Published : 31 Oct 2023 04:58 PM
Last Updated : 31 Oct 2023 04:58 PM

கீழடி, வெம்பக்கோட்டையில் விரைவில் அடுத்தகட்ட அகழாய்வுப் பணிகள்: தங்கம் தென்னரசு தகவல்

ராஜபாளையம்: கீழடி மற்றும் வெம்பக்கோட்டையில் அடுத்தகட்ட அகழாய்வுப் பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளதாக தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.

ராஜபாளையம் ராஜூக்கள் கல்லூரியில் தொல்லியல் துறை சார்பில் மாநில அளவிலான தொல்லியல் மற்றும் வரலாறு குறித்த இரு நாள் கருத்தரங்கம் இன்று தொடங்கியது. மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் வெங்கடேஸ்வரன் வரவேற்றார். 'வைப்பாற்றங்கரையின் வரலாற்றுத் தடம்' என்ற தலைப்பில் வெம்பக்கோட்டை அகழாய்வில் கிடைத்த தங்க ஆபரணங்கள், சுடுமண் பொம்மைகள், செப்பு காசு, வணிக முத்திரை என 2600 வகையான பழங்கால பொருட்களின் கண்காட்சி இடம் பெற்று உள்ளது. கண்காட்சியை தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு திறந்து வைத்தார்.

அப்போது செய்தியாளர்களிடம் அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியது: ''திமுக ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து தமிழ் வளர்ச்சி மற்றும் அகழாய்வு உள்ளிட்ட தமிழர்களின் பாரம்பரியம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் முதல்வர் தனி கவனம் செலுத்தி வருகிறார். கீழடி மற்றும் வெம்பக்கோட்டை அகழாய்வு தளங்களில் அடுத்தகட்ட ஆய்வு பணிகள் விரைவில் தொடங்க உள்ளது. வெம்பக்கோட்டை அகழாய்வில் 4600 பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டு, அதில் 2,600 பொருட்கள் பொதுமக்கள் பார்வைக்கு காட்சிப்படுத்தப்பட்டு உள்ளது. விரைவில் அருங்காட்சியம் அமைக்கப்பட்டு அனைத்து பொருட்களும் காட்சிப்படுத்தப்படும். தமிழ் சமூகத்தின் வரலாறு, பண்பாடு மற்றும் நாகரிகம் குறித்து அடுத்த தலைமுறையினருக்கு கொண்டு செல்ல கருத்தரங்கு பயனுள்ளதாக இருக்கும்'' என்றார்.

எம்எல்ஏ தங்கபாண்டியன், எம்.பி தனுஷ் குமார், நகராட்சி தலைவர் பவித்ரா, சிவகாசி மேயர் சங்கீதா, மாவட்ட சுற்றுலா அலுவலர் உமாதேவி, பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மைய செயலர் சாந்தலிங்கம் உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

மாநில அளவிலான கருத்தரங்கின் முதல் நாளில் 'வைப்பாற்று வெளியில் பளியரும் சதுரகிரியும்' என்ற அமர்வு தஞ்சை தமிழ் பல்கலைக்கழக கடல் சார் அறிவியல் மற்றும் கடல் சார்ந்த தொல்லியல் துறை பேராசிரியர் செல்வகுமார் தலைமையிலும், கல்வெட்டியல் அமர்வு புதுச்சேரி பிரெஞ்சு ஆய்வு நிறுவன முன்னாள் பேராசிரியர் சுப்புராயலு தலைமையிலும், 'தமிழக நாணயவியல்' என்ற அமர்வு தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழக பேராசிரியர் ஆறுமுக சீத்தாராமன் தலைமையிலும், 'மானுடவியல்' என்ற அமர்வு பாரதியார் பல்கலை மொழியியல் துறை பேராசிரியர் மகேஸ்வரன் தலைமையிலும் நடைபெற்றது. இரண்டாம் நாளில் கோயில் சிற்பக்கலை, சுற்றுலாவியல், சுதந்திரப் போராட்ட வரலாறு, நவீன வரலாறு ஆகிய தலைப்புகளில் கருத்தரங்கு நடைபெறுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x