Published : 30 Oct 2023 07:46 PM
Last Updated : 30 Oct 2023 07:46 PM

‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தை மதுரை மாநகராட்சி கைகழுவி விட்டதா? - கிடப்பில் திட்டங்கள்

மதுரை மாநகராட்சி

மதுரை: மதுரை மாநகராட்சியில் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட பெரியார் பஸ் நிலையம் வணிக வளாகம், மல்டிலெவல் பார்க்கிங், வைகை கரை சாலை போன்ற பல்வேறு திட்டங்கள் இன்னும் நடைமுறைக்கு வராமல் கிடப்பில் போடப்பட்டுள்ளன. மாநகராட்சி அதிகாரிகள் பெரியாறு கூட்டுக் குடிநீர் திட்டம், புதிய சாலைகளை அமைப்பதில் மட்டுமே கவனம் செலுத்துவதால் ‘ஸ்மார்ட் சிட்டி’ கைகழுவி விட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மதுரை மாநகராட்சியில் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டம் ரூ.991 கோடியில் நிறைவேற்றப்பட்டன. பெரியார் பஸ் நிலையம் மற்றும் வணிக வளாகம், மல்டி லெவல் பார்க்கிங், பழசந்தையில் உட்கட்டமைப்பு மற்றும் அடிப்படை வசதிகள், தமுக்கம் மைதானத்தில் மாநாட்டு மையம் கட்டுதல், குன்னத்தூர் சத்திரம், வைகை கரை சாலை, மீனாட்சியம்மன் கோயில் சுற்றி பாதாளசாக்கடை மற்றும் மழைநீர் வடிகால் வசதியுடன் திறந்த வெளி மின்கம்பங்கள், மின்வயர்கள் இல்லாத ஸ்மார்ட் சாலைகள் போன்ற 16 வகையான திட்டங்கள், ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தில் மேற்கொள்ளப்பட்டன.

இந்தத் திட்டம் நிறைவுபெற்றால் மதுரை மாநகரம் புதுப்பொலிவு பெறும், போக்குவரத்து நெரிசல் ஏற்படாது என மிகைப்படுத்தப்பட்டது. ஆனால், ஸ்மார்ட் சிட்டி திட்டம் தொடங்கி 4 ஆண்டாகியும் இன்னும் மதுரை நகர் எந்த வகையிலும் புதுப்பொலிவுப்பெறவில்லை. 8 வகையான திட்டங்கள் இன்னும் செயல்பாட்டுக்கே வராமல் உள்ளன. மாநகராட்சி அதிகாரிகள் பெரியாறு கூட்டுக்குடிநீர் திட்டம், நகர்பகுதி பாதாளசாக்கடை திட்டம் மற்றும் புதிய சாலைகளை அமைக்கும் பணியில் கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டனர். அதனால், ஸ்மார்ட் சிட்டி திட்டங்களை நடைமுறைக்கு கொண்டு வர அவர்கள் அக்கறை காட்டவில்லை. மேலும், இந்த ஸ்மார்ட் சிட்டி திட்டம் முழுவதும் கடந்த அதிமுக ஆட்சியில் வடிவமைக்கப்பட்டதால் இந்த திட்டங்களில் திமுக அரசும் கவனம் செலுத்தவில்லை.

இந்நிலையில் மதுரை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் குன்னத்தூர் சத்திரம் திட்டம், பெரியாறு பஸ்நிலையம் வணிக வளாகம் மற்றும் மல்டிலெவல் பார்க்கிங், மீனாட்சிம்மன் கோயில் மல்டி லெவல் பார்க்கிங், மீனாட்சியம்மன் கோயிலை சுற்றியுள்ள ஸ்மார்ட் சாலைகள், வைகை கரை சாலைகள் போன்றவை இன்னும் முடிக்காமல் உள்ளன. இதில், மீனாட்சியம்மன் கோயிலை சுற்றியுள்ள சாலைகள், மழைநீர் மற்றம் பாதாளசாக்கடை கால்வாய்களுடன் திறந்த வெளி மின்வயர், மின்கம்பங்கள் இல்லாத ஸ்மார்ட் சாலைகள் அமைக்கப்படும் எனக்கூறப்பட்டது. தற்போது வரை மின்வயர்கள், தொலைதொடர்பு வயர்கள் சாலைக்கு நடுவே அங்கும், இங்குமாக தொங்கி கொண்டிருக்கின்றன. மழைகாலங்களில் வழக்கம்போல் மீனாட்சியம்மன் சாலைகள் வெள்ளத்தில் மூழ்கின்றன.

ஸ்மார்ட் சாலைகள் எனக்கூறிவிட்டு ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் சாதாரண சாலைகளாக போடப்பட்டுள்ளன. பெரியார் பஸ்நிலையம் வணிக வளாகம் கட்டி முடித்து 6 மாதமாகிவிட்டன. தற்போது வரை இந்த வணிக வளாகத்தை திறக்க மாநகராட்சி நடவடிக்கை எடுக்கவில்லை. அதனால், மாதம் பல கோடி ரூபாய் மாநகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. பெரியார் பஸ்நிலையம் பகுதியில் பொதுமக்கள், பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் வாகனங்களை நிறுத்த முடியாமல் சிரமப்படுகிறார்கள்.

ஆனால், கட்டி முடித்து மல்டிலெவல் பார்க்கிங்கை திறக்காமல் உள்ளனர். பாரம்பரிய தமுக்கம் மைதானத்தை சிதைத்து, அங்கு ரூ.48 கோடியில் மாநாட்டு மையம் கட்டினர்.ஆனால், இந்த மாநாட்டு மையத்தில் திருமணம் நிகழ்ச்சிகள், தனியார் நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு தேவையான சமையல் கூடம், அமர்ந்து சாப்பிடக்கூடிய இடம் போன்றவை முறையாக இல்லை. அதனால், சாதாரண கண்காட்சிகள் மட்டுமே நடக்கின்றன.

இந்த மாநாட்டு மையம் கட்டுமானப்பணி தரமாக நடக்கவில்லை என்று கடந்த அதிமுக ஆட்சியில் குற்றம்சாட்டிய தற்போதைய திமுக எம்எல்ஏ-க்கள், அமைச்சர்கள், ஸ்மார்ட் சிட்டி திட்டங்களை பற்றியும், அதனை விரைவாக முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வரவும் நடவிக்கை எடுக்வகில்லை. அதுபோல், வைகை கரை சாலைகள் முழுமையாக அமைக்கப்படாமல் ஆங்காங்கே துண்டு துண்டாக நிற்கின்றன.

அதனால், இந்த சாலை மதுரை மாநகர போக்குவரத்து நெரிசலை குறைக்க எந்த வகையிலும் உதவவில்லை. மக்களும், வாகன ஓட்டிகள் இந்த சாலையை பயன்படுத்துவதில்லை. வாகனப்பார்க்கிங்காகவும், தனியார் குடோன்களாகவும் இந்த சாலையில் ஆக்கிரமிப்புகள் அதிகமாகிவருகின்றனர். மொத்தத்தில் மதுரை ஸ்மார்ட் சிட்டி திட்டம் முழுமையாக முடிக்காமலும், முடிந்த திட்டங்களை செயல்பாட்டிற்கு கொண்டு வராமலும், இந்த திட்டத்திற்கு ஒதுக்கிய நிதியை மக்கள் பிரதிநிதிகளும், மாநகராட்சி அதிகாரிகளும் வீண்டித்துள்ளனர். இந்த திட்டத்தில் கட்டிய கட்டிடஙகளையாவது செயல்பாட்டிற்கு கொண்டு வர பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x