Published : 31 Oct 2023 05:11 AM
Last Updated : 31 Oct 2023 05:11 AM
தமிழகத்தில் சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் தொழிற்சாலைகள் இயங்குகிறதா என ஆய்வு செய்ய வேண்டும் என்று மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளுக்கு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சி.வீ.மெய்யநாதன் அறிவுறுத்தி உள்ளார்.
தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் மாவட்ட வாரியாக நிலவும் சுற்றுச்சூழல் பிரச்சினைகள் தொடர்பாக மண்டலஇணை தலைமை சுற்றுச்சூழல் பொறியாளர்கள் மற்றும் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர்களுடனான ஆலோசனைக் கூட்டம்,சுற்றுச்சூழல் துறை அமைச்சர்சிவ.வீ. மெய்யநாதன் தலைமையில், சுற்றுச்சூழல் துறை செயலர்சுப்ரியா சாஹூ முன்னிலையில்சென்னை கிண்டியில் உள்ள வாரியஅலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. அப்போது, கேரளாவிலிருந்து சட்ட விரோதமாக திருநெல்வேலி மற்றும் தென்காசி பகுதிகளில் கொட்டப்படும் மருத்துவக் கழிவுகள், அபாயகரக் கழிவுகளை கண்காணிக்க சிசிடிவி கேமராக்கள் பொருத்தி கண்காணிக்க வேண்டும். கேரளத்துக்கு செல்லும் வாகனங்களிலும் ஜிபிஎஸ் டிராக்கிங் சிஸ்டம் பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகத்திலுள்ள சிப்காட், சிட்கோ வளாகங்களை தொடர் ஆய்வு செய்து அவ்வளாகத்தினுள் அமைந்திருக்கும் பெரிய வகை (சிவப்பு) தொழிற்சாலைகள் சுற்றுச்சூழலுக்கு உகந்த புதிய மாற்று தொழில் நுட்பங்களுடன் இயங்குகின்றனவா என்பதை உறுதி செய்ய வேண்டும். தங்கள் மாவட்டங்களில் அமைந்துள்ள கிரானைட் குவாரிகளை தொடர் ஆய்வுசெய்து கண்காணிக்க வேண்டும்.
நகராட்சி பகுதிகளிலிருந்து வெளியேறும் அன்றாட கழிவுநீர் சுத்திகரிக்கப்படாமல் அருகில்உள்ள நீர்நிலைகளை மாசுபடுத்துவதை சுட்டிக்காட்டி அந்நகராட்சிகளில் பாதாள சாக்கடை மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்க அறிவுறுத்த வேண்டும். நகராட்சி திடக்கழிவுகள் குப்பை கிடங்குகளில் எரிக்கப்படுவதை தடுக்க வேண்டும். பயோ மைனிங் மூலம் திடக்கழிவுகளை பிரித்து அறிவியல் முறையில் கையாள தக்க நடவடிக்கைகளை நகராட்சி நிர்வாகம் மேற்கொள்ள அறிவுறுத்த வேண்டும். திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள காய்கறி சந்தையிலிருந்து வெளியேறும் திடக்கழிவுகளை அறிவியல்முறையில் கையாண்டு மின்சாரம் தயாரித்தல் மற்றும் கரிம உரமாகமாற்றுதல் போன்ற நடவடிக்கை களை எடுக்க வேண்டும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...