Published : 31 Oct 2023 05:00 AM
Last Updated : 31 Oct 2023 05:00 AM
சென்னை: பாஜக நிர்வாகி அமர்பிரசாத் ரெட்டியை குண்டர் தடுப்புச்சட்டத்தில் சிறையில் அடைக்க போலீஸார் திட்டமிட்டுள்ளதாகவும் அதற்கு தடை விதிக்க கோரியும் அவரது மனைவி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
கிழக்கு கடற்கரை சாலை பனையூரில் உள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் இல்லத்தின் முன்பாக வைக்கப்பட்டிருந்த பாஜக கொடி கம்பத்தை போலீஸார் அகற்றினர். அப்போது போலீஸார் மீது தாக்குதல் நடத்தி, ஜேசிபி இயந்திரத்தின் கண்ணாடியை உடைத்ததாக பாஜக மாநில திறன் மேம்பாட்டு பிரிவின் மாநிலத் தலைவரான அமர் பிரசாத் ரெட்டியை கானத்தூர் போலீஸார் கடந்த அக்.21-ல் கைது செய்தனர்.
இந்நிலையில் ஏற்கெனவே பதிவாகி இருந்த 2 வழக்குகளிலும் அமர் பிரசாத் ரெட்டியை கைது செய்துள்ள போலீஸார் அவரை புழல் சிறையில் அடைத்துள்ளனர். இந்நிலையில் தனது கணவர் மீதுபொய் வழக்குகளைப்பதிவு செய்துஅவரை குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் சிறையி்ல் அடைக்க போலீஸார் திட்டமிட்டுள்ளதாகவும், எனவே தனது கணவரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய தடை விதிக்கக்கோரியும் அவருடைய மனைவி நிரோஷா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அதில் கூறியிருப்பதாவது: திமுகவின் செயல்பாடுகளையும், நடவடிக்கைகளையும் பொது வெளியில் விமர்சித்து வருவதால் தனது கணவரை போலீஸார் சட்டவிரோதமாக கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். போலி பாஸ்போர்ட் வழங்க உடந்தையாக செயல்பட்ட விவகாரத்தில் உளவுத்துறை முன்னாள் கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவாசிர்வாதத்துக்கு தொடர்பு இருப்பதாக புகார் தெரிவித்ததால், அந்த முன்விரோதம் காரணமாக தாம்பரம் காவல் ஆணையர் மூலமாக தற்போது பொய் வழக்கு பதிவு செய்து தனது கணவரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்க போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.
ஜேசிபி இயந்திரத்தின் கண்ணாடி உடைக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவத்துக்கும் எனது கணவருக்கும் எந்த தொடர்பும் இல்லை. எனவே எனது கணவரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க தாம்பரம் காவல் ஆணையருக்கு தடை விதிக்கவேண்டும். இவ்வாறு அதில் கோரியுள்ளார். இந்த மனு உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வரவுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT