Published : 31 Oct 2023 01:12 PM
Last Updated : 31 Oct 2023 01:12 PM
சென்னை: "தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் கொடுப்பதில், கர்நாடகாவில் இதுவரையில் இருந்த எந்த அரசும் இவ்வளவு முரண்டு பிடித்தது இல்லை. ஏதோ ஒரு எதிரி நாட்டுடன் மோதுவது போல நினைக்கின்றனர். அல்லது, தமிழகம் ஏதோ அவர்களிடம் சலுகை கேட்பது போல கருதுகின்றனர்" என்று தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.
சென்னையில் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று (செவ்வாய்க்கிழமை) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், "காவிரி நீர் விவகாரத்தில், காவிரி ஒழுங்காற்றுக் குழு ஒழுங்காக பணியாற்றவில்லை. காரணம் தமிழகத்தின் சார்பில், நாளொன்றுக்கு 13,000 கனஅடி தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று கேட்டோம். ஆனால், அவர்கள் 2,600 கனஅடி தண்ணீர்தான் திறந்துவிட வேண்டும் என்று கூறியுள்ளனர். இந்த தண்ணீர் போதுமானது அல்ல. இதுதான் எங்களுடைய கோரிக்கை. இந்த நிலையில், வரும் 3 ஆம் தேதி காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் நடைபெறவுள்ளதாகக் கூறப்படுகிறது. அதுவும் இல்லை என்றால், நீதிமன்றத்துக்கு செல்ல வேண்டும்.
1.6.2023 முதல் 26.10.2023 வரை, கர்நாடகம் தமிழகத்துக்கு தரவேண்டிய நீரின் அளவு 140 டிஎம்சி. ஆனால், அவர்கள் வழங்கியது 56.4 டிஎம்சி. ஆகவே, பற்றாக்குறை 83.6 டிஎம்சி. இதுதான் நிலை. குறைபாடு விகிதச்சார நிலையைப் பார்த்தால், 13.03 டிஎம்சி, அதிலும்கூட 3.41 டிஎம்சி நீரைத்தான் கொடுத்துள்ளனர். குறைபாடு விகிதாச்சாரம், நவம்பர் மாதம் கர்நாடகா தமிழகத்துக்கு தரவேண்டிய நீரின் அளவு 16.44 டிஎம்சி. அதுவும் கொடுக்கவில்லை.
தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் கொடுப்பதில், கர்நாடகாவில் இதுவரையில் இருந்த எந்த அரசும் இவ்வளவு முரண்டு பிடித்தது இல்லை. ஏதோ ஒரு எதிரி நாட்டுடன் மோதுவது போல நினைக்கின்றனர். அல்லது, தமிழகம் ஏதோ அவர்களிடம் சலுகை கேட்பது போல கருதுகின்றனர். ஆனால், அது அப்படி அல்ல. இந்த நாட்டின் உச்ச நீதிமன்றம் விதிக்கும் விதிப்படிதான், இந்த நாட்டில் உள்ள மக்கள் அனைவரும் நடந்துகொள்ள வேண்டும். ஆனால், ஒரு மாநில அரசாங்கமே அவ்வாறு நடந்துகொள்ள மாட்டேன் என்று கூறுவது, ஜனநாயகத்துக்கு நல்லது அல்ல. அதேபோல, பிடிமானம் கொடுக்காமல் பேசுகின்றனர்" என்று அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT