Published : 31 Oct 2023 08:50 PM
Last Updated : 31 Oct 2023 08:50 PM

பசும்பொன்னில் இபிஎஸ்ஸுக்கு எதிர்ப்பு | “வெறுப்பு இருந்தால் வேறு இடத்தில் காட்டியிருக்கலாம்” - சீமான்

மதுரை: பசும்பொன்னில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கோஷம் எழுந்தது அருவருக்கத்தக்க அநாகரிக செயல் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவரின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தி விட்டு மீண்டும் சென்னை செல்ல நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் மதுரை விமான நிலையம் வந்தடைந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், "சாதிய எண்ணம் கொண்டவர் அரசியலுக்கு வந்தால் நாடு நாசமாகிவிடும். பதவி ஆசை அற்ற ஒரு சித்தர் எனக் கூறப்படும் முத்துராமலிங்கத் தேவரின் நினைவை போற்றப்படும் நாள்தான் அவரது ஜெயந்தி, குருபூஜை விழா. தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க முடியாது என கர்நாடக துணை முதல்வர் கூறுவதில் அரசியல் உள்ளது. அவரவரின் நீர்வளம் அவரவர்களுக்கு என கேரளா, கர்நாடக நினைத்துக் கொண்டால் நமது வளம் நமக்கென்று நாம் எண்ண வேண்டியுள்ளது. பகை நாடுகளாக இருக்கக் கூடிய பாகிஸ்தானுக்கு கூட, சிந்து நதியிலிருந்து 80 சதவீத நீரை கொடுக்கிறோம்.

ஒரு மாநில தேர்தல் வெற்றிக்காக காங்கிரஸும், பாஜகவும் ஒரு தேசிய இனத்தின் உரிமையை பறிகொடுக்கிறது. வடமாநில தொழிலாளர்கள் தமிழக காவலரை தாக்கியது தொடக்கம்தான். 40 லட்சம் வட இந்திய தொழிலாளர்கள் தமிழகத்தில் குடியேறியுள்ளனர். வட கிழக்கு மாநிலங்கள் போல உள் நுழைவு அனுமதி கொடுக்க வேண்டும். விசா போன்ற உள்நுழைவு அனுமதி இருந்தால் குற்றச் செயலில் ஈடுபவர்கள் யார் என கண்டறியலாம். குற்றம்புரிவோர் எந்த மாநிலத்தவர்கள் எனத் தெரிந்தாலும் போதிய விவரமின்றி கைது செய்ய முடியவில்லை. 10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருந்தவர்கள் விடுதலை செய்ய வேண்டும் என்பது தமிழக அரசின் உத்தரவு. இது இஸ்லாமிய சிறை கைதிகளுக்கும், ராஜீவ் கொலை கைதிகளுக்கும் பொருந்தாது எனத் தெரிவித்தது தான் பிரச்சனை. மதத்தின் அடிப்படையில் கைதிகளை பார்க்கக்கூடாது.

நீட் தேர்வு ரத்து செய்ய வெடிகுண்டு வீசினால் நீட் தேர்வு நின்று விடுமா? பசும்பொன்னில் இபிஎஸ்ஸுக்கு எதிராக கோஷம் எழுந்தது அருவருக்கத்தக்க அநாகரிக செயல். அவர் மீது வெறுப்பு இருந்தால் அதை வேறு இடத்தில் காட்டியிருக்க வேண்டும். தேவரின் நினைவிடத்தில் செய்வது அவரையே அவமதிப்பது போன்றது. தேவர் ஆடம்பரமின்றி சன்னியாசி போல வாழ்ந்தவர். முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகைக்கென ஏக்கர் கணக்கில் வாழை மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. இந்த ஆடம்பரம் வருத்தமளிக்கிறது. இனிமேல் தவிர்க்கப்படவேண்டும்.

வாடகை வண்டியில் செல்லக்கூடாது. 144 தடை உத்தரவு என்பது தேவரை அவமதிக்கும் செயல். நாங்கள் காட்டுமிராண்டிகள் அல்ல. 7 ஆயிரம் போலீஸார் குவிக்கப்பட்டதாக கூறுகின்றனர். குற்றச் சம்பவங்களுக்கு மதுபானமே காரணம். எல்லை தாண்டி வருவோர் மீனவர் என்பது அவர்களுக்கு பிரச்சினை அல்ல. தமிழன் என்பது தான் பிரச்சினை. எல்லா விவகாரத்துக்கும் நீதிமன்றத்திற்கு செல்ல வேண்டும் என்றால் நாடாளுமன்றம் எதற்கு என்று கேள்வி கேட்க வேண்டும்" என்று சீமான் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x