Published : 31 Oct 2023 08:26 AM
Last Updated : 31 Oct 2023 08:26 AM
சென்னை: தமிழக அரசு மீது அவதூறாக அண்ணாமலை குற்றம்சாட்டி வருகிறார் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
பாஜகவைப் பற்றி முதல்வர் ஸ்டாலின் குறிப்பிடும்போது, ‘மதவாதம் என்பதைத் தவிர, பாஜகவிடம் வேறு கொள்கை இல்லை. சாதனைகளைக் கூறி, வாக்குகளைப் பெற முடியவில்லை, வெறுப்பு அரசியலை வைத்தே வாக்கு பெற நினைக்கிறார்கள். ஆனால், இந்தியா கூட்டணியின் வலிமை என்பது மதநல்லிணக்கம். நாங்கள் அரசியல் சட்டம் வரையறுக்கும் கொள்கைகளை நம்பி நிற்கிறோம்’ என்று கூறினார்.
தமிழக அரசு, தெளிவாக தமது கொள்கைப் பாதையை வகுத்துக் கொண்டு கம்பீரமாக பீடுநடை போட்டு வருவதை அண்ணாமலையால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அவர் பாஜக அரசின் 9 ஆண்டு சாதனைகளைப் பற்றி கூறாமல் தமிழக அரசை அவதூறாக விமர்சிக்கிறார்.
‘2024-ம் ஆண்டுக்குள் 5 டிரில்லியன் டாலர் மதிப்புள்ள பொருளாதார நாடாக இந்தியாவை உயர்த்தி காட்டுவேன்’ என்று பிரதமர் மோடி பலமுறை கூறியிருக்கிறார். இந்நிலையை அடைவதற்கு இந்தியாவின் வளர்ச்சி இரு மடங்காக உயர வேண்டும். ஆனால், கடந்த 9 ஆண்டுகளாக மொத்த உள்நாட்டு உற்பத்தி கடுமையாக சரிந்து வருகிறது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி விலகுகிற போது டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.58.62 ஆக இருந்தது. ஆனால், 75 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இப்போது பாஜக ஆட்சியில் ரூ.82.71 ஆக சரிந்துள்ளது.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி பதவி விலகும்போது நாட்டின் மொத்த கடன் ரூ.55 லட்சம் கோடி. பாஜக ஆட்சியில் ரூ.155.6 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. 9 ஆண்டுகளில் ரூ.100 லட்சம் கோடிக்கும் அதிகமாக மத்திய பாஜக அரசு கடன் வாங்கி, நாட்டை திவாலான நிலைக்குத் தள்ளிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், தமிழக அரசின் கடன் குறித்து அண்ணாமலை பேசுகிறார்.
பாஜக ஆட்சியில் வேலையில்லா திண்டாட்டம் 23 சதவீதம் உயர்ந்திருக்கிறது. தமிழகத்தில் அந்நிய முதலீட்டின் மூலம் தொழில் வளர்ச்சியைப் பெருக்கி வேலைவாய்ப்பு வழங்குவதாக ஆதாரத்தோடு வெளிவருகிற தமிழக அரசின் அறிக்கையை படிக்காமல் அரசியல் காழ்ப்புணர்ச்சியில் கருத்து கூறுவதை அண்ணாமலை நிறுத்திக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...