Published : 31 Oct 2023 06:20 AM
Last Updated : 31 Oct 2023 06:20 AM

அம்பத்தூர் தொழிற்பேட்டையில் தீ விபத்து: பல கோடி ரூபாய் மதிப்பிலான இயந்திரம், பொருட்கள் சேதம்

தனியார் தொழிற்சாலையின் பிலிம் தயாரிக்கும் பிரிவு மற்றும் சேமிப்பு கிடங்கு வளாகம் முற்றிலும் சேதமடைந்தன.

ஆவடி: சென்னை, அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள தனியார் தொழிற்சாலை ஒன்றில் நேற்று முன்தினம் நள்ளிரவு ஏற்பட்ட தீ விபத்தில், பல கோடி ரூபாய் மதிப்பிலான இயந்திரம் மற்றும் பொருட்கள் தீக்கிரையாகின.

சென்னை, அம்பத்தூர் தொழிற்பேட்டை 2-வது பிரதான சாலையில், சுமார் ஓர் ஏக்கர் பரப்பளவில், பேக்கிங் பொருட்களை உற்பத்தி செய்யும் தனியார் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. 30 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் இந்த தொழிற்சாலையில், அரிசி உள்ளிட்ட உணவுப் பொருட்கள், டிடர்ஜென்ட் உட்பட பல்வேறு பொருட்களை தயாரிக்கும் நிறுவனங்களுக்கு தேவையான பேக்கிங் பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன.

70-க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வரும் இந்த தொழிற்சாலையில், தனியார் நிறுவனங்களின் இலட்சினை மற்றும் பிராண்ட் பெயர்கள் உள்ளிட்டவை அடங்கிய பிலிம் தயாரிக்கும் பிரிவு மற்றும் மூலப் பொருட்கள், உற்பத்திப் பொருட்களை சேமிக்கும் கிடங்கு உள்ள வளாகத்தின் ஒரு பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவு 11:30 மணி அளவில் திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கியது. அத்தீ மளமளவென வளாகத்தின் மற்ற பகுதிகளுக்கும் பரவியது.

இதுகுறித்து தகவலறிந்து, அம்பத்தூர், ஜெ.ஜெ.நகர், மதுரவாயல், கொளத்தூர், செங்குன்றம், மணலி, வண்ணாரப்பேட்டை, வில்லிவாக்கம், திருவல்லிக்கேணி, கிண்டி, அசோக் நகர் உள்ளிட்ட தீயணைப்பு நிலையங்களில் இருந்து, 21 தீயணைப்பு வாகனங்களில் சம்பவ இடம் விரைந்த நூற்றுக்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

பிலிம் தயாரிக்கும் பிரிவில் இருந்த மூலப் பொருட்களான, எத்தீலின் மற்றும் மை உள்ளிட்ட ரசாயன பொருட்கள், பாலிமர்ஸ் என்ற பிளாஸ்டிக் பொருட்களும் சேர்ந்து தீயில் எரிந்ததால், தீயை அணைப்பதில் சிக்கல் ஏற்பட்டது.

தொடர்ந்து, தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை இணை இயக்குநர் பிரியா ரவிச்சந்திரன் சம்பவ இடம் விரைந்து, துரிதமாக தீயை அணைப்பதற்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்கினார். இதையடுத்து, இரு ஸ்கை லிப்ட்கள் மற்றும் 40 சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியத்தின் குடிநீர் லாரிகளில் கொண்டு வந்த நீர் மற்றும் ரசாயன நுரையால் தீயை அணைக்கும் பணி தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டது.

தீயணைப்பு வீரர்களின் 8 மணி நேரத்துக்கும் மேலான போராட்டத்துக்கு பிறகு, நேற்று காலை 8 மணியளவில் தனியார் தொழிற்சாலையில் பற்றிய தீ அணைக்கப்பட்டது.

இருப்பினும், இந்த தீ விபத்தில், பல கோடி ரூபாய் மதிப்பிலான இயந்திரம் மற்றும் மூலப் பொருட்கள், உற்பத்திப் பொருட்கள் தீக்கிரையாகின. பிலிம் தயாரிக்கும் பிரிவு மற்றும் சேமிப்பு கிடங்கு வளாகம் முற்றிலும் சேதமடைந்தன. மேலும், அருகில் உள்ள தொழிற்சாலையின் மேற்கூரை பகுதியும் சேதமடைந்தது. நேற்று முன்தினம் விடுமுறை தினம் என்பதால், ஊழியர்கள் யாரும் பணியில் இல்லை. இதனால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது.

இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீஸார், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x