Published : 30 Oct 2023 03:37 PM
Last Updated : 30 Oct 2023 03:37 PM
சென்னை: பாஜக கொடிக் கம்பம் அகற்றப்பட்ட விவகாரத்தில், அக்கட்சி நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி உள்ளிட்ட நான்கு பேரையும் ஒருநாள் போலீஸ் காவலில் விசாரிக்க ஆலந்தூர் மாஜிஸ்திரேட் சந்திரபிரபா உத்தரவிட்டார்.
இந்த வழக்கு ஆலந்தூர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அமர் பிரசாத் ரெட்டி உள்ளிட்டோரை ஐந்து நாட்கள் விசாரிக்க அனுமதியளிக்க வேண்டும் என தமிழக காவல் துறை தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பாஜக தரப்பு வழக்கறிஞர், அமர் பிரசாத் ரெட்டி உள்ளிட்டோர் மீது பொய் வழக்கு தொடரப்பட்டுள்ளது என வாதிட்டார். இரு தரப்பு வாதங்களுக்குப் பின், அமர் பிரசாத் ரெட்டி உள்ளிட்டோரை ஒருநாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க தமிழக காவல் துறைக்கு அனுமதியளித்து ஆலந்தூர் மாஜிஸ்திரேட் சந்திரபிரபா உத்தரவிட்டார்.
முன்னதாக, அமர் பிரசாத் ரெட்டிக்கு மூச்சு திணறல் பிரச்சினையும், ரத்த கொதிப்பும் இருப்பதால் அவருக்கு சரியான நேரத்தில் மாத்திரைகளும், உடைகள் மாற்ற அனுமதியும் வழங்க போலீஸாருக்கு உத்தரவிட வேண்டும் என நீதிமன்றத்தில் கோரிக்கை வைக்கப்பட்டது. கோரிக்கையை ஏற்று, அதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
பின்னணி: சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பனையூரில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வீட்டின் முன்பு கட்சியின் கொடிக் கம்பம் நிறுவப்பட்டது. அனுமதியின்றி கொடிக் கம்பம் வைக்கப்பட்டதாக புகார் எழுந்ததைத் தொடர்ந்து, சில தினங்களுக்கு முன்பு காவல் துறையினரும் மாநகராட்சி ஊழியர்களும் சென்று அந்த கொடிக் கம்பத்தை அகற்ற நடவடிக்கை மேற்கொண்டனர். அதற்கு பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
6 பேர் கைது: கொடிக் கம்பத்தை அகற்றுவதற்காக கொண்டு வரப்பட்ட ஜேசிபி வாகனத்தை சிலர் சேதப்படுத்தினர். இது தொடர்பாக கானாத்தூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து, பாஜக மாநில நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி உள்ளிட்ட 6 பேரை கைது செய்தனர். பின்னர், அனைவரும் நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
செஸ் விளம்பரம்: தொடர்ந்து, அமர் பிரசாத் ரெட்டியை மேலும் இரண்டு வழக்குகளில் போலீஸார் கைது செய்தனர். செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவின்போது வைக்கப்பட்டிருந்த விளம்பரத்தில், முதல்வர் மு.க.ஸ்டாலின் படத்தின் மீது பிரதமர் மோடியின் படத்தை ஒட்டியதாக அமர் பிரசாத் ரெட்டி மீது புகார் எழுந்திருந்தது. அந்தப் புகாரின் பேரில் சிறையில் உள்ள அமர் பிரசாத் ரெட்டியை கோட்டூர்புரம் போலீஸார் கைது செய்தனர். அதேபோல, வள்ளுவர் கோட்டம் முன்பு பாஜக நடத்திய போராட்டத்தின்போது போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளரிடம் தகராறு செய்ததாக பதியப்பட்ட வழக்கில் நுங்கம்பாக்கம் போலீஸாரும் அமர் பிரசாத் ரெட்டியை கைது செய்தனர். இதுகுறித்த தகவல் புழல் சிறை நிர்வாகத்திடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT