Published : 31 Oct 2023 06:00 AM
Last Updated : 31 Oct 2023 06:00 AM

20 ஆயிரம் காலியிடங்களை நிரப்பக் கோரி போக்குவரத்து தொழிலாளர்கள் சென்னையில் ஆர்ப்பாட்டம்

போக்குவரத்துத் துறையில், ஒப்பந்த அடிப்படையிலான நியமனங்களைத் தடை செய்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பல்லவன் இல்லம் அருகே போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். படம்: எஸ்.சத்தியசீலன்

சென்னை: போக்குவரத்துக் கழகங்களில்20 ஆயிரம் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, போக்குவரத்துக் கழகங்களில் செயல்படும் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் சென்னை பல்லவன் இல்லம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் 8 தொழிற்சங்கங்களில் இருந்து ஏராளமான போக்குவரத்து தொழிலாளர்கள் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்துக்கு சிஐடியு பொதுச்செயலாளர் கே.ஆறுமுகநயினார் தலைமை தாங்கினார். ஏஐடியுசிபொதுச் செயலாளர் ஆறுமுகம், ஐஎன்டியுசி பொதுச் செயலாளர் ந.க.நாராயணசாமி, எச்எம்எஸ் தலைவர் சுப்ரமணிப்பிள்ளை, டிடிஎஸ்எப் தலைவர் டி.வி.பத்மநாபன், எம்எல்எப் தலைவர் வெங்கடேசன், ஏஏஎல்எல்எப் தலைவர் அர்ஜூனன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டம் குறித்து கே.ஆறுமுகநயினார் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கடந்த 2018-ல் அரசுபோக்குவரத்து கழகங்களில் 22 ஆயிரம் பேருந்து இயங்கி கொண்டிருந்த நிலையில், அப்போதைய அதிமுக ஆட்சியில் பேருந்துகளின்எண்ணிக்கையை குறைக்கும் வகையிலான 8 அரசாணைகள் வெளியிட்டன. இதனால் 1,500-க்கும்மேற்பட்ட பேருந்துகள் குறைக்கப்பட்டன.

இன்றைக்கு தமிழகத்தில்18 ஆயிரம் பேருந்துகள் மட்டுமே இயங்கி கொண்டிருக்கின்றன. அதிலும் ஆள் பற்றாக்குறை காரணமாக தினசரி ஆயிரம் பேருந்துகள் இயங்காத நிலை உள்ளது.

தமிழக அரசு போக்குவரத்து கழகங்களில் தற்போது 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் உள்ளன. இவற்றை அரசு உடனடியாக நிரப்ப வேண்டும். அதேபோலபோக்குவரத்துக் கழகங்களில் அனைத்து பேருந்துகளையும் இயக்கவும், அதிமுக ஆட்சியில் போடப்பட்ட 8 அரசாணைகளையும் ரத்து செய்யவும், ஓய்வுபெற்றபோக்குவரத்து ஊழியர்களுக்கு கடந்த 8 ஆண்டுகளாக வழங்கப்படாத அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும்.

ஒப்பந்த பணியாளர்களை நியமனம் செய்வதையும் ஏற்றுக்கொள்ளமுடியாது. பழைய பென்சன் திட்டத்தையே அமல்படுத்த வேண்டும். மேலும் 15-வது ஊதிய ஒப்பந்தபேச்சுவார்த்தையை உடனே தொடங்க வேண்டும் என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x