Published : 30 Oct 2023 05:06 PM
Last Updated : 30 Oct 2023 05:06 PM
புதுச்சேரி: புதுச்சேரி ஆளுநர் மாளிகை அமைந்துள்ள சாலையில் மக்கள் செல்வதற்கு தடையாக வைக்கப்பட்டிருந்த தடுப்புகள் இன்று திடீரென்று அகற்றப்பட்டன. இதை அறிந்த பலரும் பல ஆண்டுகளுக்கு பிறகு அச்சாலையில் பயணித்தனர்.
கடந்த காங்கிரஸ் - திமுக கூட்டணி அரசின்போது, பாஜகவினரை நியமன எம்எல்ஏக்களாக அப்போதைய துணைநிலை ஆளுநர் கிரண்பேடி நியமித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து முழு அடைப்பு போராட்டம் கடந்த 2017 ஜூலையில் நடந்தது. அப்போது காங்கிரஸார் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு அப்போதைய ஆளுநர் கிரண்பேடி உருவபொம்மை எரித்தனர். இதைத்தொடர்ந்து முற்றிலும் ராஜ்நிவாஸ் முன் உள்ள சாலை தடுப்புகள் வைத்து மூடப்பட்டது. யாரும் அவ்வழியாக செல்ல அனுமதிக்கப்படவில்லை.
இந்நிலையில், கோப்புகளுக்கு ஒப்புதல் தராமல் மத்திய அரசுக்கு அனுப்புவதை எதிர்த்து ராஜ்நிவாஸ் எதிரே கருப்பு சட்டை அணிந்து அப்போதைய முதல்வர் நாராயணசாமி தர்ணா போராட்டம் நடத்தினார். அதையடுத்து அச்சாலை 2018 பிப்ரவரி 13ல் முழுவதும் முழுமையாக மூடப்பட்டது. ஒருக்கட்டத்தில் மோதல் பெரிதாகி புதுச்சேரியில் நகரப்பகுதிகள் முழுக்க எங்கும் செல்ல முடியாதப்படி தடுப்புகள் அமைக்கப்பட்டன. இச்சூழலில் கிரண்பேடி நீக்கப்பட்டு, பொறுப்பு துணைநிலை ஆளுநராக தமிழிசை நியமிக்கப்பட்டார். அவர் பொறுப்பேற்றவுடன் தடுப்புக்கட்டைகள் நகரப்பகுதியில் அகற்றப்பட்டன. ஆனால், ராஜ்நிவாஸ் செல்லும் சாலையில் இரும்பு தடுப்புகள் நீடித்தன.
இந்நிலையில், தமிழக ஆளுநர் முன்பு பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் தொடர்பாக துணைநிலை ஆளுநர் தமிழிசை கருத்தை திமுக எதிர்க்கட்சித் தலைவர் சிவா கடுமையாக விமர்சித்தார். அவர் கடந்த 28-ம் தேதி கூறுகையில், "தமிழகத்தில் ஆளுநர் மாளிகை முன்பு நடந்த சம்பவம் தொடர்பாக காவல் துறை விளக்கம் தந்துள்ளது. புதுச்சேரி ஆளுநர் மாளிகை வழியாக மக்கள் செல்லும் சாலை தடுப்புகளால் அடைக்கப்பட்டுள்ளது. ஆளுநர் ஊரில் இல்லாதபோதும் சாலையை மூடி வைத்துள்ளனர். பாரதி பூங்காவுக்கு அவ்வழியாக செல்ல மறுக்கப்பட்டு பூட்டி வைக்கப்பட்டுள்ளது. தடுப்புகளை அகற்றி மக்களின் பயன்பாட்டுக்கு முதலில் தமிழிசை திறக்க வேண்டும்" என்று குறிப்பிட்டிருந்தார்.
இதன் தொடர்ச்சியாக, இன்று மதியம் ஆளுநர் மாளிகையான ராஜ்நிவாஸ் முன்புள்ள சாலை முன்பிருந்த தடுப்புகளை அகற்றினர். பல ஆண்டுகளுக்கு பிறகு சாலை திறக்கப்பட்டதால் பலரும் அவ்வழியே சென்றனர். சாலையின் இருமுனைகளிலும் இருந்த போலீஸார் ராஜ்நிவாஸ் வாயிலில் வந்து அமர்ந்திருந்தனர். ''மேலிட உத்தரவுப்படி தடுப்புகள் அகற்றப்பட்டது'' என்று தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT