Last Updated : 30 Oct, 2023 03:29 PM

1  

Published : 30 Oct 2023 03:29 PM
Last Updated : 30 Oct 2023 03:29 PM

மதுரையில் பழ.நெடுமாறனை முதல்வர் ஸ்டாலின் சந்தித்து உடல் நலம் விசாரிப்பு

பழ.நெடுமாறனிடம் நலம் விசாரித்த முதல்வர் ஸ்டாலின்.

மதுரை: மதுரையில் உடல் நலக்குறைவால் வீட்டில் ஒய்வில் இருக்கும் பழ.நெடுமாறனை முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்து நலம் விசாரித்தார்.

உலக தமிழர் பேரியக்க தலைவர் பழ.நெடுமாறன், உடல் நலக்குறைவு காரணமாக மதுரை பேங்க் காலனியில் உள்ள தனது வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, நெடுமாறனை அவரது வீட்டில் சந்தித்து உடல் நலம் குறித்து விசாரித்தார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தேவர் ஜெயந்தி நிகழ்வில் பங்கேற்பதற்காக மதுரை வந்திருந்தார். அவர் இன்று கோரிப்பாளையம் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து விட்டு பசும்பொன் சென்றார். அங்கு முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் பசும்பொன்னில் இருந்து மதுரை விமான நிலையம் சென்று சென்னை செல்வதாக பயண திட்டம் தயாரிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், பசும்பொன் நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு அங்கிருந்து புறப்பட்ட மு.க.ஸ்டாலின் மதுரை விமான நிலையம் செல்லாமல் மதுரை பேங்க் காலனி சென்று பழ.நெடுமாறனை சந்தித்து உடல் நலம் விசாரித்தார். அவருடன் அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன், தங்கம் தென்னரசு, அன்பில் மகேஸ், மூர்த்தி, பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், ராஜகண்ணப்பன் ஆகியோரும் நலம் விசாரித்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பழ.நெடுமாறன் கூறும்போது, “தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடுமையான பணிச் சுமைகளின் இடையே உடல் நலம் குன்றி இருக்கும் என்னை நேரில் சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்தது என் உள்ளத்தில் நெழ்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது. 2002-ம் ஆண்டு நான் பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு கடலூர் சிறையில் இருந்தபோது வேறொரு வழக்கில் கைது செய்யப்பட்ட மு.க.ஸ்டாலின் அதே சிறையில் அடைக்கப்பட்டார்.

கடலூர் சிறையில் ஒரே பிளாக்கில் நானும் ஸ்டாலினும் 15 நாட்கள் இருந்தோம். அப்போது மு.க.ஸ்டாலினுடன் நெருங்கி உறவாடி இருக்கிறேன். மு.க.ஸ்டாலின் அரசியலுக்கு அப்பாற்பட்டு பல்வேறு கட்டங்களில் என் மீது அன்பும், மதிப்பும் காட்டி இருக்கிறார். இந்தச் சூழலில் மு.க.ஸ்டாலினும், அமைச்சர்களும் என்னை நேரில் சந்தித்தது ஆறுதல் கூறியது என்றும் மறக்க முடியாதவை. மு.க.ஸ்டாலினுக்கு என் நன்றியைத் தெரிவித்து கொள்கிறேன்” என்று கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x