத்தியில் அமைந்தால் எல்லா மாநிலங்களும் மேலும் செழிக்கும்.

மாநில சுயாட்சி கொள்கை வெல்ல, இண்டியா கூட்டணி ஆட்சிக்கு வரவேண்டும். அதற்கு மக்கள் தயாராகவேண்டும். 5 மாநில சட்டப்பேரவை தேர்தல்களில் மக்கள் இதை மனதில் வைத்து வாக்களிக்க வேண்டும். இண்டியா கூட்டணியின் கையில், இந்தியாவை ஒப்படையுங்கள். மாநிலங்களைக் காப்போம்; இந்தியாவைக் காப்போம் என்றார்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x